கரூரில் சிபிஐ டிஐஜி அதுல்குமார் தாகூர் நேரில் ஆய்வு
கரூர், டிச.1- கரூரில் தவெக சார்பில், பிரச்சார கூட்டம் நடைபெற்ற இடமான வேலுச்சாமிபுரத்தில், சிபிஐ டிஐஜி அதுல் குமார் தாகூர் திங்கட்கிழமையன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கரூர் வேலுச்சாமி புரத்தில் கடந்த செப்.27 ஆம் தேதி தவெக பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கு தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்பேரில் ஐ.ஜி. அஸ்ராகார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினர்(எஸ்ஐடி) விசா ரணை நடத்தி வந்த நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழுவினரின் விசாரணைக்கு உச்சநீதி மன்றம் தடை விதித்து, ஓய்வுபெற்ற நீதிபதி அஜய்ரஸ்தோக்கி தலைமையில் ஐபிஎஸ் அதி காரிகளான சோனல்மிஸ்ரா, சுமித்சரண் மேற்பார்வையில், குஜராத் மாநிலத்தின் ஐபிஎஸ் அதிகாரி பிரவீன்குமார், கூடுதல் காவல் கண்கா ணிப்பாளர் முகேஷ்குமார் உள்ளிட்டோர் அடங்கிய சிபிஐ விசாரணை குழுவை நியமித்தது. இந்த குழுவினரில் ஐபிஎஸ் அதிகாரி பிரவீன்குமார் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள், கரூர் பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் தங்கி தினந்தோறும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சிபிஐ டிஐஜி அதுல்குமார் தாகூர் திங்கட்கிழமை கரூரில் சிபிஐ அதிகாரிகள் தங்கியிருக்கும் பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகைக்கு வந்தார். பின்னர், அங்குள்ள சிபிஐ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியபின், வேலுச்சாமிபுரத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது டிஐஜி அதுல்குமார்தாகூரிடம், சம்பவம் நடைபெற்றபோது, விஜய் வாகனத்தின் சிசிடிவி கேமராவில் இருந்து பெறப்பட்ட வீடியோக்களின் பதிவுகள் குறித்து பிரவீன்குமார் விளக்கம் அளித்தார். மேலும் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியில் உயிரிழப்புகள் நிகழ்ந்த இடம், தவெக தலைவர் நடிகர் விஜய் உரையாற்றிய வாகனம் நின்ற இடம், கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது பொதுமக்கள் சிதறி ஓடிய இடம் ஆகியவற்றை காண்பித்து விசாரணை குறித்தும் விளக்கினார்.
