நோய் தொற்று ஏற்படும் அபாயம் வெள்ள நீரை விரைந்து வெளியேற்ற சிபிஎம் தலைவர்கள் வலியுறுத்தல்
மயிலாடுதுறை, டிச.1- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், டி.மணல்மேடு கிராமத்தில் தொடர் கனமழையால் தேங்கி நிற்கும், வெள்ள நீரை விரைந்து வெளியேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். முறையான வடிகால் வசதி இல்லாததால், டி மணல்மேடு கிராமத்தில் மழைநீர் குடியிருப்புகளை சூழந்து தேங்கி கிடக்கிறது. இதனைப் பார்வையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் தேங்கி நிற்கும் வெள்ளநீரை உடனடியாக வடிய வைக்கவில்லையெனில் கொசு தொல்லை அதிகமாகி தொற்றுநோய் ஏற்படும். எனவே மக்களை பாதுகாக்க நோய் தொற்று ஏற்படும் முன்பாக மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி. சீனிவாசன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி. சிங்காரவேலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். துரைராஜ், ஒன்றியச் செயலாளர் ஏ. ரவிச்சந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.ஆர். விஜய், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எம். ஐயப்பன் ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டனர்.
