tamilnadu

img

பட்டா இல்லாமல் நூறு ஆண்டுகள் நான்கு தலைமுறைகளின் சோக வரலாறு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரின் தெப்பக்குளம் மேல்கரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆறு பிரகாஷ், நகர செயலாளர் ஜி. தாயுமானவன் ஆகியோர் கலந்து கொண்ட இந்த சந்திப்பில், அப்பகுதி மக்களின் நூறாண்டு கால சோக வரலாறு வெளிச்சத்துக்கு வந்தது. நான்கு தலைமுறைகளின் வாழ்வியல் இரண்டாம் வார்டு அம்பலக்கார தெருவில் வசிக்கும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் டி. ஜெகதீசன் மற்றும் பி. செந்தில்குமார் விவரிக்கையில், சர்வே எண் 97 முதல் 120 வரையிலான பகுதியில் 30 குடும்பங்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருவதாகக் கூறினர். ஓட்டு வீடு, குடிசை வீடு மற்றும் சில மாடி வீடுகளில் வாழும் இந்த மக்கள், நான்கு தலைமுறைகளாக கூலி வேலை மற்றும் முறைசாரா தொழில்களில் ஈடுபட்டு வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்பகுதியில் விவசாய நிலங்கள் இருந்தன. அவற்றில் கூலித் தொழிலாளர்களாக பணிபுரிந்த இம்மக்கள், இன்று அந்த நிலங்கள் மனைகளாக மாறியபின்னும் அதே இடத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

அரசு வசதிகளும் பட்டா மறுப்பும்

இக்குடியிருப்புகளுக்கு ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, தெரு விளக்கு, சாலை வசதி என அனைத்தும் நகராட்சியால் வழங்கப்பட்டுள்ளன. 50 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு வரி ரசீதும் வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் குடிசைகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு, பத்தாண்டுகளுக்கு முன் மீண்டும் வரி விதிக்கப்பட்டது. வரலாற்று முக்கியத்துவம் 1950 ஆம் ஆண்டு மத்தியில், அப்போதைய மாவட்ட ஆட்சியர் கே. சங்கர வடிவேல் காலத்தில், இந்தப் பகுதி முழுவதும் ‘இனாம் புஞ்சை’ அல்லது ‘புஞ்சை தரிசு புறம்போக்கு’ என செட்டில்மென்ட் ரிஜிஸ்டரில் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இன்று அதே நிலம் தனியார் சொத்தாக மாறியிருப்பது பெரும் சர்ச்சைக்குரியதாக உள்ளது.

தொடரும் போராட்டங்கள்

2023-ல் இரு முறை சென்னை சென்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை சந்தித்து மனு அளித்தனர். கீவலூர் எம்.எல்.ஏ. நாகை மாலி உதவியுடன் நடந்த இச்சந்திப்பில், நீதிமன்றத்தை நாடுமாறு அமைச்சர் அறிவுறுத்தினார். இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சமூக நீதிக்கான குரல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் பேசுகையில், நீதிபதி வி.ஆர். கிருஷ்ண ஐயரின் புகழ்பெற்ற வார்த்தைகளை மேற்கோள் காட்டினார்: “சட்டம் ஒரு கொடுங்கோலனாக அல்ல, ஒரு வேலைக்காரனாக இருக்க வேண்டும். அநீதியால் அவதிப்படும் ஏழைகள் சட்ட நோயாளிகளாக உள்ளனர். சட்டம் நீதிக்கு உதவியாக இருக்க வேண்டுமே தவிர தடையாக அல்ல.” நூறாண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் வாழும் மக்களின் உரிமையை மறுப்பது சமூக நீதிக்கு எதிரானது என்பதை வலியுறுத்திய அவர், நீதிமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து போராடுவோம் என உறுதியளித்தார். தமிழகம் முழுவதும் கவனம் பெறும் வகையில் இந்த வாழ்வாதாரப் போராட்டம் வளர்ந்து வருகிறது. இவ்வாறாக, பட்டா இல்லாமல் நூறாண்டுகள் வாழும் மக்களின் போராட்டம், அவர்களது அடிப்படை உரிமைக்கான நீதிப் போராட்டமாக மாறியுள்ளது. சமூக நீதியை நிலைநாட்டும் முக்கிய திருப்புமுனையாக இப்போராட்டம் அமையும் என்பது உறுதி.  - நீடா சுப்பையா