tamilnadu

என்டிபிஎல் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்கிறது

என்டிபிஎல் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்கிறது

தூத்துக்குடி, மே 11- தூத்துக்குடி தெர்மல் நகரில் ஒன்றிய  அரசின்கீழ் செயல்படும் இந்த அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியர்களுக்கு, நெய்வேலி என்எல்சியில் வழங்குவது போன்று ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் தொழிலாளர் களுக்கு சாதகமான தீர்ப்பு வந்தது. ஆனால், என்டிபிஎல் நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது. இதைக்  கண்டித்தும், ஊதிய உயர்வு கோரியும் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி முதல் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திலும், அனல் மின்நிலையம் முன்பு குடும்பத்துடன் தர்ணாவிலும் ஈடுபட்டுள்ளனர்.  போராட்டத்தால் அனல்மின் நிலையத்தில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டம் தொடர்பாக நிர்வாகத்தின் மேலாண்மை நிர்வாக இயக்குநர் வாஞ்சி நாதன், தலைமைப் பொது மேலாளர் பங்கஜ்குமார், தலைமை செயல் இயக்குநர் அனந்தராமானுஜம், தொழிற்சங்கம் சார்பில் சிஐடியு மின்ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர்  எஸ்.ராஜேந்திரன், மாநிலச் செயலாளர் ஆர். ரசல்,  என்டிபிஎல் அனல் மின் நிலையச் செயலர் எஸ். அப்பாத்துரை உள்ளிட்ட நிர்வாகிகளுடன் சனிக்கிழமையன்று நடைபெற்ற 8ஆம் கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வியடைந்தது. இப்போராட்டம் ஞாயிறன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.