tamilnadu

img

அறிவியல் கதிர் - ரமணன்

நோபல் பரிசும்  புறக்கணிக்கப்படும் பெண்களும் 

இந்த ஆண்டு உடலியல்/மருத்துவத்திற்கான நோபல் பரிசு விக்டர் அம்ப்ரோஸ், கேரி ருவ்கன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. மரபணுக்கள் வெளிப்படுத்துதலை கட்டுப்படுத்தும் மைக்ரோ ஆர்என்ஏ(miRNA) க்கள் குறித்த ஆய்விற்காக கொடுக்கப்பட்டுள்ளது. எல்லா செல்களிலும் ஒரேவிதமான மரபணுக்களே இருந்தபோதிலும் குறிப்பிட்ட ஜீன்களே வெளிப்படும்விதமாக அவை இயக்கப்படுகின்றன. எனவே இரத்தம், நரம்பு,எலும்பு என வெவ்வேறுவிதமான தசைகள் உருவாக்கப்படுகின்றன. ஏற்கனவே நடத்தப்பட்ட ஆய்வுகளில் டிஎன்ஏக்கள் மரபணுக் குறியீடுகளை மெசஞ்சர் ஆர்என்ஏக்களாக மாற்றி இறுதியில் புரதங்களாக மாறுகின்றன என்று காட்டப்பட்டது.  மெசஞ்சர் ஆர்என்ஏக்களில் ஒரு சிறிய பகுதி புரதங்கள் உண்டாவதில் தலையிட்டு மரபணு மாற்றங்கள் உண்டாகின்றன என்பதே இவர்களின் ஆய்வு. இந்த சிறிய பகுதிகளுக்கு மைக்ரோ ஆர்என்ஏ எனப் பெயரிட்டனர். இந்த இரு விஞ்ஞானிகளும் தனித்தனியாக ஆய்வுகள் செய்தபின் கூடி விவாதித்து தங்கள் கண்டுபிடிப்புகளை பகிர்ந்துகொண்டனர். இந்த முறையானது இலாப நோக்கில்லாத திறந்த முறை அறிவியல் எனப்படுகிறது.   மைக்ரோ ஆர்என்ஏக்கள் விலங்குகள், தாவரங்கள், கிருமிகள் போன்ற எல்லா உயிர்பரப்பிலும் காணப்படுகின்றன. தாவரங்களில் அவை வளர்ச்சியை கட்டுப்படுத்துவதிலும் சுற்றுச் சூழல் அழுத்தத்திற்கு எதிர்வினையாற்றுவதிலும் பங்களிக்கின்றன. சில நுண்கிருமிகளில் ஓம்பிகளின்(host) நோய் எதிர்ப்பு மண்டலத்திலிருந்து தப்பிப்பதில் பங்காற்றுகின்றனவாம். எதிர்காலத்தில் இவை புற்றுநோய், இதய நோய், நரம்பு சிதைவு கோளாறு ஆகியவற்றில் பயன்படலாம்.  இவை இரத்தம், சிறுநீர் போன்ற  திரவங்களில் நிலைத்து இருப்பதால் அவற்றைக் கொண்டு சில நோய்களை கண்டுபிடிக்கலாம்.   இந்த கண்டுபிடிப்பிற்கான நோபல் பரிசு அளிப்பதில் சில முக்கிய விஞ்ஞானிகளின் பெயர்கள் விடுபட்டிருப்பதாக வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற வெங்கி ராமகிருஷ்ணன் கூறுகிறார். தாவரங்களில் இதன் செயல்பாட்டை முதன்முதலில் அறிவித்த டேவிட் பால்கோம்ப், பரிசில் சுட்டிக்காட்டியுள்ள ஆய்வுக் கட்டுரையின் முதன்மை ஆசிரியரும் அம்புரோசின் துணைவியாருமான அமி பாஸ்குயினெல்லி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த துறையில் முக்கிய ஆய்வுகளை நடத்தியுள்ள பெண் அறிஞர்கள் ரோசலிண்ட் ஃப்ராங்க்லின், லூயிஸ் சவ், சாரா லவி ஆகியோரும் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள் என்கிறார் எஸ்.கிருஷ்ணசாமி (பீப்பிள்ஸ் டெமாக்ரசி அக்டோபர் 14-20)                 

உண்பதைக் கட்டுப்படுத்தும்  நரம்பு இணைப்புகள் 

மூளையிலுள்ள வென்ட்ரோமீடியல் ஹைப்போ தலாமஸ் எனும் பகுதி சேதமடைந்தால் உடல் பருமன் உண்டாவது ஏற்கனவே அறியப்பட்ட ஒன்று. அதோடு ஒரு குறிப்பிட்ட புரதத்தின் வெளிப்பாடு தடுக்கப்படுவது, வளர்சிதை மாற்றம், அதிக அளவு உண்பது மற்றும் உடல் பருமன் ஆகியவற்றோடு இந்த பகுதி  தொடர்பு கொண்டது என்பதும் ஆய்வுகளில் காட்டப்பட்டது. எனவே மூளையின் இந்தப் பகுதியிலுள்ள நரம்பு இணைப்புகளை ஆய்வு செய்தனர் ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நரபியல் விஞ்ஞானி கிரிஸ்டியன் கோஸ் குழுவினர். ஆப்டோ ஜெனிடிக்ஸ் எனும் முறையில் எலிகளின் குறிப்பிட்ட நரம்பு இணைப்புகளை தூண்டியபோது அவை உணவில் நாட்டத்தை இழந்தன. வயிறு நிரம்பியிருந்தாலும் அல்லது பசித்திருந்தாலும் அவை இதே நிலையில் இருந்தன. சாக்லெட் கேக் போன்ற இனிப்பான பண்டங்களை கொடுத்தபோதும் அவை அவற்றை புறக்கணித்தன.   இதற்கு நேர் மாறாக அந்த நரம்பு இணைப்புகளை தடுத்தபோது அவற்றின் தாடை அசைவுகளும் பற்களை அரைப்பதும் வெகுவாக அதிகரித்தன.  உணவுப் பொருள் அல்லாதவற்றையும் அவை கடித்தன. அந்த நேரத்தில் உணவு கிடைத்தால் சாதாரணமாக உண்பதைவிட 1200% அதிகம் உண்டன.  இது இதற்கு முன் தெரிந்த ஆய்வு முடிவுகளை ஒத்திருக்கிறது. அதாவது இந்த நரம்பு இணைப்புகள் பசி போன்ற சமிக்கைகள் இல்லாதபோது பசி உணர்வை தணிக்கிறது. ஆகவே மூளையில் ஏற்படும் சேதம் இந்த நரம்பு இணைப்பை பாதிப்பதாலேயே உடல் பருமன் ஏற்படுகிறது என்பது உறுதியாகியுள்ளது. ஆனால் ஆச்சரியமான விசயம் என்னவென்றால் இந்த நரம்பு இணைப்பு மிகவும் எளிய ஒன்றாக இருப்பதுதான். உண்பது என்பது மிகவும் சிக்கலான ஒன்றாக கருதப்பட்டது. ஆனால் இருமல் போன்ற அனிச்சை செயல்களை ஒத்திருக்கிறதாம். இந்த ஆய்வு ‘நேச்சர்’ இதழில் வந்துள்ளது. 

மாதவிடாய் சிக்கல்களில் ஹார்மோன்கள் -  மூளை மாற்றங்கள் 

உலகின் பாதி தொகையாய் இருக்கும் பெண்களுக்கு அவர்களின் வாழ்நாளின் பாதி காலங்களில் ஏற்படும் மாதவிடாய் குறித்து அதிகம் ஆய்வுகள் நடக்கவில்லை . மூளையில் ஹார்மோன்களின் தாக்கம் குறித்த ஆய்வுகளும் அறிதிறன் போன்றவற்றில் மூளை அனுப்பும் சமிக்கைகள் குறித்தே செய்யப்பட்டுள்ளனவாம். அதன் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து செய்யப்படவில்லை.  பெண்களின் மாதவிடாய் தொடர்பான ஹார்மோன்கள் இனவிருத்தி உறுப்புகளை மட்டும் பாதிப்பதில்லை.  அவை மூளையையும் சீரமைக்கின்றன என ஒரு ஆய்வு காட்டியுள்ளது. கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த நரம்பியலாளர்கள் எலிசபெத் ரிசார் மற்றும் விக்டோரியா பெபன்கோ குழுவினர் 30 பெண்களின் மாதவிடாய் கால மாற்றங்களை பதிவு செய்தனர்.   மாதவிடாயுடன் தொடர்புடைய ஹார்மோன்கள் மூளையில் இனவிருத்தி தொடர்பான பகுதிகளை மட்டுமல்லாது ஒயிட் மேட்டர் எனப்படும் வெள்ளைப் பொருள் நுண் அமைப்புகளிலும் கார்டிக்கல் தடிமனிலும்  மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என இந்த ஆய்வுகள் காட்டுகின்றன. பருவம் எய்துதல், கருத்தடை மாத்திரைகள் எடுப்பது, பால் உறுதிப்படுத்தும் ஹார்மோன் சிகிச்சை,  மாதவிடாய் நிற்றலுக்குப் பின்னான சிகிச்சை ஆகியவற்றுடன் தொடர்புடைய ஹார்மோன்களின் ஏற்ற இறக்கங்கள் மூளையிலுள்ள வெள்ளைப்பகுதியில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. பெண்களின் இப்படிப்பட்ட வெவ்வேறு பருவங்களில் எம் ஆர் ஐ ஸ்கேன்களும் அதே நேரத்தில் ஹார்மோன்களின் அளவுகளும் இந்த ஆய்வில் எடுக்கப்பட்டன.  ஹார்மோன்களின் மாற்றங்களுக்கு ஏற்ப மூளையின் பழுப்பு மற்றும் வெள்ளை பகுதிகளின் கொள்ளளவும் தண்டுவட திரவத்தின் அளவும் மாறுபட்டன என தெரிந்தது.  மாதவிடாயுடன் தொடர்புடய அசாதாரணமான மற்றும் தீவிரமான உளவியல் ஆரோக்கிய சிக்கல்களை புரிந்து கொள்ள இது ஒரு அடிப்படை ஆய்வாக இருக்கலாம்.