குறுகிய கால இடைவெளி மாணவர்களை குழப்பும். தயாரிப்பிற்கும் உதவாது. இந்த நிலை தவிர்க்கப்பட வேண்டும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஒன்றிய அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இன்று மாண்புமிகு ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் திருமிகு மன்சுக் மாண்டவியா அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
எதிர்வரும் மே 3 அன்று வரை 2021 நீட் முதுகலை அகில இந்திய ஒதுக்கீடு (AIQ) இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது. மே 23 இல் 2022 நீட் முதுகலை தேர்வுகள் நடைபெறவுள்ளன.
இதில் இரண்டு பிரச்சினைகள் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன.
ஒன்று, கோவிட் காரணமாக பல்லாயிரக்கணக்கான மருத்துவ மாணவர்களின் பயிற்சிக் காலம் (Internship) பல மாநிலங்களில் தாமதம் ஆகியுள்ளது. ஆகவே அவர்கள் 2022 நீட் தேர்வில் பங்கு பெற இயலாத நிலை உள்ளது. ஓராண்டு வீணாகிற நிலைமை ஏற்பட்டுள்ளது.
இரண்டாவது, நீட் முதுகலை அகில இந்திய ஒதுக்கீடு (AIQ) இடங்களுக்கான கலந்தாய்வு மற்றும் 2022 நீட் முதுகலை தேர்வுகள் இரண்டிற்குமான கால இடைவெளி மிகக் குறுகியதாக உள்ளது. மாநில அளவிலான கலந்தாய்வு தேதிகளும் அடுத்ததாக வரும். கால இடைவெளி குறைவாக இருப்பது நடு மட்ட தர வரிசை மாணவர்களை முடிவெடுப்பதில் குழப்பத்தில் ஆழ்த்தும். இரண்டாவது தேர்வுக்கான தயாரிப்பிற்கு கால அவகாசமும் போதாது.
ஆகவே தேர்வுத் தகுதி பெறாத பயிற்சி மருத்துவர்கள் பிரச்சினைக்கும், உரிய கால இடைவெளியின்றி தேர்வுகள் நடத்தப்படுகிற நிலையைத் தவிர்க்கவும் கோரியுள்ளேன்.
நல்ல பதில் வருமென எதிர்பார்க்கிறேன். என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.