tamilnadu

img

பன்முக வித்தகன் பாரதி - முருகன், தூத்துக்குடி

பன்முக வித்தகன் பாரதி

​பாரதி ஒரு கவிஞர் மட்டுமல்ல, சிறந்த சமூக சிந்தனையாளர், பத்திரிகையாளர், மற்றும் போராட்டக்காரர் எனப் பன்முகத் திறமை கொண்டவர். அவர்  மூடநம்பிக்கைகளையும், சாதிய ஆச்சாரங்களையும் அடியோடு வெறுத்தவர். “சூத்திரனுக்கு ஒரு நீதி... பார்ப்புக்கு வேறொரு நீதி என சாத்திரம்  சொல்லிடுமாயின் அது சாத்திரம் அன்று  சதியென்று கண்டோம்” என்று சாதி யத்திற்கு, வர்ணாசிரமத்திற்கு எதிராகச் சண்டமாருதம் செய்தார். “ஓராயிரம் சாதி உண்டென்ற” வார்த்தையை ஒப்புக்கொள்ளவில்லை.   ​சமுதாயத்தில் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இல்லாமை இல்லாத நிலை  வேண்டும் என்று பாரதி ஆசைப்பட்டார். “உழ வுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில் உண்டு களித்திருப்போரை  நிந்தனை செய்வோம்” என்று உழைப்பை போற்றினார். “தனி ஒருவனுக்கு உண வில்லையெனில் செகத்தினை அழித்திடுவோம்” எனக் கொதித்தெழுந்தார். ​அரசியல் சீர்திருத்தத்தை விட சமுதாயச் சீர்திருத்தமே முதலில் தேவை என்று பாரதி கருதினார். மக்கள் அறியாமை, அடிமைத்தனம் ஆகியவற்றிலிருந்து விடுபட வேண்டும். “தீயை அகத்தினிடை மூட்டுவோம்” என்றும், “ஈயைக் கருடநிலை ஏற்றுவீர்” என்றும் மக்கள் உள்ளத்தில் புரட்சிக் கனலை மூட்டினார்.  ​புராணங்களையும் தெய்வங்களையும் கட்டுக்கதைகள் என்றார். பெண்களைப் போற்றினார்; “ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென எண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார்” என்றார். ​சுதந்திரப் போராட்டக் காலத்தில் சுதேசி நிதியைத் திரட்டி ஆங்கிலேய நிறுவனத்தில் முதலீடு செய்து இழந்தபோது, தென்னகத்தவர் ஒரு இந்திய நிதி நிறுவன வங்கியைத் துவங்க வேண்டும் என்று பத்திரிகைகள் வாயிலாக வேண்டுகோள் விடுத்தார். இவரின் பெரு முயற்சியால், 1907 ஆகஸ்ட் 15-இல் பதிவு செய்யப்பட்டதே இன்று இந்தியன் வங்கி என்ற பொதுத்துறை வங்கியாகச் செயல்பட்டு வருகிறது. அவர் கனகலிங்கம் என்ற பட்டியலின இளைஞனுக்கு பூணூல் அணிவித்தது, அவருடைய வர்ணாசிரம எதிர்ப்புச் சிந்தனைக்கு எடுத்துக்காட்டு.