பயிற்சி மையத்தின் படிகள் நிரம்பியிருந்தன. மேலே செல்ல விரும்புவர்கள் அங்கே அமர்ந்திருப்பவர்களை இடிக்காமல் இருக்க முடியாது. ஒருவர் வினா எழுப்ப, ஒருவரையொருவர் முந்திக் கொண்டு மற்றவர்கள் விடைகளைச் சொன்னார்கள். தப்பாகச் சொன்னவர் அசடு வழிந்து கொண்டிருந்தார்.
“இது வரைக்கும் எத்தனை முறை நம்ம அரசியல் சட்டத்தத் திருத்திருக்காங்க..” என்ற வினா எழும்ப, அமர்ந்திருந்தவர்களை மீறிப் படிகளில் ஏறிக் கொண்டிருந்த இருவர் “106 முறை” என்று முந்திக் கொண்டார்கள். மற்றவர்கள் விடவில்லை. “திருத்தங்கள 3 வகையாச் செய்யலாம்.. கடைசியா செஞ்ச 106வது திருத்தம் நாடாளுமன்றத்துலயும், சட்டமன்றங்கள்லயும் பெண்களுக்கு 33 விழுக்காடு இடங்கள ஒதுக்கீடு செய்யுறது” என்று தொடர்ந்தனர். படியேறியவர்கள் நின்று, சிரித்துக் கொண்டே “நடைமுறைக்கு வர்றதுல இருந்து 15 வருஷத்துக்கு இருக்கும்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்கள். அலோ, சீனியர்... என்ன இது... எல்லாரும் பரபரப்பா இருக்காங்க..? என்ன தம்பி.. மறந்துட்டீங்களா.. தேர்வு முடிஞ்ச பிறகு, அடுத்த வகுப்புகளுக்கான மாதிரித் தேர்வுலாம் தொடங்கிடுச்சுல்ல.. அதான் எல்லாரும் பரபரப்பா படிச்சுட்டு இருக்காங்க.. இப்போதைக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எதுவும் வரலையே, சீனியர்.. மெயின்சுக்கு படிக்குறாங்களோ.. .அதுக்குக்கூட எப்போ தேர்வு முடிவு வரும்... எப்போ மெயின்ஸ் வைப்பாங்கன்னு தெரியலையே.. நீங்க சொல்றதுல ரெண்டு விஷயம் இருக்கு.. ஒண்ணு, தேர்வுக்கு அறிவிக்கை வந்தபிறகு படிக்குறது சரியான வழிமுறை இல்ல.. இப்பவே ஆரம்பிச்சுரணும்.. தேர்வு இல்லாத நேரத்துல படிக்குறது நல்லாவும் இருக்கும்.. அடுத்த மாசம் தேர்வுங்குற பயம்லாம் இல்லாமப் படிக்கலாம் இல்லேனா, ஒவ்வொரு அறிவிக்கை வந்தப்புறமும் படிச்சுட்டே இருக்க வேண்டியதுதான்.. ஆமா, சீனியர்... இந்தத் தப்பைப் பலரும் பண்றோம்.. ரெண்டாவது என்ன? முதல்நிலைத் தேர்வு முடிஞ்சு, ரிசல்ட் வர்றவரைக்கும் காத்திருந்துட்டு அப்புறமா எப்புடிப் படிக்குறது.. நேரம் போதாதே..
சரி. சரி..சீனியர்.. இன்னிக்கு Visualisation பத்தி, அதான் காட்சிப்படுத்துதல் பத்தி சொல்றதா சொல்லிருந்தீங்க.. ஆமா.. உங்களுக்கு என்ன பாடம் ரொம்பப் பிடிக்கும்..? எனக்கா.. வரலாறு.. அட.. எங்களுக்கு எல்லாம் ரொம்ப கஷ்டமானதே அதுதான்.. அதுல இந்த காட்சிப்படுத்துதல் ரொம்ப உதவும்.. வாஸ்கோடகாமாவைப் பாத்திருக்கீங்களா..? பாடப்புத்தகத்துல அவரோட படம் இருக்கு.. அதப் பாத்துருக்கேன்.. இப்போ நேர்ல பாத்தா கண்டுபிடிச்சுருவீங்களா.. ஒரு நிமிடம் ஆடிப்போனார் தேர்வர். இப்போ எப்புடிப் பாக்க முடியும்..? சுதாரித்துக் கொண்டு, ஓ.. கற்பனையா.. என்றார். ஆமா... பாடப்புத்தகத்துல மட்டுமில்ல.. வேற மாதிரியும் பாத்துருக்கீங்க. அப்புடியா.. மாறு வேஷப் போட்டிலலாம் வாஸ்கோடகாமா வேஷம் கட்டி யாரும் வந்ததில்லயே.. டி.எஸ்.பி. படத்துல ஹீரோ விஜய் சேதுபதியோட பேரு வாஸ்கோடகாமான்னு தெரியும்.. நான் அதச் சொல்லல.. இம்சை அரசன் 23ஆம் புலிகேசி பாத்தீங்களா.. அதுல ரெண்டு பேரு குளிர்பானம் விக்க அனுமதி கேட்டு வருவாங்களே..? ஆமா, அக்கா மாலா, கப்சி விக்க வருவாங்கள்ல..அவங்கள்ல யாரும் வாஸ்கோடகாமா இல்லையே.. கற்பனைதான... நமக்கு என்ன... வாஸ்கோடகாமான்னா, நமக்கு எதிரான கலர்ல இருக்கனும்.. நீளமாத் தொப்பி வெச்சுருக்கனும்..
இது நல்லாருக்கே சீனியர்.. சாமுத்ரி அரசர்கிட்ட வாஸ்கோடகாமா நிக்குற காட்சி இப்போ எனக்கு முன்னாடி ஓடுது.. ஆமா.... ஆனா படத்துல காட்டுற மாதிரிலாம் ரொம்ப கம்பீரமா சந்திக்க மாட்டாரு.. கூழைக்கும்பிடு போட்டுதான் உள்ள வந்தாங்க.. கப்பாடு கடற்கரைல அவர வரவேற்குற மாதிரி நினைச்சுக்கோ... கப்பாடுன்னா என்ன சீனியர்..? அங்கதான் வாஸ்கோடகாமா இறங்குனாரு.. அப்போ கோழிக்கோடு..?? கோழிக்கோட்டுல கப்பாடு கடற்கரை... ஓ... சென்னைல மெரினா கடற்கரைனு சொல்றமே.. அது மாதிரியா..? ஆமா.. வரவேற்று என்ன பண்ணுவீங்க தம்பி.. சீனியர்... முதல்லயே நெனச்சேன்.. வாங்க டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்... அவருக்கும் அதுதான் வாங்கித் தருவேன்.. நம்ம பட்ஜெட்டுக்கு ஏத்த மாதிரி இருக்கும்.. ஒன்றரை மார்க் ஆச்சே,, கூடுதலா தேங்காய் பன் தரலாம்... தம்பி... ஒரு ஆளுக்கு 30 ரூபா ஆகுமா.. ஆமா சீனியர்... உங்களவும் கூட்டிட்டுப் போறேன்.. நம்ம பட்ஜெட்டுக்குள்ள வந்துரும்.. அதெப்புடி... 5 ஆயிரம் ரூபா தேவைப்படுமே தம்பி.. சீனியர்.. எதுக்குக் குண்டைத் தூக்கிப் போடுறீங்க.. அவரு என்ன அவ்ளோ டீ சாப்புடப் போறாரா?
இல்ல தம்பி.. அவரையும் சேத்து மொத்தம் வந்தவங்க 170 பேரு.. இது கூட ஒரு தேர்வுல கேட்டுருந்தாங்க.. நல்ல வேளை... இப்பவே சொன்னீங்க.. இல்லேனா பகவதி படத்துல ஊர்க்காரர் ஒருத்தர சாப்புடச் சொல்லிட்டுப் பார்த்தா, அவரோட வந்துருக்குற 170 பேரு உள்ள புகுந்து சாப்பிட்டு இருப்பாங்க.. எனக்கும் வடிவேலு கதிதான் வந்துருக்கும்.. ஆமா தம்பி... சேந்து படிச்சா இன்னும் நல்லா இருக்கும்.. சேந்து கற்பனை பண்றதா.. எப்புடி சீனியர்.. படில உக்காந்துக்கிட்டு கோஹினூர் வைரத்த ஒவ்வொருத்தர் கைல மாத்திக் குடுக்கனும்... முதல்ல ஆரம்பிக்குறவரு, நான்தான் இத கொல்லூர் சுரங்கத்துல இருந்து எடுத்தேன்.. கதைலலாம் படிப்போம்ல.. பெரிய மீன் கிடைச்சா, அதக் கொண்டு போய் ராஜாக்கிட்ட குடுப்பாங்கன்னு.. அதுமாதிரிதான் காகதீய அரசர் கிட்டப் போய்க் குடுத்தேன்.. அத வாங்குன தேர்வர், திடீர்னு பெருங்கூட்டமா வந்தாங்க.. அடிச்சுத் துவம்சம் பண்ணிட்டாங்க... அதுக்குத் தலைவரா வந்த மாலிக்காபூர் கைல வைரம் போச்சு.. என்று அடுத்த தேர்வர் கைல குடுக்குறாரு..
சீனியர்... அந்தத் தேர்வர் மாலிக்காபூர் மாதிரி தன்னை நினைச்சுக்கனும்... ராமேஸ்வரம் வரைக்கும் போனதச் சொல்லிட்டு, தில்லிக்குத் திரும்புன பிறகு அலாவுதீன் கில்ஜிகிட்ட வைரத்தக் கொடுத்தச் சொல்லனும்... அந்த வைரத்தப் பெருசா எடுக்காம கஜானாவுக்கு அனுப்புறாரு... அப்புறம் முகமது பின் துக்ளக், பாபர், ஜஹாங்கீர், ஷாஜகான், நாதிர்ஷா, ரஞ்சித் சிங், டல்ஹவுசினு போய்க்கிட்டே இருக்கும்.. சூப்பர், தம்பி... இதெல்லாம் சொல்றப்ப எல்லார் மனசுலயும் படம் ஓடிட்டு இருக்கனும்.. இப்பவே ஓடிட்டுதான் இருக்கு, சீனியர்.. ஓடுறப்ப கதைலருந்து கொஞ்சம் வெளிலயும் போய்ட்டு வர்ற மாதிரியும் இருக்கு.. இருக்கத்தான் செய்யும்.. அதுவும் தனியாக் கற்பனை பண்றோம்ல.. அதுவும் காரணம்தான்... மத்தவங்களோட சேந்துக்கிட்டா ஒரு ஒழுங்கு இருக்கும்.. எதுவுமே சேந்து பன்னுனா நல்லாத்தான இருக்கும்.. சீனியர்... நீங்க ஒரு விஷயத்துல உறுதியா இருக்கீங்க... குறைஞ்சது ரெண்டு பேராவது உக்காந்து படிக்கனும் சொல்லிட்டே இருக்கீங்க.. எல்லா நேரமும் அப்படி இருக்க முடியாதுல்ல.. ஆனா, அன்றாடம் அதுக்குன்னு நேரம் ஒதுக்கி பண்ணிக்கனும்.. ஒன்றுபட்டால் உண்டு மார்க்.. .அப்படித்தான சீனியர்... நாளைக்குப் பார்க்கலாம்.. வர்றேன்..