tamilnadu

img

மக்களவை செயலகம் வெளியிட்ட காலண்டரில் காந்தி, அம்பேத்கரின் படமில்லை! - சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்

மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள சிறப்பு காலண்டரில் காந்தி மற்றும் அம்பேத்கரின் படமோ பெயரோ இடபெறாததற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசமைப்பு சட்டத்தின் 75 ஆவது ஆண்டை கொண்டாடும் விதமாக மக்களவை செயலகம் சிறப்பு காலண்டரை வெளியிட்டுள்ளது. அதில், மகாத்மா காந்தி மற்றும் டாக்டர் அம்பேத்கரின் படமோ, பெயரோ இடம்பெறவில்லை. இந்த நிலையில், இரு பெரும் தலைவர்களின் படங்களோ, பெயர்களோ இல்லாமல் சிறப்பு காலண்டர் அச்சிடப்பட்டதற்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த காலண்டர்கள் திரும்பப்பெற வேண்டும் எனவும், இந்த செயலுக்காக மக்களவை செயலகம் மன்னிப்பு கோர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அவர் எழுதிய கடிதம் பின்வருமாறு:
"நேற்றைய தினம் மக்களவை செயலகத்திலிருந்து 2025ஆம் ஆண்டுக்கான மாதாந்திர நாட்காட்டி உங்களின் கடிதத்துடன் எங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்திய அரசமைப்பு சட்டத்தின் 75 ஆவது ஆண்டை கொண்டாடுவதன் வெளிப்பாடாகவும், அரசியல் சட்டத்தின் வரலாற்றுப் பயணத்தை நினைவு கூறும் விதமாகவும் இந்த மாதாந்திர நாட்காட்டி உருவாக்கப்பட்டுள்ளதாக நீங்கள் எழுதியுள்ளீர்கள்.
ஆனால் நீங்கள் அனுப்பிவைத்துள்ள மாதாந்திர நாட்காட்டி பெரும் அதிர்ச்சியை தருவதாக உள்ளது.
இந்திய அரசியல் சட்ட வரலாற்றுப் பயணத்தை நினைவு கூறும் இந்த நாட்காட்டியில் தேசத்தந்தை அண்ணல் காந்தியாரின் படமோ, அரசியல் சட்ட வரைவுக்குழுவின் தலைவர் அண்ணல் அம்பேத்கரின் படமோ இல்லை.
இந்த இருபெரும் ஆளுமைகளின் பங்களிப்பை மறைக்க ஒவ்வொரு நாளும் ஒன்றிய அரசு முயற்சி செய்து வருகிறது.
நாடாளுமன்ற கட்டிடத்தின் முன்புறமிருந்த அண்ணல் காந்தியார், அண்ணல் அம்பேத்கர் இருவரின் சிலையையும் அகற்றி நாடாளுமன்ற கட்டிடத்தின் பின்புறம் கொண்டுபோய் வைத்துள்ளீர்கள்.
இப்பொழுது இந்திய அரசியல் சட்டத்தின் 75 ஆவது ஆண்டை கொண்டாடுவதன் அடையாளமாக சிறப்பு மாதாந்திர நாட்காட்டியை வெளியிட்டு அதில் இரு பெரும் தலைவர்களின் படங்களோ, பெயர்களோ இல்லாமல் அச்சிட்டுள்ளீர்கள்.
இந்த காலெண்டரில் அரசியல் சாசனத்தை வரைந்த ஓவியர்கள், கையெழுத்து பிரதியாளர்கள் படங்களும் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. அவர்களின் பங்களிப்பு போற்றத்தக்கது, அங்கீகரிக்கப்பட வேண்டியது. ஆனால் அரசியல் சாசனத்தின் வரைவு குழு தலைவராக இருந்து பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே அதற்கு வடிவம் தந்த அண்ணல் அம்பேத்கரின் பெயர், படம் எப்படி விடுபட முடியும்? 
இந்திய விடுதலைப் போராட்டத்தை ஓர் வெகுமக்கள் இயக்கமாக மாற்றிய தேசத்தந்தை காந்தியாரின் பெயரும் படமும் எப்படி விடுபட முடியும்? இது வரலாற்றை திரிக்கும் திட்டமிட்ட செயலாகும்; நவீன இந்தியாவை உருவாக்குவதில் இவ்விரு பேராளுமைகள் நல்கிய அரும் பங்களிப்பை அவமதிக்கும் செயலாகும். 
ஏற்கனவே அண்ணல் அம்பேத்கர் பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் வெளியிட்ட கருத்துக்கள் கோடானு கோடி மக்களின் மனதை புண்படுத்தி உள்ளது. தற்போது இந்த காலண்டர் மேலும் மக்கள் உணர்வுகளை ரணமாக்க கூடியதாகும் என அஞ்சுகிறேன். பெரும் காயத்தை மக்கள் மனதில் இது உருவாக்கும். 
உங்களின் இந்த செயல் இந்திய அரசியல் சாசன வரலாற்றின் உருவாக்கத்தை மேன்மைப் படுத்துவதாக இல்லை. மாறாக உங்களின் எண்ணம் அதற்கு நேர் எதிராக செயல் பட்டிருக்கிறது. 
ஆகவே இந்த காலண்டரை திரும்பப்பெற்று தேசத்தந்தை காந்தியார், அண்ணல் அம்பேத்கர் ஆகிய இரு ஆளுமைகளுக்கும் உரிய இடம் தருகிற புதிய காலண்டரை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.