மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 24ஆவது மாநாடு 2025 புத்தாண்டில் - தமிழ்நாட்டு அரசியலின் முதல் மாபெரும் நிகழ்வாக - தமிழக பாட்டாளி வர்க்கத்தின் முதல் பெரும் குரலாக - பேரெழுச்சியுடன் விழுப்புரத்தில் நடைபெறுகிறது. இதன் முத்தாய்ப்பாக, 24ஆவது அகில இந்திய மாநாடு மதுரை மாநகரில் 2025 ஏப்ரலில் கூடுகிறது. மாநாடுகள் தான் கம்யூனிஸ்ட்டுகளின் திருவிழா. மாநாடுகள் தான் கம்யூனிஸ்ட்டுகள் தங்களை சுய பரிசீலனை செய்து கொள்ளவும், தங்களை புதுப் பித்துக் கொள்ளவும், உலகம் முதல் உள்ளூர் வரையி லான அரசியல், சமூக, பொருளாதாரப் பிரச்சனைக ளை அலசி ஆராயவும், அதிலிருந்து துல்லியமான நிலைமைகளை புரிந்துகொண்டு துல்லியமான முடிவு களையும், எதிர்கால திட்டங்களையும் வகுக்கவும் களமாக திகழ்கின்றன. முதலாளித்துவ அரசியல் கட்சி களைப் போன்று கம்யூனிஸ்ட்டுகளின் மாநாடுகள் கூடி, தொண்டர்களை உற்சாகப்படுத்தி மட்டுமே அனுப்புகிற கூட்டங்கள் அல்ல; மாறாக, முதலாளித் துவ அமைப்பு முறையின் அடிப்படையாக உள்ள மூலதனம் எப்படி அனைத்து அம்சங்களும் பொருந்திய தாக - அனைத்துவிதமான சுரண்டலையும், தாக்குத லையும் கட்டவிழ்த்துவிட்டிருப்பதாக இருக்கிறதோ; அதேபோல அதற்கு எதிரான - பாட்டாளி வர்க்கங்க ளின் போராட்டங்களும்; அனைத்துவிதமான சுரண்டல் கள் மற்றும் தாக்குதல்களுக்கு எதிரான நடவடிக்கை களும் ஒரு முழு அளவிலான - அனைத்து அம்சங்க ளும் பொருந்திய செயல்பாடாக - தொழிலாளர் வர்க்கத்தின் அனைத்துத் தரப்பையும் முழுமையாக ஈடுபடுத்துகிற பேரெழுச்சியாக மாற்றுவது எப்படி என்பதே கம்யூனிஸ்ட்டுகள் நடத்தும் ஒவ்வொரு மாநாட்டின் அடிப்படை சாரமாக உள்ளது. கிளைகள் துவங்கி அகில இந்திய மாநாடு வரை அந்தந்த மட்டத் தில் மாநாடுகள் நடைபெற்றாலும் இந்த அனைத்து மாநாடுகளின் அடிப்படை நோக்கம் பாட்டாளி வர்க் கத்தையும், அதன் எழுச்சியையும் எப்படி அனைத்து அம்சங் களும் பொருந்தியதாக மாற்றுவது என்பதுதான். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோன்றியது முதலே மாநாடுகளின் அடிப்படை அம்சம் இதுதான்.
சுரண்டலுக்கெதிரான சங்கநாதம்: சோவியத் புரட்சி முதல் இந்திய மண் வரை
“ஆகாவென் றெழுந்தது பார் யுகப்புரட்சி” என்று மகாகவி பாரதி பாடிய 1917 மகத்தான சோவியத் புரட்சியானது உலக நாடுகளிலும் இந்தியாவிலும் ஏற் படுத்திய தாக்கங்களும், திருப்பங்களும் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டி யவை. அதற்கு முன்பு வரை வெவ்வேறு நாடுகளில் தனித்தனியாக செயல்பட்டு வந்த - தனிநபர்களாக இருந்த கம்யூனிஸ்ட்டுகள், சோவியத் புரட்சியின் உத்வேகத்தால் 1920 அக்டோபர் 17அன்று தாஷ்கண்ட் நகரில் ஒன்று கூடினர். சோவியத் புரட்சிக்குப் பிறகு மாமேதை லெனின் தலைமையில் உலக கம்யூனிஸ்ட் கட்சிகளின் அமைப்பாக இருந்த கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாவது மாநாடு நடைபெற்றது. அதில்தான் இந்தியா உட்பட பல நாடுகளில் கம்யூ னிஸ்ட் கட்சிகள் உதயமாவதற்கான சிந்தனை எழுந்தது. கம்யூனிஸ்ட் அகிலத்தின் நிர்வாகக்குழு, உலகின் கிழக்கு நாடுகளது மக்கள் இயக்கங்களை ஒன்றிணைத்து ஒரு மாநாட்டை நடத்துவதற்காக ஒரு சிறிய குழுவை அமைத்தது. அந்தக் குழுவின் முயற்சி யால் 1920 செப்டம்பரில் பாகு நகரில் கிழக்கு நாடுக ளின் மக்கள் குழுக்களது முதல் மாநாடு நடைபெற்றது. அதில்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துவக்குவ தற்கான விதை ஊன்றப்பட்டது. ஒருமாத காலத்தி லேயே, 1920 அக்டோபர் 17 அன்று தாஷ்கண்ட் நகரில், கம்யூனிஸ்ட் அகிலத்தின் கொள்கைகளை அடிப்படை யாகக் கொண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அமைக் கப்பட்டது. இந்தியாவைச் சேர்ந்த- ஆனால் வெளிநாடு களில் இருந்த - ஏழு கம்யூனிஸ்ட்டுகள் ஒன்றுகூடி கட்சி யைத் துவக்கினர். அவர்களை வழிநடத்தியவர் தோழர் எம்.என்.ராய். அவருடன் அபானி முகர்ஜி, எம்.பி.டி.ஆச்சாரியா, முகமது சபீக் சித்திகி, முகமது அலி, எவ்லின் ராய், ரோசா பிட்டிங்கவ் ஆகிய தோழர்கள் உருவாக்கியதுதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
உதிரம் சிந்திய உன்னத வரலாறு: தடைகளும் தியாகங்களும்
பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவில் புரட்சிக்கான திட்டத்துடன் பிறந்த இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி, பிறந்தபோதே தடையை எதிர்கொண்டது. அப்போது முதல் கடந்த நூறாண்டுகளுக்கும் மேலான வரலாற்றில் எத்தனை எத்தனை தடைகள்; சதி வழக்குகள்; துப்பாக்கிச் சூடுகள்; தியாகத் தழும்புகள்; வீரம்செறிந்த போராட்டங்கள். இந்தியாவின் அரசி யல் கட்சிகளில் வேறெந்தக் கட்சிக்கும் கம்யூனிஸ்ட் கட்சியைப் போன்ற புரட்சிகரமான வரலாறோ, தியாகத் தழும்புகளோ, சாதனைத் தடங்களோ, துடிப்புமிக்க பாட்டாளி வர்க்க ஆதரவோ இல்லை. இது கம்யூ னிஸ்ட்டுகளுக்கு மட்டுமே உரித்தான பெருமிதம். இந்த பெருமிதத்துடன்தான் நமது கிளை மாநாடுகள் துவங்கி அகில இந்திய மாநாடுகள் வரையில் நாம் உயர்த்துகிற உதிரச் செங்கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியைப் போல வேறு எந்தக் கட்சிக்கும் நூற்றுக்கணக்கான தலைவர்கள் இல்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் ஒவ்வொரு தலைவரும் புரட்சி வீரர்களாகவே செயல்பட்டார்கள். கட்சியைத் துவக்கிய எம்.என்.ராய் உள்ளிட்ட முதல் ஏழு புரட்சியாளர்க ளில் துவங்கி; இந்திய விடுதலை இயக்கத்தில் முதல் முறையாக பூரண சுயராஜ்யம் என முழங்கிய மவுலானா ஹஸ்ரத் மொகானி, சுவாமி குமரானந்தா ஆகியோரில் துவங்கி; இந்தியாவில் முதல் மே தினத்தை நடத்திய தென்னிந்தியாவின் முதல் கம்யூ னிஸ்ட் சிங்காரவேலர், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தை நிறுவிய தலைவர்களில் முதன்மை யானவர்களான முசாபர் அகமது, எஸ்.ஏ.டாங்கே, தென்னகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்க வருகை தந்த அமீர் ஹைதர் கான் ஆகியோரில் தொடர்ந்து மகத்தான தலைவர்களின் பட்டியல் நீள்கிறது. நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், எத்தனை எத்தனை தலைவர்கள்; தியாகிகள்! ஒவ்வொருவரின் சிந்தனையிலும் செயல்பாட்டிலும் நிறைந்திருந்ததும் நிறைந்திருப்பதும் இந்தியப் புரட்சி மட்டுமே.
புத்துயிர் வெள்ளமாய் புரட்சியின் பாதையில்: சுயவிமர்சனமும் செம்மையான எதிர்காலமும்
“புரட்சி என்பது புதுமைக் கூத்து
புரட்சி என்பது புத்துயிர் வெள்ளம்
புரட்சி என்பது புதுமை கீதம்
புரட்சி என்பது புவித்தாய் நகைப்பு”
-என்று ஆவேசமாக பாடினார் தோழர் ஜீவா. அந்த புதுமை கீதமே, புத்துயிர் வெள்ளமாக கம்யூனிஸ்ட் கட்சியை இயக்கி கொண்டிருக்கிறது. அந்த இயக் கத்தின் உயிர்ப்புமிக்க இதயத் துடிப்பே நாம் நடத்தும் மாநாடுகளும், அதில் இடம்பெறும் விவாதங்களும், எடுக்கப்படும் முடிவுகளும். நமது மாநாடுகள் நாம் இயங்கும் பகுதியில் அல்லது மாநிலத்தில் உள்ள மக்களை புரிந்து கொள்ள முயற்சிக்கின்றன. அவர்களது உணர்வுகளை முழுமையாக அலசுகின்றன. மாநாட்டு அறிக்கை களின் சாரம் அதுதான். அது வெறுமனே தகவல்க ளால் நிரப்பப்பட்டது அல்ல. அந்த அறிக்கைகள் மீதான விவாதங்களும், மற்ற எந்தக் கட்சியிலும் இல்லாத நடைமுறையே. இந்த விவாதங்களின் அடிப்படை அம்சங்களில் முக்கியமானது சுய விமர்ச னம், விமர்சனம். சுய விமர்சனமின்றி, விமர்சனம் இல்லை. சுய விமர்சனம் என்பது தனிநபர் தனது நிறை குறைகளை உணர்ந்து முன்வைப்பதும்; தான் சார்ந்துள்ள குழுவின் நிறைகுறைகளை முன் வைப்பதும், அதை சரிசெய்து கொள்ளும் திட்டத்தை முன் வைப்பதும் ஆகும். விமர்சனம் என்பது ஒரு கருத்தை, செயலாக்கத்தை, படைப்பை, நபரை அல்லது அமைப்பை மதிப்பீடு செய்து கருத்துக்களை முன்வைப்பது ஆகும். கம்யூனிஸ்ட் கட்சியில் இந்த இரண்டும் முக்கியம். குறிப்பாக விமர்சனம் என்பது, எப்போதுமே கட்சியில் பூனை தனது குட்டியை கவ்வுவது போல் இருக்குமே தவிர, பூனை எலியை கவ்வுவது போல் இருக்காது. இந்த அணுகுமுறை தான் கட்சியை ஒரு வற்றாத ஜீவநதியாக ஓடச் செய்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடுகளில் அரசியல் ஸ்தாபன செயல்பாடுகள் பற்றி விரிவாக விவா திக்கப்படும். இந்த விவாதத்தின் மற்றொரு அடிப்படை அம்சமாக இருப்பது மாநிலம் தழுவிய அளவிலும் சரி, நாடு தழுவிய அளவிலும் சரி, கட்சி யின் இன்றைய பலத்தை மதிப்பீடு செய்து, நமது நாட்டில் நாம் நடத்திட இலக்கு தீர்மானித்துள்ள புரட்சியை நோக்கிய பயணத்தில் மேலும் எப்படி பலப்படுத்திக் கொள்வது என்பதுதான்.
இடதுசாரி ஜனநாயக முன்னணி: தொழிலாளர் - விவசாயிகளின் ஐக்கிய போராட்டம்
இந்தியாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கான மக்கள் ஜனநாயக புரட்சியை நடத்திட முதல் படி இடதுசாரி சக்திகளின் ஒற்றுமை; முற் போக்கு ஜனநாயக சக்திகளின் ஆதரவு. எனவே இடதுசாரி - ஜனநாயக அணி சேர்க்கையை உருவாக்கு வது முக்கிய இடம் பெறுகிறது. இத்தகைய அணி சேர்க்கை அவ்வப்போது ஏற்படும் அரசியல் சூழலின் அடிப்படையிலான தேர்தல் கூட்டணிகள் அல்லது தேர்தல் புரிந்துணர்வால் மட்டும் ஏற்படுவது அல்ல. இடதுசாரி- ஜனநாயக அணி என்பது பாட்டாளி வர்க்கங்களின் இடைவிடாத, வலுவான போராட்டங்களில் முகிழ்க்கும் மாபெரும் அணி சேர்க்கை. சோசலிசத்தை லட்சியமாகக் கொண்ட இடதுசாரிக் கட்சிகள், பல்வேறு வகையான சுரண்ட லுக்கும் சமூக ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாகியி ருக்கும் பிற அனைத்து தரப்பு மக்கள் மற்றும் அவர்க ளது இயக்கங்கள், அமைப்புகள் ஒன்றிணைந்து பொரு ளாதார சுரண்டலுக்கும், சமூக ஒடுக்குமுறைக்கும் எதிராக சற்றும் பின்வாங்காமல் போரிடுவதற்காகவும், போரிடும் போதும் உருவாக்கிக் கொள்கிற அணியே இடது ஜனநாயக முன்னணி. இந்தியப் புரட்சிக்கான பாதையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய நவரத்தினத் தலைவர்கள் இதையே முன்வைத்தார்கள். மார்க்சிஸ்ட் கட்சி தனது மாநாடுகளில் இதையே விவா திக்கிறது; இதையே திட்டமிடுகிறது; இந்தியாவின் இருபெரும் வர்க்கங்களான தொழிலாளர்கள்- விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் ஆகி யோரின் ஒற்றுமையை வலுப்படுத்தி; கருத்தாலும், கரத்தாலும் உழைக்கும் அனைத்துத் தரப்பு பாட்டாளி களின் ஒற்றுமையை உருவாக்கி; அவர்களுக்கு ஆதர வாக அனைத்து முற்போக்கு ஜனநாயக சக்திக ளையும் அணி திரளச் செய்வதே நமது ஒவ்வொரு செயல்பாட்டின் இலக்காகும். அதை இந்திய அரசியலில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் - மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல தருணங்களில் சாதித்துக் காட்டியுள்ளது. தொடர்ந்து அந்தப் பணியில் உறுதியோடு முன்செல்லும். எனவே அரசியல் அரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எவராலும் சவால் விட முடியாத இயக்கம். அதன் உறுப்பினராக உள்ள ஒவ்வொரு தோழரும் இந்த பெருமிதத்தோடு செங்கொடியை உயர்த்திப் பிடிப்போம். நமது மாநாடே நமது செயல்பாட்டின் இதயம். அதை மற்ற எல்லோரையும் விட பெரும் உற்சாகத்துடனும் எழுச்சியுடன் கொண்டாடுவோம்!