ஜிஎஸ்டி கவுன்சிலின் 55வது கூட்டம் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் நகரில் நடை பெற்றது. கூட்டத்தின் முடிவில் பத்திரிகை யாளர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு மக்கள் நல அறிவிப்பு களை வெளியிட்டார். செறிவூட்டப்பட்ட அரிசிக்கான வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீத மாக குறைக்கப்பட்டுள்ளது. மரபணு சிகிச்சைக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வங்கிக் கடன் தவணை தவறியவர்களுக்கான அபராதத்தின் மீதான ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்களின் நலனில் மிகவும் முக்கிய மான ஒரு விஷயம் - ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டு பிரீமியங்கள் மீதான 18 சதவீத ஜிஎஸ்டி வரி குறைப்பு பற்றி எந்த முடிவும் எடுக்கப் படவில்லை. மாறாக, இதற்காக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவிற்கு மேலும் கால அவகாசம் தேவை என்றும், இன்சூரன்ஸ் ஒழுங் காற்று மற்றும் வளர்ச்சி ஆணையத்திடமிருந்து (IRDAI) கூடுதல் தகவல்கள் தேவை என்றும் நிதியமைச்சர் கூறியுள்ளார்.
வளர்ச்சியின் பெயரில் வளரும் ஏற்றத்தாழ்வுகள்
இந்தியா விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறப்போவதாக பிர தமர் மோடி பெருமிதம் பேசி வருகிறார். ஆனால் இந்த வளர்ச்சியின் பலன்கள் யாரைச் சென்ற டைகிறது என்பதே முக்கியமான கேள்வி. மோதி லால் ஆஸ்வால் நிறுவனத்தின் ஆய்வின்படி, 2019 முதல் 2024 வரையிலான ஐந்தாண்டு களில், இந்தியாவின் முதல் 100 செல்வந்தர்கள் மட்டுமே ரூ.138 லட்சம் கோடி செல்வத்தை குவித்துள்ளனர். இவர்களின் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் 26 சதவீதமாக உள்ளது - இது மும்பை பங்குச்சந்தையின் வருவாய் விகித மான 14 சதவீதத்தை விட அதிகம். ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.11,17,800 கோடி செல்வத்துடன் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. அதானி குழுமம் அனைத்து வகையான செல்வக் குவிப்பிலும் முன்னணியில் உள்ளது. இதன் துணை நிறு வனமான அதானி கிரீன், கடந்த ஐந்து ஆண்டு களில் 118 சதவீத கூட்டு வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
பொதுமக்களின் வருமான நிலை
மறுபுறம், நாட்டின் பெரும்பான்மை மக்க ளின் வருமான நிலை என்ன? குறிப்பிட்ட கால தொழிலாளர் கணக்கெடுப்பின்படி, 2023-24ல் கிராமப்புற ஆண் தொழிலாளியின் மாத வருமானம் வெறும் ரூ.9,589 மட்டுமே. பெண் தொழிலாளிகளின் நிலை இன்னும் மோசம் - ரூ.6,335 மட்டுமே. நகர்ப்புறங்களிலும் நிலைமை பெரிதாக மாறவில்லை - ஆண்கள் ரூ.13,834, பெண்கள் ரூ.10,693 என்ற அளவிலேயே வருமானம் ஈட்டுகின்றனர். இந்தியாவின் தனிநபர் வருமானம் சராசரி யாக ஆண்டுக்கு ரூ.1,84,000. உலக அளவில் இது 141வது இடத்திலேயே உள்ளது. மேலும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், தேசிய வருமானத்தில் 22 சதவீதத்தை வெறும் 1 சதவீத மக்களே அபகரித்துக் கொள்கின்றனர்
காப்பீட்டுத் துறையில் தனியார்மயமாக்கலின் விளைவுகள்
இந்தப் பின்னணியில்தான் காப்பீட்டுத் துறையின் நிலையை நாம் பார்க்க வேண்டும். IRDAI அமைப்பு 2047ல் ஒவ்வொரு இந்தி யரும் காப்பீடு பெற வேண்டும் என்ற இலக்கை வைத்துள்ளது. ஆனால் மக்களின் வருமான நிலையையும், வாங்கும் சக்தியையும் பார்க்கும்போது இது எவ்வளவு சாத்தியம்? IRDAI அமைப்பின் செயல்பாடுகளே கேள்விக் குறியாக உள்ளன. இது தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு வளர்ச்சி ஆணையமாகவும், பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஒழுங்காற்று ஆணையமாகவும் மட்டுமே செயல்படுகிறது. இதன் சமீபத்திய பரிந்துரை களே இதற்கு சான்று: - அந்நிய நேரடி முதலீட்டை 74 சதவீதத்தி லிருந்து 100 சதவீதமாக உயர்த்த பரிந்துரை - காப்பீட்டு நிறுவனம் தொடங்க தேவையான குறைந்தபட்ச முதலீட்டை ரூ.100 கோடியி லிருந்து ரூ.50 கோடியாக குறைக்க பரிந்துரை - காப்பீட்டு முகவர்கள் பல நிறுவனங்களின் பாலிசிகளை விற்க அனுமதிக்கும் பரிந்துரை
தேவை உடனடி நடவடிக்கை
கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய ஆர்ப்பா ட்டம், நிதின் கட்காரி உள்ளிட்ட அமைச்சர்களின் எதிர்ப்பு - இவை அனைத்தும் காப்பீட்டு பிரீமியத்தின் மீதான 18 சதவீத ஜிஎஸ்டி வரியின் அநீதியை சுட்டிக்காட்டுகின்றன. மக்கள் நலனில் உண்மையான அக்கறை இருந்தால், அரசு உடனடியாக இந்த வரியை நீக்க வேண்டும். அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாக வேண்டும். அதுவே மக்கள் நலனில் உண்மை யான அக்கறையின் வெளிப்பாடாக இருக்கும். கட்டுரையாளர் : பொருளாளர், தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கட்டமைப்பு