மதுரையில் வீட்டுமனைப் பட்டா கோரி சுமார் 20,000 பேர் பங்கேற்ற மாபெரும் மக்கள் முறையீடு இயக்கம் இன்று நடைபெற்றது.
2011 ஆண்டு மதுரை மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட கிராம ஊராட்சிப் பகுதியில் சுமார் ஆறாயிரத்திற்கும் அதிகமானோருக்கு அரசு அனுமந்த பட்டா கொடுத்திருந்தது. அவர்களுக்கெல்லாம் தோராயப்பட்டா கொடுத்து கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
குடிசை மாற்றுவாரியம், நகர்புற மேம்பாட்டு வாரியத்திற்கு உட்பட்ட வீடுகளுக்கு பயனாளிகள் செலுத்த வேண்டிய தொகையை செலுத்திய பின்பும் அவர்களின் பெயரில் பத்திரம் பதிந்து கொடுக்காத நிலை உள்ளது.
இந்த நிலையில், மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அரசு நத்தம் புறம்போக்கு இடத்தில் பல ஆண்டுகளாக வசித்து வருகின்ற எளிய மக்களுக்கு அரசு பட்டா வழங்க வலியுறுத்தி சு.வெங்கடேசன் எம்.பி தலைமையில் மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர் புறநகர் மாவட்டக்குழுக்களின் சார்பில் சுமார் 20,000 பேர் பங்கேற்ற பேரணி இன்று நடைபெற்றது.
இந்த இயக்கத்தை மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் துவக்கி வைத்தார். மாநகர் மாவட்ட செயலாளர் மா.கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநிலகுழு உறுப்பினர்கள் இரா.விஜயராஜன், எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.பாலா , துணை மேயர் தி.நாகராஜன், பட்டா இயக்க பொறுப்பாளர் வை.ஸ்டாலின் உள்ளிட்ட மாநகர், புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், பகுதி குழு செயலாளர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டு பல்லாயிரக்கணக்கானோர் பங்கெடுத்தனர்.
பேரணியின் முடிவில் மதுரை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அவர் தமிழக அரசின் கவனத்திற்கு இப்பிரச்சனையை கொண்டு சென்று உரிய தீர்வைக் காணுவதாக உறுதியளித்துள்ளார்.