தமிழகம் முழுவதிலுமிருந்து வர்க்கப் போராட்டத்தின் நாயகர்களை வரவேற்க தயாராகிவிட்டது மாமதுரை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 23 ஆவது மாநாடு பேரெழுச்சியுடன் இராஜா முத்தையா மன்றத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக, அமைக்கப்பட்டுள்ள வரவேற்புக் குழு கடந்த ஒரு மாத காலமாக இரவு பகலாக பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளது. மதுரை மாநகரிலும் புறநகர் மாவட்டத்திலும் வீடு வீடாக நூற்றுக்கணக்கான குழுக்கள் உண்டியல் ஏந்தி திரட்டிய நிதியில்; மார்க்சிஸ்ட் கட்சி மீதும், அதன் கொள்கைகள் மீதும் நேசம் கொண்டு உழைக்கும் வர்க்கத்திற்காக எங்களது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற உவகையுடன் வணிகர்கள், நடுத்தர வர்க்க ஊழியர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் நண்பர்கள், பல்வேறு துறை வல்லுநர்கள் உள்ளிட்ட ஆதரவாளர்கள் அளித்த நிதியில் உழைக்கும் மக்களின் இம்மாநாடு நடைபெறுகிறது. வரவேற்புக் குழுவின் தலைவர் சு.வெங்கடேசன் எம்.பி., செயலாளர் மா.கணேசன், பொருளாளர் கே.ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் பல்வேறு உபக் குழுக்கள் பணிகளை பிரித்து கொண்டு மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. எழுச்சிமிக்க செம்படை அணிவகுப்பு மற்றும் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கான தயாரிப்புகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.