tamilnadu

img

வாழ்வாதாரத்தை இழந்து பரிதவிக்கும் 3 லட்சம் புகைப்பட - வீடியோ தொழிலாளர்கள்

மதுரை:
கொரோனா நோய்த்தொற்று அச்சத்தால் பல்வேறு தொழில்கள் மற்றும் தொழில் சார்ந்த நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடியோ மற்றும் புகைப்பட தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.   இந்த தொழிலாளர்கள் தற்போது கிடைக்கின்ற  வேலைகளைச் செய்து குடும்பத்தினரை காப்பாற்றி வருகின்றனர்.  

கடும் நெருக்கடியில் தொழிலாளர்கள்
பாதிப்பு குறித்து மதுரை மாவட்ட வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர்கள் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் கே. பாஸ்கர்  கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் மட்டும் 1500 தொழிலாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள னர். பதிவு செய்யாமல் சுமார் 20 ஆயிரம்  தொழிலாளர்கள் தங்களுடைய வீடுகளில் மற்றும் சிறிய அளவில் கடை வைத்து வீடியோ மற்றும் புகைப்பட தொழில் சார்ந்த தொழில்களை செய்து வருகி றார்கள். 
வருடத்தில் அதிகபட்சம் நான்கு மாதங்கள் மட்டுமே விஷேசங்கள்  இருக்கும். பின்னர்  மாதத்திற்கு 3 அல்லது 4 தான் இருக்கும். ஒரு நிகழ்ச்சிக்கு வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து அதற்கான தொழில்நுட்ப பணிகளை முடித்துக் கொடுப்பதற்கு குறைந்தபட்சம் 10 முதல் 15  தினங்கள் ஆகும். ஒரு வீடியோ எடுக்கும் கலைஞருக்கு 2 ஆயிரம்  ரூபாயும் புகைப்படம் எடுக்கும் நபருக்கு குறைந்தபட்சம் 4 ஆயிரம் ரூபாய் வரை ஊதியமாக கிடைக்கும். ஒரு சிறிய நிகழ்ச்சிக்கு குறைந்தபட்சம் 25 ஆயிரம் வரை புகைப்படம் மற்றும் வீடியோவிற்கு வாங்கப்படும் நிலையில் ஆல்பம் வீடியோ எடிட்டிங் கேமரா வாடகை என்று ரூ.15 ஆயிரம் வரை செலவுகள் ஆகிவிடும். மீதமுள்ள தொகைதான் வீடியோ, போட்டோ எடுப்பவர்களுக்கு கிடைக்கும் . அதிலும் சிலர் முழு தொகையும் கொடுக்கமாட்டார்கள். அதிலிருந்து குறைத்துத்தான் கொடுப்பார்கள். மீண்டும் அந்த நபர்கள் வேலை கொடுக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் கொடுக்கும் தொகையை பெற்றுக் கொண்டு தான் வருவோம். நாங்கள் ஒரு நிகழ்வை ஆவணப்படுத்தி வைக்கின்றோம் என்கின்ற நோக்கம் பலருக்கும் இருப்பதில்லை. இன்றைக்கும் இதுபோன்ற வீடியோ புகைப்படக் கலைஞர்களின் கைவண்ணம் தான் பல்வேறு சம்பவங்களில் ஆவணங்களாக மாறி வருகிறது. .இந்த தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை இன்றைக்கு கேள்விக்குறியாக மாறியுள்ளது.

கொரோனா நோய் பரவலால் மண்டபங்கள், கோயில்கள் மூடப்பட்டன.  சுபநிகழ்ச்சிகள் அனை த்தும் ரத்து செய்யப்பட்டன.இதனால் வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கும் தொழிலாளர்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். எங்களுடைய தொழிலுக்கு வங்கிகளில் கடன் வாங்க முடியாத சூழ்நிலையில், பெரும் சிரமங்களை சந்தித்து  தொழிலுக்கான கேமராக்களை பல லட்ச ரூபாய் செலவில் வாங்கியுள்ளோம். இது போன்ற தொழில்களுக்கு பெரும் கடன் உதவியோ அல்லது வங்கிகள் மூலமாக கடனுதவியோ அரசு  செய்வது கிடையாது. இன்றைக்கும் சென்னை , மதுரை போன்ற வரலாற்று பாரம்பரியமிக்க நகரங்களில் கடந்த கால புகைப்படங்கள்  இந்த தொழிலுக்கான ஆவண சாட்சி யாகும். அதேபோல்தான் வீடியோ தொழிலும் .கொரோனா ஊரடங்கால் தமிழகம் முழுவதுமே இத்தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறார்கள். அரசு மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், மக்கள் பிரதிநிதிகள் எங்கள் தொழிலை சார்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் வரை குறைந்தபட்சம் வருமானம் கிடைக்கும் வகையில் உதவியினை செய்திட முன் வர வேண்டும் என்று தெரிவித்தார்.

தனி நலவாரியம் அமைத்திடுக  
புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும்  கலைஞர் தணிகைமணி என்பவர் கூறுகையில், எங்கள் தொழிலுக்காக தனி நலவாரியம்  கிடையாது. மற்ற தொழில்களை போல்  வீடியோ மற்றும் புகைப்பட தொழிலுக்கு என்று தனி நலவாரியம் இருந்தால் இது போன்ற பேரிடர் காலத்தில் எங்களுக்கான உதவிகளை நாங்கள் கேட்டுப் பெற்றுக் கொள்வோம் .எனவே அரசு வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கும் தொழிலை அங்கீகாரம் செய்து அதை ஒரு ஆவணப் படுத்தும் தொழிலாக நினைத்து அதற்கான தனி நல வாரியத்தை உருவாக்கிட வேண்டும் என்றார்.

நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: சிறிய அளவில் நிகழ்ச்சிகள் என்றாலும் வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்காமல் யாரும் இருக்க மாட்டார்கள். ஏனென்றால் அது அவர்கள் வீட்டு சுப நிகழ்ச்சியில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. மேலும் தற்போது உள்ள தொழில்நுட்ப சாதனங்கள் மூலமாக புதிய முறைகளைக் கையாண்டு புகைப்படங்கள் வீடியோக்களை எடுத்து வருகிறோம் . கடந்த நான்கு மாதங்களாக எந்தவொரு நிகழ்ச்சிக்கும் செல்ல முடியாததால் பெரும் இழப்பை சந்தித்து வருகிறோம். வைகாசி மாதம் சுபநிகழ்ச்சிகள் அதிகம் நடக்கும். அடுத்துள்ள மாதங்களிலும் இதே நிலை நீடித்தால் பெரும் பொருளாதார இழப்பு மட்டுமின்றி இத்தொழிலை விட்டு பலரும் வேறு தொழிலுக்கு செல்லும் நிலை ஏற்படும் .எனவே அரசு எங்களைப் போன்ற தொழிலாளர்களை பாதுகாத்திட உரிய நடவடிக்கை எடுத்து  தொழிலை சார்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் வரை குறைந்தபட்சம் வருமானம் கிடைக்கும் வகையில் உதவியினை செய்திட முன் வர வேண்டும். மேலும் தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம்  அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
-ஜெ.பொன்மாறன்