திருச்சிராப்பள்ளி:
திருச்சி மாவட்ட மக்களின் பாரம்பரிய சந்தையாக காந்தி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு திருச்சி மாவட்டம் மட்டுமில்லாமல் அருகில் உள்ள பல மாவட்ட மக்களும், விவசாயிகளும் விளைப் பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்யும் இடமாகஉள்ளது.காந்தி மார்க்கெட்டில் சுமார் 500 கமிஷன்மண்டிகளும், 2500 சில்லரை கடைகளும் உள்ளன. தினமும் பல ஆயிரம் பேர் வந்துகாய்கறிகளை வாங்கி செல்லும் இடமாகவுள்ளது. இதை நம்பி 3000 வியாபாரிகளும், 5000 தொழிலாளர் குடும்பங்களும் உள்ளன. மேலும் மாநகராட்சிக்கு வருடத்திற்கு ரூ.1 கோடிக்கு மேல் வருமானத்தை வழங்குகிறது.
இந்நிலையில் போக்குவரத்து நெரிசலைகாரணம் காட்டி திருச்சி நகரத்திற்கு வெளியே 17 கி.மீ. தூரம் தாண்டி மணிகண்டம் அருகே வேளாண் விற்பனைத்துறை மூலம் சுமார் 250 கடைகள் கட்டப்பட்டு அதை காந்தி மார்க்கெட் வியாபாரிகளுக்காக வழங்கி மார்க்கெட்டை இடமாற்றம் செய்வதென முடிவெடுத்திருப்பது எந்த வகையிலும் நியாயமற்றது. எனவே காந்தி மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தி மார்க்கெட்டை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 4 மாத காலமாகபொன்மலை ஜி-கார்னர் பகுதியில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் காய்கறி மார்க்கெட்டில்கழிப்பறை, குடிநீர், தொழிலாளர் தங்கும் இடம்போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, எல்எல்எப் சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்டதலைவர் ஜி.கே.ராமர், எல்.எல்.எப் மாநிலதுணை செயலாளர் பிரபாகரன் ஆகியோர் தலைமை வகித்தனர். போராட்டத்தை விளக்கிசிபிஎம் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயபால், சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் ஆகியோர் பேசினர். இதில் சிஐடியு, எல்எல்எப் சுமைப்பணி தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.