உதிக்கட்டும் தமிழ்நாடு வங்கி காலத்தின் குரலாய் ஒரு கோரிக்கை
நவீன தாராளமயமாக்கல் கொள்கை உலகெங்கும் நிதி மூலதனத்தைத் தங்கு தடையின்றி நாடுகளைக் கடந்து பெருமுதலாளிகளுக்கு லாபமீட்டும் ஒரு பெரும் கருவியாக மாற்றியுள்ளது. இதனால் உலகச் செல்வம் முழுவதும் ஒரு சிறிய பகுதியினரிடையே குவிந்து வருவதும், ஏழை மக்கள் மேலும் ஏழ்மையில் தள்ளாடும் நிகழ்வு களும் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன. இத்த கைய உலகளாவிய நெருக்கடியில், கூட்டுறவு அமைப்புகள் மட்டுமே சாதாரண மக்களின் துயர் துடைக்கும் அரணாகத் திகழ்கின்றன. ஐரோப்பா, கனடா, ஆப்பிரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளிலும், அமெரிக்காவின் சில மாநிலங்களிலும் கூட்டுறவு இயக்கம் மூலம் வங்கிகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக சீனா, வியட்நாம், கியூபா மற்றும் வடகொரியா போன்ற சோசலிச நாடுகளில் கூட்டுறவின் பங்கு அளப்பரியது. இங்கெல்லாம் தனிநபர் லாபம் தடுக்கப்பட்டு, அதன் பயன் முழுவதும் உறுப்பினர்களுக்கே சென்றடைகிறது. ஒன்றிய அரசின் கூட்டுறவு விரோத நடவடிக்கைகள் இந்தியாவில் இன்றைய நிலையில் ஒன்றிய பாஜக அரசு, கூட்டுறவு அமைப்புகளைச் சீர ழிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காகவே ஒன்றிய உள்துறை அமைச்சரின் கீழ் கூட்டுறவுப் பொறுப்பு கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் கூட்டுறவு பற்றிய கொள்கை என்பது அதன் ஜனநாயகத் தன்மையிலிருந்து நீர்த்துப் போகச் செய்யும் நோக்கில் அமைந்துள்ளது. கம்பெனிகளில் ஒருவர் எத்தனை பங்குகள் வைத்திருந்தாலும் அத்தனை வாக்குகள் என்ற நிலை இருக்கும்; ஆனால் கூட்டுறவைப் பொறுத்தவரையில் ஒருவர் எத்தனை பங்குகள் வைத்திருந்தாலும் ஒரு வாக்குதான். இந்த ஜனநாயக அடிப்படையைச் சிதைத்துத் தனியாருக்குத் தாரைவார்க்கவே ஒன்றிய அரசு அதிக முக்கியத்துவம் தருகிறது. நகரக் கூட்டுறவு வங்கிகள் நட்டமடைந்தால் மூடிவிடுவது என்றும், லாபமீட்டக்கூடிய வங்கிகளைச் சிறுநிதி வங்கிகளாகவும் (Small Finance Bank) அல்லது தனியார் வங்கிகளாகவும் மாற்றிட ரிசர்வ் வங்கி கொள்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளைப் பலப் படுத்த கடந்த 20 ஆண்டுகளில் ஒன்றிய அரசிடமிருந்து எந்த உதவியும் இல்லை. இறுதியாக 2004-இல் பேராசிரியர் வைத்திய நாதன் குழுவின் பரிந்து ரை அடிப்படையில் சுமார் ரூ.11,000 கோடி மறு முத லீட்டு நிதியாக வழங்கப் பட்டது. அதற்குப் பிறகு நிதிநிலை அறிக்கை களில் கூட்டுறவு வளர்ச்சி பற்றிப் பேசப்படவே இல்லை. வணிக வங்கிகளின் இணைப்பும் வராக்கடன் மோசடியும் பொதுத்துறையில் இருந்த 27 வணிக வங்கிகளை 12-ஆகக் குறைத்து ஒருங்கி ணைத்ததன் பின்னணியில் ஒரு பெரும் வித்தை ஒளிந்துள்ளது. பெருமுதலாளிகளின் வராக் கடனை எளிதாகத் தள்ளுபடி செய்யவே இந்த இணைப்பு பயன்பட்டது. கடந்த பதினொரு ஆண்டுகளில் (31.3.25 வரை) மட்டும் சுமார் 16.25 லட்சம் கோடி ரூபாயை, சாதாரண மக்களின் சேமிப்பு மூலம் கிடைத்த லாபத்திலிருந்து பெரும் பணக்காரர்களுக்குத் தாரை வார்த்துள்ளனர். இந்தப் பின்னணியில்தான் நாம் கூட்டுறவு வங்கி களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டி யுள்ளது. கேரள வங்கியின் சாதனை முன்மாதிரி கேரளத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற இடது ஜனநாயக முன்னணி அரசு, ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலத்திற் கெனத் தனி வங்கி தேவை என்ற அடிப்படையில் ‘கேரள வங்கி’யை உருவாக்கியது. 14 மாவட்ட மத்திய வங்கிகளை இணைத்து உருவாக்கப்பட்ட இவ்வங்கி, இன்று ரூ.1,30,000 கோடியைக் கடந்த வர்த்தகத்துடன் ஆசியாவிலேயே பெரிய கூட்டுறவு வங்கி என்ற அந்தஸ்தை எட்டியுள்ளது. அங்கு கூட்டுறவில் நிர்வாகப் பொறுப்புக்கு வரு பவர்கள் நேர்மையாளர்களாகவும் சுய நலம் இல்லாதவர்களாகவும் இருப்பதை உறுப்பி னர்கள் உறுதி செய்கிறார்கள். இவ்வங்கி மூலம் விவசாயிகளுக்கு 5.25% வட்டி விகிதத்தில் கடன் கிடைப்பதோடு, மானியங்கள் வழியாகவும் விவ சாயிகள் பெரும் பயனடைகின்றனர். தமிழகத்திற்கு ‘தமிழ்நாடு வங்கி’ ஏன் அவசியம்? தமிழகத்திலும் இத்தகைய வங்கி உரு வாக்கப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு உருவாக்குவதன் மூலம் ஏற்றத்தாழ்வான வளர்ச்சி சீரமைக்கப்படும். இதற்கான கொள்கை ரீதியான மாற்றம் தேவை. வலுவான கூட்டுறவு வங்கி தமிழகப் பொருளா தாரத்தை மேலும் வலுப்படுத்தும் என்பதில் ஐய மில்லை. தமிழ்நாடு வங்கி உருவாவதால் கிடைக்கும் நன்மைகள்: * விவசாயக் கடன் பங்களிப்பு: தற்போது அகில இந்திய அளவில் விவசாயக் கடன் பங்கில் 11% ஆக உள்ள நமது நிலையை, கேரளாவைப் போல் 40% க்கும் மேலாக உயர்த்த முடியும். *நிர்வாகச் சீரமைப்பு: ஒருங்கிணைந்த வங்கி அமைப்பால் தொழில்நுட்ப மற்றும் நிர்வாகச் செலவுகள் குறையும். கணினிமயம் மற்றும் நவீனத் தணிக்கை மூலம் நிர்வாகம் வெளிப்படையானதாக மாறும். *நிதித் தன்னிறைவு : வங்கியின் மூலதனம் அதி கரிப்பதால், மாநில அரசின் நிதி ஈட்டளிப்பைக் கூடக் குறைக்க முடியும். நிதித் தட்டுப்பாடுகள் களைந்து தமிழகம் முழுவதும் ஒரே சீரான வளர்ச்சியைத் திட்டமிட முடியும். * வட்டி விகிதக் குறைப்பு: மாநிலத் தலைமை வங்கி யிடமிருந்து தற்போதுள்ள 7% கடனுக்கான வட்டி விகிதத்தை 5.25% ஆகக் குறைக்க வாய்ப்பு ஏற்படும். இது விவசாயிகளைச் சென்றடையும் போது பெரும் மாற்றத்தை உண்டாக்கும். *இளம் வாடிக்கையாளர் ஈர்ப்பு: நவீன வங்கித்துறை மாற்றங்களை உள்வாங்கிச் செயல்படப் பெரிய வங்கி என்ற நிலை மிகவும் உதவிகரமாக இருக்கும். வணிக வங்கிகளின் இணைப்பு பணக்காரர்களுக்கானது; ஆனால் கூட்டுறவு வங்கிகளின் இணைப்பு ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கானது. எனவே, தமிழ்நாடு வங்கி என்பது வெறும் நிதி நிறுவனம் அல்ல; அது கூட்டுறவு அமைப்புகளை ஒன்றிய அரசு அபகரிக்கும் நோக்கத்தைத் தடுத்திடவும், மாநில அரசின் உரிமையைப் பாதுகாக்கவும் எடுக்கப்பட வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாகும். இதற்குத் தேவையானது மாநில அரசின் கொள்கை உறுதி மட்டுமே!
