tamilnadu

‘மதவெறியை மாய்ப்போம்! மக்கள் ஒற்றுமை காப்போம்!’ மயிலாடுதுறையில் நடைப்பயணம் சிபிஎம் எழுச்சியுடன் துவக்கியது!

‘மதவெறியை மாய்ப்போம்! மக்கள் ஒற்றுமை காப்போம்!’ மயிலாடுதுறையில் நடைப்பயணம் சிபிஎம் எழுச்சியுடன் துவக்கியது!

மயிலாடுதுறை, டிச. 14 – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டக் குழு சார்பில், ‘மதவெறியை மாய்ப்போம்! மக்கள் ஒற்றுமை, மாநில உரிமைகளை காப்போம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து, 9 நாட்கள், 300 கி.மீ. தூர நடைப்பயணம் டிசம்பர் 14(ஞாயிற்றுக்கிழமை) தரங்கம்பாடி வட்டம், தில்லையாடியில் எழுச்சியுடன் துவங்கியது.  தியாகி வள்ளியம்மை நினைவிடத்தில் உள்ள மகாத்மா காந்தியடிகள் மற்றும் தில்லையாடி வள்ளியம்மை சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின், மணி மண்டபம் அருகில் நடைபெற்ற நடைப்பயண விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஏ. ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ், மாவட்டச் செயலாளர் பி. சீனிவாசன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி. சிங்காரவேலன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ். துரைராஜ், ப. மாரியப்பன், டி.சிம்சன், சி.விஜயகாந்த், ஜி. வெண்ணிலா, கே.பி. மார்க்ஸ், டி.ஜி. ரவிச்சந்திரன், ஏ. அமுல் காஸ்ட்ரோ, மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.  ‘திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்ற முடியாது!’  நடைப்பயணத்தை செங்கொடியசைத்து துவக்கி வைத்த கே. சாமுவேல்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அயோத்தி வடக்கில் இருக்கிறது. திருப்பரங்குன்றம் தமிழ்நாட்டில் இருக்கிறது. ஒருபோதும் திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்ற முடியாது என்பதை தமிழ்நாட்டு மக்கள் பாஜகவுக்கு உணர்த்துவார்கள்” என்று திட்டவட்டமாகக் கூறினார்.  அவர் மேலும் கூறுகையில், “மயிலாடுதுறை மண், பண்ணையார்களின் அட்டூழியத்திற்கு எதிராக செங்கொடி இயக்கத்தின் தலைமையில் போராடிய மண். இன்றைக்கும் நம் கண் முன்னால் வெண்மணி நினைவாலயம் இருக்கிறது. ஆனால், இப்போது சாதி, மதவெறியர்கள் மக்களைப் பிளவுபடுத்த முயற்சிக்கிறார்கள். மோகன் பகவத் மற்றும் பாஜக தலைவர்கள் திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம் என்று கூறி, மக்களை மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும் பிளவுபடுத்த முயற்சிக்கிறார்கள். நூறாண்டுக்கு மேலாக அமைதியாக உள்ள திருப்பரங்குன்றத்தின் வழிபாட்டு உரிமையில் தலையிடுவதை மக்கள் முறியடிப்பார்கள்” என்றார். மேலும், நாட்டின் இயற்கை வளங்களை அதானி, அம்பானி போன்றோர் கொள்ளையடிப்பதற்கு ஒன்றிய அரசே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார். மக்கள் வரவேற்பு பட்டாசு முழங்க, தோழர்களின் உணர்ச்சிமிக்க முழக்கங்களுக்கு மத்தியில் நடைப்பயணம் துவங்கியது. முதல் நாள் நடைப்பயணம் தில்லையாடி ஆற்றங்கரை, திருவிடைக்கழி, கொங்கராயன் மண்டபம், எரவாஞ்சேரி, திருவிளையாட்டம், அரும்பாக்கம், பனங்குடி, நல்லாடை வழியாக இலுப்பூர் வந்தடைந்தது. அங்கு தெருமுனைப் பொதுக்கூட்டத்துடன் முதல் நாள் நிறைவுற்றது. ஒவ்வொரு பகுதியிலும் கட்சி கிளைகள் சார்பில் ஆரத்தி எடுத்தும், பணமாலை அணிவித்தும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இரண்டாவது நாளான திங்களன்று பூதனூர் கிராமத்தில் நடைப்பயணம் துவங்குகிறது.            (ந.நி.)