ஊரக வேலை ஒழிப்புச் சதியை எதிர்த்து உரத்து முழங்குவோம்!
“அனைத்து குடிமக்களுக்கும் வேலை செய்யும் உரிமை அடிப்படை உரிமையாக உத்தரவாதப்படுத்தப்படும். சாதி, மத, பால் வேறுபாடுகள் இன்றி அனைவருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் உறுதி செய்யப்படும்” என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான கொள்கை முழக்கம். 2004-இல் இடதுசாரிகளின் ஆதரவுடன் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இடதுசாரிகளின் வலுவான அழுத்தம் காரணமாக கிராமப்புற மக்களின் துயர் துடைக்கக் கொண்டு வந்தது தான் ‘தேசிய கிராமப்புற வேலை உறுதிச் சட்டம் 2005’. இது வெறும் அரசாங்கத் திட்டம் மட்டுமல்ல, உழைக்கும் வர்க்கம் போராட்டக் களங்களின் வழியாக வென்றெடுத்த சட்டப்பூர்வ உரிமையாகும். அனுபவத்திலிருந்து பிறந்த சட்டம் தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் ஏதோ அவசரகதியில் உருவாக்கப்பட்டதல்ல. மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த 1977-ஆம் ஆண்டு முதல் அரசு அமல்படுத்திய பல்வேறு வேலைத் திட்டங்களில் இடதுசாரிகள் ஆற்றிய பங்களிப்பும், அதில் கிடைத்த 30 ஆண்டுகால அனுபவங்களும் இச்சட்டத்தின் அடித்தள மாகும். முந்தைய திட்டங்களில் இருந்த அதிகார வர்க்க முறைகேடுகள் மற்றும் உணவு தானிய விநியோகச் சிக்கல்களைக் களைந்து, இது ஒரு வலுவான சட்டமாக வடிவமைக்கப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளில் இத்திட்டம் வறுமை ஒழிப்பில் உலகிலேயே முதன்மையானதாகத் திகழ்ந்தது. குறிப்பாக, வட இந்திய மாநிலங்களில் மிகக் குறைந்த கூலி பெற்று வந்த பெண் தொழிலாளர்களின் ஊதியம் கணிசமாக உயர இச்சட்டம் அரணாக அமைந்தது. பொருளாதாரப் புரட்சி தொடக்கத்தில் 90 கோடி மனித சக்தி நாட்களாக இருந்த இத்திட்டம், 2024-25இல் 318 கோடி நாட்களாக உயர்ந்தது. தினக்கூலி 80 ரூபாயிலிருந்து 336 ரூபாயாக உயர்ந்ததுடன், பெண்களின் பங்கேற்பு 70 சதவீதத்தைக் கடந்தது. தமிழ்நாட்டில் 80 சதவீதத்திற்கும் அதிக மான பெண் தொழிலாளர்கள் இதன் மூலம் பயன டைந்தனர். கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தி உயர்ந்ததால், சிறிய நக ரங்களில் சில்லறை வர்த்தகம் செழித்தது. வறுமையின் பிடியி லிருந்து ஐந்தரை கோடி குடும்பங்கள் தளர்வு பெற வழிவகுத்த இத்திட்டம், இந்தியாவின் மிக முக்கியமான பொருளாதாரப் பாதுகாப்புக் கவசமாக மாறியது. பாஜக அரசின் திட்டமிட்டச் சிதைப்பு 2014-இல் ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி, இத்திட்டத்தைக் “காங்கிரஸ் அவலத்தின் சின்னம்” என்று கேலி செய்தார். அன்று முதல் நிதி ஒதுக்கீட்டைக் குறைப்பது, விதிகளைத் திருத்துவது என இத்திட்டத்தைச் சிதைக்கும் வேலைகளை பாஜக அரசு செய்தது. தொழி லாளர் கூலிக்கும், பொருட்களுக்கான செல வினத்திற்குமான விகிதத்தை மாற்றி அமைத்து, ஒப்பந்ததாரர்களும் பாஜக பிரமுகர்களும் கொள்ளையடிக்க வழிவகுத்தது. இத்திட்டத்தில் ஊழலைத் தடுக்க உருவாக்கப்பட்ட ‘சமூகத் தணிக்கை’ (Social Audit) முறையை முடக்கி யதன் மூலம், முறைகேடுகளுக்கு பாஜக அரசு கதவு திறந்துவிட்டது. இதன் உச்சகட்டமாக, தற்போது மகாத்மா காந்தி பெயரிலான இச்சட்டத்தை நீக்கிவிட்டு, ‘விபி-ஜி ராம் ஜி’ (VB-G Ram G 2025) என்ற புதிய சட்ட மசோதாவை டிசம்பர் 17 நள்ளிரவில் நிறைவேற்றியுள்ளது. சட்டப்பூர்வ உரிமையைப் பறிக்கும் ‘ஜி ராம் ஜி’ மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டத்தில், வேலை கோருவது தொழிலாளர்களின் அடிப்படை உரிமை. தேவை அதிகரித்தால் கூடுதல் நிதி வழங்கப்பட வேண்டும் என்பதே விதி. உதாரணத்திற்கு, கொரோனா காலத்தில் ரூ.60,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பின்னர் தேவைக்கேற்ப ரூ.1,05,000 கோடியாக உயர்த்தப்பட்டது. ஆனால் புதிய திட்டத்தில், மத்திய அரசு 60 சதவீத நிதியை மட்டுமே வழங்கும், மீதி 40 சதவீதத்தை மாநிலங்களே ஏற்க வேண்டும் எனச் சுமை ஏற்றப்பட்டுள்ளது. ஏற்கெனவே நிதி நெருக்கடியில் உள்ள மாநி லங்களால் இதைச் செயல்படுத்துவது சாத்திய மற்றது. இதன் மூலம் கிராமப்புற மக்களின் ‘வேலை பெறும் உரிமையை’ பாஜக அரசு அப்பட்டமாகக் களவாடிவிட்டது. ஜனநாயகப் பரவலாக்கல் சிதைப்பு பழைய சட்டப்படி, கிராம சபைகளே அடுத்த ஆண்டிற்கான வேலைகளைத் தீர்மானிக்கும் ஜனநாயக முறை இருந்தது. ஆனால் புதிய திட்டத்தில், மத்திய அரசே அனைத்தையும் தீர்மானிக்கும் எதேச்சதிகார நிலையை உரு வாக்கியுள்ளது. ஏற்கெனவே ஆதார் இணைப்பு மற்றும் தொழில்நுட்பக் காரணங்களைக் கூறி 25 கோடி தொழிலாளர்களில் பாதிப் பேரை நீக்கிய அரசு, தற்போது மேலும் சிக்கலான தொழில்நுட்பங்களைப் புகுத்துவது ஏழை மக்களைத் திட்டத்திலிருந்து வெளியேற்றும் மிகப்பெரும் சதியாகும். மேலும், வேலை நேரத்தை 7 மணியிலிருந்து 12 மணி நேரமாக நீட்டிக்க வழிசெய்து உழைப்புச் சுரண்டலுக்கும் ஊக்கம் கொடுத்துள்ளது. 125 நாட்கள் வேலை என்பது ஏமாற்று வித்தை புதிய திட்டத்தில் 125 நாட்கள் வேலை என அறிவித்திருப்பது வெறும் கண் துடைப்பு. சட்டப் பாதுகாப்பு இல்லாத ஒரு திட்டத்தில் எத்தனை நாட்கள் அறிவித்தாலும் பயனில்லை. பாஜக அரசு இதுவரை 100 நாள் வேலையைக்கூடச் சரியாக வழங்காத நிலையில், 125 நாட்கள் வழங்கும் என்பது அப்பட்டமான பொய். கடந்த 10 ஆண்டுகளில் கார்ப்பரேட்டுகளுக்கு 16 லட்சம் கோடி ரூபாய் வராக்கடனைத் தள்ளுபடி செய்த பாஜக அரசு, ஏழை விவசாயத் தொழிலாளர் களுக்கு வழங்கிய 5 லட்சம் கோடியைக் கொடுக்க மனமில்லாமல் இத்திட்டத்தில் மண்ணைப் போட்டுள்ளது. கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் இந்தச் சதிக்கு எதிராக மக்களை அணிதிரட்டுவோம்! டிசம்பர் 24 ( நாளை) தமிழகம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நடத்தும் மாபெரும் போராட்டத்தில் பெரும் திரளாக அணிவகுப்போம்! பாதுகாப்பான வேலை உத்தரவாதச் சட்டத்தை மீட்டெடுப்போம்!
