கண்ணகி நகர் கபடிப் புயல் கார்த்திகா தங்க மகள் பெற்ற உற்சாக வரவேற்பும், அரசு அங்கீகாரமும்!
சென்னை, அக்.26 - பஹ்ரைனில் நடைபெற்ற மூன்றாவது ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் கபடி அணியின் துணைத் தலைவர், சென்னையின் கண்ணகி நகரைச் சேர்ந்த வீராங்கனை கார்த்திகா, ஞாயிறன்று தாயகம் திரும்பியபோது உற்சாக வரவேற்பைப் பெற்றார். கட்டடத் தொழிலாளியின் மகளாகவும், ஆட்டோ ஓட்டுநரின் மகளாக வும் சவாலான பின்னணி யிலிருந்து வந்த 18 வயது கார்த்தி காவின் வெற்றி, கண்ணகி நகருக்குப் புதிய அடையா ளத்தைப் பெற்றுத் தந்துள்ளது. முதல்வரின் பாராட்டு மற்றும் ஊக்கத்தொகை கார்த்திகாவின் சாதனையைப் பாராட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கார்த்திகா மற்றும் திருவாரூரைச் சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸ் ஆகிய இருவருக்கும் தலா ரூ. 25 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கி கௌரவித்தார். கண்ணகி நகரில் கடந்த 4 ஆண்டுகளில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து கார்த்திகாவிடம் கேட்டறிந்ததாகவும், எளிய பின்புலங்களில் இருந்து சாதிக்கும் ஒவ்வொரு வீரரின் வெற்றியிலும் சமூகநீதி மண் பெருமை கொள்வதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கோரிக்கை ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற கார்த்திகாவுக்கு மேலும் உரிய அங்கீகாரத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஹரியானா மாநில அரசு தங்கள் வீராங்கனைகளுக்கு தலா ரூ. 3 கோடி பரிசு அறிவித்திருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த. செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர், “மாநில அரசு, வீராங்கனை கார்த்திகாவுக்கு அதிக பரிசுத்தொகை, அரசு வீடு மற்றும் அரசுப் பணி ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர். மேலும், கண்ணகி நகர் பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய பெண்கள் கபடி பயிற்சி மையம் மற்றும் விளையாட்டுத் தளம் அமைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
