tamilnadu

img

மறைந்த டாஸ்மாக் ஊழியர் குடும்பத்திற்கு நிதியுதவி!

மறைந்த டாஸ்மாக் ஊழியர் குடும்பத்திற்கு நிதியுதவி!

பொள்ளாச்சி, அக்.26- மறைந்த டாஸ்மாக் ஊழியர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வு வெள்ளியன்று பொள்ளாச்சியில் நடைபெற்றது. பொள்ளாச்சி டாஸ்மாக் குடோனில் பணியாற்றி வந்தவர் பா.பரணிதரன். சிஐடியு ஊழியராக உள்ள பா.பரணிதரன், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் காலமானார். ஏழ்மை நிலையிலுள்ள இவரின் குடும்பத்திற்கு உதவும் பொருட்டு, சிஐடியு டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் கோவை மண்டல ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்தது. இதனையடுத்து, மண்டல அளவில் டாஸ்மாக் குடோனில் பணியாற்றும் ஊழியர்களிடம் ரூ.4லட்சத்து 500ஐ திரட்டினர். இந்நிதியை வழங்கும் நிகழ்வு வெள்ளியன்று பொள்ளாச்சியில் உள்ள சக்தி ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு, மாவட்ட துணைத்தலைவர் எ.திருமலை ராஜாராம் தலைமை தாங்கினார். கிடங்கு தலைவர் என்.மாயவன் வரவேற்றார். மண்டலப் பொறுப்பாளர் எம்.எஸ்.பீரமுகம்மது துவக்கவுரையாற்றினார். இந்த நிகழ்வில், டாஸ்மாக் குடோன் அலுவலக ஊழியர்கள், டெலிவரி ஒர்க்கர்ஸ் யூனியன், டாஸ்மாக் கிடங்கு சுமைப்பணி தொழிலாளர்கள் மற்றும் மண்டலத் தொழிலாளர்கள் சார்பில் திரட்டப்பட்ட நிதியினை, பரணிதரனின் இணையர் உமாதேவியிடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஆர்.வெங்கிடபதி, மாநில சிறப்புத் தலைவர் எஸ். குணசேகரன், சிஐடியு கோவை மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் ஆர்.ராஜன், மண்டல நிர்வாகி சி.கார்த்திக் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சுமைப்பணி சங்க மாநில பொதுச் செயலாளர் ஆர்.அருள்குமார் நிறைவுரையாற்றினார். இந்நிகழ்வில், டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் திரளானோர் பங்கேற்றனர்.