tamilnadu

img

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரிக் கூட்டணி வரலாற்று வெற்றி!

           அரசியல் கட்சி                       பெற்ற வாக்குகள்         இடங்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP)                                6,863,186                 159
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)                                 1,968,716                 40
புதிய ஜனநாயக முன்னணி (NDF)                    500,835                    5
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)              350,429                    3
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK)                257,813                   8
சர்வஜன அதிகாரம் (SB)                                        178,006                   1
ஐக்கிய ஜனநாயகக் குரல் (UDV)                          83,488                    0
பிற கட்சிகள்                                                              945,533                  9 

கொழும்பு, நவ. 15 - இலங்கை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை யுடன் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இலங்கையின் 10-ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழனன்று (நவம்பர் 14) நடைபெற்றது. அன்று இரவே வாக்கு  எண்ணிக்கையும் துவங்கியது. இதில், தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திஸா நாயக்க தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி யான தேசிய மக்கள் சக்தி கூட்டணி (NPP) மொத்தம் 159 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை

இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 225. இவர்களில் 196 உறுப்பினர்கள் வாக்காளர்கள் மூலமாகவும், 29 உறுப்பினர்கள் கட்சிகள் பெறும் வாக்குகள் அடிப்படையில் (தேசிய பட்டியல்) விகிதாச்சார முறையிலும் தேர்வு செய்யப்படுவர். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற குறைந்தது 113 இடங்கள் தேவை. அந்த  வகையில், தேசிய மக்கள் சக்தி கூட்டணியானது, வாக்காளர்கள் மூலம் நேரடியாக 141 இடங்கள், தேசிய பட்டியல் மூலம் 18 இடங்கள் என மொத்தம் 159 இடங்களைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா  பொதுஜன பெரமுன கட்சி, தேசிய பட்டியலை யும் உள்ளடக்கி 145 இடங்களையே பெற்றிருந்தது.  ஆனால், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி அந்த எண்ணிக்கையையும் தாண்டி 159 இடங் களைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி (SJB) 40 இடங்களையும், ரணில் விக்கிரம சிங்கேவின் (NDF) புதிய ஜனநாயக முன்னணி 5 இடங்களையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 3 இடங்களையும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) 8 இடங்களையும், சர்வஜன அதிகாரம் (SB) கட்சி 1 இடத்தையும், பிற கட்சிகள், 9 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

61.56 சதவிகித வாக்குகள்

மேலும், தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி 68 லட்சத்து 63 ஆயிரத்து 186 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தி கூட்டணியானது, பதிவான வாக்குகளில் 61.56 சதவிகிதம் வாக்குகளைப் பெற்றுள்ளது. சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி 19 லட்சத்து 68 ஆயிரத்து 716 வாக்குகளைப் பெற்றுள்ளது. இது பதிவான வாக்குகளில் 17.66 சதவிகிதம் மட்டுமே ஆகும். ரணில் விக்கிரமசிங்கே-வின் புதிய ஜனநாயக முன்னணி வெறும் 5 லட்சத்து 835 வாக்குகளைப் பெற்றுள்ளது. இது 4.49 சதவிகிதம் ஆகும். தமிழர் பகுதிகளிலும் வரலாற்று வெற்றி! இவை அனைத்திற்கும் மேலாக, வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், மட்டக்களப்பு தவிர, யாழ்ப்பாணம் உள்ளிட்ட அனைத்துத் தமிழர் பகுதிகளிலும் ஜனாதிபதி அனுர குமார  திஸாநாயக்கவின் கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது.

மலையகத் தமிழர்கள்  மத்தியிலும் செல்வாக்கு!

மலையகத் தமிழர்கள் அதிகம் வாழும் நுவரெலியா மாவட்டத்திலும் தேசிய மக்கள் சக்தி ஆதிக்கம் செலுத்தியுள்ளது. மலையக மக்கள் செறிந்து வாழும் கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, பதுளை, களுத்துறை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் தேசிய மக்கள் சக்தி செல்வாக்கு பெற்றுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை இணைக்கும் வகையில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி அமைந்துள் ளது. கடந்த முறை இலங்கை தமிழ் அரசுக் கட்சி யிடமிருந்த யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம், இம்முறை தேசிய மக்கள் சக்தி வசமாகியுள்ளது. இங்கு 6 இடங்களில் 3 இடங்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.  மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மூன்று நிர்வாக மாவட்டங்கள் அடங்கிய தேர்தல் மாவட்டமாக வன்னி தேர்தல் மாவட்டம் விளங்கும் நிலையில், இங்கும் தேசிய மக்கள் சக்தி கூட்டணி அதிக வாக்கு களைப் பெற்றுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில்  முஸ்லிம்கள் பேராதரவு!

கண்டி மாவட்டத்தில் மட்டும் 5 லட்சம் வாக்குகளையும், 9 நாடாளுமன்ற இடங்களையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. நுவரெலியா மாவட்டமும் இம்முறை தேசிய மக்கள் சக்தி வசமாகியுள்ளது. திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய மக்கள் சக்திக் கூட்டணிக்கு 8-ஆவது இடமே கிடைத்த நிலையில், இந்தமுறை முதலாவது இடத்தை பெற்றுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் அதிகளவிலான முஸ்லிம்கள் வாழ்ந்து வரும் நிலையில், முஸ்லிம் கட்சிகளையும் தாண்டி, தேசிய மக்கள் சக்தி கூட்டணியை பெரும்பான்மையோர் தேர்ந்தெடுத்துள்ளனர். திருகோணமலை மாவட்டத்திலும், தேசிய மக்கள் சக்தி முன்னிலை பெற்றுள்ளது. மாத்தறை மாவட்டத்தில் 3 லட்சத்து 17 ஆயிரம் வாக்குகளை யும், மொத்தமுள்ள 7 இடங்களில் 6 இடங்களை யும் தேசிய மக்கள் சக்தி கூட்டணி பெற்றுள்ளது. பதுளை மாவட்டத்தில் 2.75 லட்சம் வாக்குகளு டன் மொத்தமுள்ள 8 இடங்களில் 6 இடங்களை தேசிய மக்கள் சக்தி கூட்டணி கைப்பற்றியுள்ளது.

தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற திஸாநாயக்க

குறிப்பாக தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இதுவரை தமிழ் அரசியல் கட்சிகளே வெற்றி பெற்று வந்த நிலையில், முதன்முறையாக மத்தியை ஆட்சி செய்யும் கட்சியொன்று (தேசிய மக்கள் சக்தி கூட்டணி) பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, தமிழர்கள் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங் களில் தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு குறைந்த  அளவிலான ஆதரவே இருந்தது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர்கள் நேரடி யாகவே தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, கடந்த வாரம் வடக்கு மாகாணத்தில் மேற்கொண்ட பிரச்சாரம், அவர் மீது நல்லெண்ணத்தையும், நம்பிக்கையையும் தமிழர்களுக்கு ஏற்படுத்தி யிருப்பதையே தேர்தல் முடிவுகள் பிரதி பலித்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

துடைத்தெறியப்பட்ட ராஜபக்சே குடும்பம்

இலங்கை அரசியல் வரலாற்றில் தவிர்க்க  முடியாத அரசியல் குடும்பமாகக் காணப்பட்ட ராஜபக்சே குடும்பம், இம்முறை இலங்கை நாடாளுமன்ற அரசியல் களத்திலிருந்து  மக்களால் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டுள்ள னர். இந்த தேர்தலில் ராஜபக்சே குடும்பம் சார்பில் போட்டியிட்ட ஒரே நபரான சமல் ராஜபக்சேவின் புதல்வர் ஷஷிந்திர ராஜபக்சேவும் தோற்கடிக்கப் பட்டார். அவர்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு ஒரு இடம்  கூட கிடைக்கவில்லை. தேசியப்பட்டியலில் மட்டும் இரண்டு இடங்கள் கிடைத்துள்ளன.

இடதுசாரி அரசியல் திசையில் இன்னுமொரு  அடி எடுத்து வைத்த இலங்கை மக்கள்!

கடந்த செப்டம்பர் 21 அன்று இலங்கை ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற்றது.  இதில், இலங்கையின் 76 ஆண்டுகால ஜனநாயக ஆட்சி மற்றும் 46 ஆண்டு  கால ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில், முதலாளித்துவக் கட்சிகள் தோற்கடிக்கப்பட்டன. மார்க்சிய - லெனினியத்தை தமது அடிப்படைக் கொள்கையாக அறிவித்துக் கொண்ட ஜனதா விமுக்தி பெரமுனா (JVP) தலைவரான அனுர குமார திஸாநாயக்க மாபெரும் வெற்றி பெற்றார். 2022-இல் இலங்கையில் மிகக் கடுமையான பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டபோது, மக்கள் போராட்டத்தை முன்னின்று நடத்திய திஸாநாயக்க, ‘மாற்றம் ஒன்றே  தீர்வு’ என்ற முழக்கத்தையும், ‘வளமான நாடு, அழகான வாழ்க்கை’ என்ற உத்தர வாதத்தையும் முன்வைத்து, இலங்கை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கினார்.  அவர், ஜனதா விமுக்தி பெரமுனா (JVP) கட்சியின் தலைவர் என்றாலும், தேர்தலில், 27 சிறு அமைப்புக்களையும் இணைத்துக் கொண்டு ‘தேசிய மக்கள் சக்தி’  என்ற கூட்டணியை நிறுவி தேர்தலைச் சந்தித்தார். அதில், அவர் மக்களின் பெருவாரியான ஆதரவைப் பெற்று 9-ஆவது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும், மாற்றத்தை ஏற்படுத்துவதற்கேற்ப எம்.பி.க்களின் பெரும்பான்மை இல்லாததால், ஜனாதிபதி திஸாநாயக்க, நாடாளுமன்றத் தேர்தலை அறிவித்தார். ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து, தற்போது நாடாளுமன்றத் தேர்தலிலும் திஸா நாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளது.