இந்தி திணிப்பு, மதவாதத்திற்கு எதிராக கோடைக்காலம் முழுவதும் பிரச்சாரம் இந்திய மாணவர் சங்கம் அறிவிப்பு
சென்னை, மார்ச் 17 - இந்தி திணிப்பு, மதவாதத்திற்கு எதிராக கோடைக் காலம் முழுவதும் பிரச்சாரம் மேற் கொள்ளப்படும் என்று இந்திய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது. ‘மாநிலக் கல்வி உரிமைப் பாதுகாப்பு’ கருத்தரங்கம் சனிக்கிழமை (மார்ச் 15) மாநிலக் கல்லூரியில் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கம் நடத்திய இந்த நிகழ்வில் ஜான் பிரிட்டாஸ் எம்.பி., பேசியதன் சுருக்கம் வருமாறு: ஜெர்மனியில் மாணவர் அமைப்புகள் கடுமையான போராட்டங்களை நடத்தி இருந்தால் ஹிட்லரால் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றி இருக்கவே முடியாது என்றார் ஐன்ஸ்டீன். இன்றைக்கு தொலைக்காட்சி விவாதங்களில் இந்து-முஸ்லீம் விவா தங்களே பெரும்பாலும் நடக்கிறது. இந்தியாவில் 1168 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவை தவிர்த்து மாநில அரசு நிர்வகிக்கும் ஆயிரக்கணக்கான கல்லூரி கள் உள்ளன. இவற்றில் ஆர்எஸ்எஸ்-சின் காவி கல்வி சிந்தனையை திணிக்கும் முயற் சியை யுஜிசி வரைவு அறிக்கை செய்கிறது. அறிவுசார் மாணவர்களை உருவாக்கும் ஜெஎன்யு பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்த தடை விதித்துள்ளனர்.
ஜெர்மனி யில் ஹிட்லர் மாணவர்களின் சிந்தனையை ஒடுக்கியது போன்று, இந்தியாவிலும் ஒன்றிய பாஜக அரசு செய்கிறது. இவற்றிற்கு எதிராக மாணவர்களும், கல்வியாளர்களும் இணைந்து மதவாதத்தை தீர்க்கமாக எதிர்க்க வேண்டும். ஜனநாயகம், கூட்டாட்சி, மதச்சார் பின்மை ஆகியவற்றின் மீது இந்தியா கட்ட மைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று வரை யறைகளை பாதுகாக்க பாசிச தன்மை கொண்ட ஆட்சிக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார். கருத்தரங்கை நிறைவு செய்து பேசிய சங்கத்தின் மாநிலச் செயலாளர் கோ.அர விந்தசாமி, “யுஜிசி வரைவு தீர்மானத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை உள்ளடக்கிய பிஎம்ஸ்ரீ திட்டத்தையும், இந்தி மொழி திணிப்பையும் கைவிட வேண்டும். மாநிலத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை ஒன்றிய அரசு கால தாமதமின்றி வழங்க வேண்டும். மாநில உரி மைகளை பறிக்கும் செயல்களை நிறுத்த வேண்டும். இவற்றை மையப்படுத்தி கோடைக் காலம் முழுவதும் பிரச்சாரம் மேற் கொள்வோம்” என்றார்.