புதுச்சேரி சட்டப்பேரவையில் தேசிய கல்விக்கொள்கைக்கு கடும் எதிர்ப்பு ரங்கசாமி அரசை கண்டித்து காங், திமுக வெளிநடப்பு
புதுச்சேரி சட்டப்பேரவையில் என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர் சந்திர பிரியங்கா எழுப்பிய கேள்வியால் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எதிர்கட்சி உறுப்பினர்களால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அவசரகதியில் புதிய கல்வி கொள்கை அமல்படுத்தியதற்கு திமுக,காங்கிரஸ் உறுப்பினர்கள் புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். புதுச்சேரி சட்டப்பேரவையில் திங்கள்கிழமை (மார்ச்-17) நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம் வருமாறு: சந்திரபிரியங்கா (என்ஆர்.காங். உறுப்பினர்): புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளதால் இந்த கல்வியாண்டு முதல் ஆல் பாஸ் முறை ரத்து என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு தொழில் சார்ந்த படிப்புகளை இதர கலைகளை கற்றுத் தர பயிற்று நர்கள், பயிற்சி கூடங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் அனைத்து பள்ளிகளிலும் உரு வாக்கப் பட்டுள்ளதா, இல்லையெனில் எந்த கல்வி ஆண்டுக்குள் செய்து முடிக்கப்படும், ஆல்பாஸ் முறை தொடர நடவடிக்கை எடுக்கப்படுமா? அதற்கு கல்வித்துறைஅமைச்சர் நமச்சிவாயம்: இந்த கல்வியாண்டில் ஆல்பாஸ் முறையில் எந்த மாற்றமும் இல்லை. இதுவரை 52 அரசு பள்ளிகளில் தொழில்சார்ந்த பயிற்று நர்கள், பயிற்சி கூடங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் உருவாக்கப் பட்டுள்ளது. அடுத்த கல்வி ஆண்டில் 14 பள்ளிகளுக்கு தொழில்சார்ந்த படிப்புகள் உருவாக்கப்படும். 2028 ம் ஆண்டுக்குள் அனைத்து பள்ளி களிலும் தொழில்சார்ந்த படிப்புகள் உருவாக்கப்படும். சந்திரபிரியங்கா புதிய கல்வி கொள்கை, மும்மொழி கொள்கை ஆகியவற்றில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. தொழில் சார்ந்த படிப்புகளுக்கு பயிற்சி கூடங்கள் தனியார் பள்ளிகளில் உடனடியாக அமைத்துவிடுவார்கள். அரசு பள்ளிகளில் இது முடியாது. 5ம் வகுப்பிலேயே தொழில்படிப்புக்கு பயிற்சி அளிக்கப்படும் என புதிய கல்வி கொள்கையில் உள்ளது. இதனால் மாணவர்கள் பயிற்சி கூடங்களுக்கு செல்வார்கள். அப்படி தொழில் கற்கும் மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வராமல், சம்பாதிக்க சென்றுவிடுவார்கள். இதை 9ம் வகுப்புக்கு மேல் என மாற்றி அமைக்க வேண்டும். நாஜிம் (திமுக): இதனால் தான் நாங்கள் புதிய கல்வி கொள்கையை எதிர்க்கிறோம். சந்திரபிரியங்கா: உங்க பேர பிள்ளைகள் சிபிஎஸ்இ படிக்கிறாங்க, என் பிள்ளைகளும் சிபிஎஸ்இ பள்ளி யில் தான் படிக்கிறார்கள். திமுக,காங்கிரஸ் வெளிநடப்பு இதற்கு திமுக, காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சபையில் கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் சிவா: என்.ஆர் அரசு ஆர்எஸ்எஸ் அரசாக மாறிவருகிறது. என் அப்பா செய்த தொழிலை நானும் செய்ய வேண்டுமா? குலக்கல்வியை எதிர்க்கிறோம். வைத்தியநாதன் (காங்): ஆர் எஸ்.எஸ். கொள்கையை பரப்ப முதலமைச்சருக்கு நெருக்கடி தரு கின்றனர். நாஜிம்: புதிய கல்வி கொள்கை தொடர்பாக சட்டப்பேரவையில் கலந்து ஆலோசித்தீர்களா? எதிர்கட்சி தலைவர் சிவா: புதிய கல்வி கொள்கையை முதலமைச்சர் ஏற்கிறாரா? கல்வி அமைச்சர் நமச்சிவாயம்: தொழில் படிப்புக்கு 9ம் வகுப்பு வரை தேர்வு கிடையாது. தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கை தொடர்பாக தவறான சித்தரிப்பை உருவாக்குகின்றனர். இல்லாததை இருப்பது போலவும், இருப்பதை இல்லாதது போலவும் தொடர்ந்து சித்தரிக்கின்றனர். அப்போது திமுக,காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட பேரவைத் தலைவர் செல்வம், தயவு செய்து கேள்வி எழுப்பியவர்கள் பேசவும், பதில் பெறவும் ஒத்துழைப்பு தாருங்கள். இதேபோல பேசினால் பேரவை யிலிருந்து வெளியேற்ற நேரிடும் என எச்சரித்தார். அப்போது சந்திர பிரியங்கா தனது இருக்கை மீது ஏறி நின்று, தனக்கு பேச வாய்ப்பு தாருங்கள், என்னை பேச விடுங்கள் என கூறினார். எதிர்கட்சி தலைவர் சிவா: குலகல்வியை கொண்டு வருவதை நாங்கள் எதிர்க்கிறோம். ஏன் எந்த விவாதமும் இன்றி புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினீர்கள்? எனக்கேட்டு புதிய கல்வி கொள்கை அமல்படுத்தியதை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக கூறினார். உடனே திமுக, காங்கிரஸ் உறுப்பி னர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.