india

img

இழைத்த அநீதியை மறைக்கும் ஒன்றிய கல்வி அமைச்சர்! - சு.வெங்கடேசன் எம்.பி

இழைத்த அநீதியை மறைக்கும் ஒன்றிய கல்வி அமைச்சர் எனது நாடாளுமன்ற கேள்விக்கு திசை திருப்புகிற பதிலளித்துள்ளதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:

“கல்வித்துறையில் தமிழ்நாட்டிற்கான 2154 கோடியை நிறுத்தியது ஏன்? என்கிற எனது கேள்விக்கு பாஜகவின் தொலைக்காட்சி பங்கேற்பாளர்கள் போலவே பாராளுமன்றத்தில் பதில் சொல்லியுள்ளார் அமைச்சர்.

நாட்டின் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி தருவது நோக்கம் என்கிறார். ஆனால் தமிழ்நாட்டு குழந்தைகளுக்கு மட்டும் நிதியை நிறுத்துகிறார். இது தான் இவர்களது சொல்லும், செயலும்.

நாடாளுமன்றத்தில் நான் சமக்ரா சிக்சா அபியான் திட்டத்திற்கான ரூ 2154 கோடி நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்திருப்பது பற்றிய கேள்வி (எண் 2666/ 17.03.2025) ஒன்றை எழுப்பி இருந்தேன். தமிழ்நாட்டுக்கு ரூ 2154 கோடிகளை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்து இருக்கிறதா? ஏன் நிறுத்தப்பட்டுள்ளது? தேசிய கல்விக் கொள்கையின் பகுதியாக இந்தியைத் திணிக்க முயற்சிப்பது மொழி பன்மைத்துவத்திற்கு எதிரானது இல்லையா? கூட்டாட்சி கோட்பாடுகளுக்கு மாறானது இல்லையா என்றெல்லாம் கேட்டிருந்தேன். இதற்கு பதில் அளித்த ஒன்றிய கல்வி இணையமைச்சர் ஜெயந்த் சவுத்ரி, தேசிய கல்விக் கொள்கை இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியை கொண்டு போய் சேர்க்கும் இலக்கை கொண்டது என்று சிலாகித்து சமக்ரா சிக்சா அபியான் பற்றியும் விலாவாரியாக தெரிவித்துள்ளார். 2023 - 24 இல் ரூ 1876 கோடி தமிழ்நாட்டிற்கு தரப்பட்டது என்றும், 2024 - 25 க்கு 4305 கோடி நிதிக்கு திட்ட ஒப்புதல் குழு இசைவு தந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். தாய்மொழி கல்விக்கு தேசிய கல்விக் கொள்கை முக்கியத்துவம் தருவதாகவும், மும்மொழிக் கொள்கையானது கூட்டாட்சி கோட்பாடுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அமலாக்கப்படும் என்றும், எந்த மொழியும் மாநிலத்தின் மீது திணிக்கப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளார். மாணவர்களின் தெரிவின் அடிப்படையிலேயே மொழிகளை அவர்கள் கற்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். பாஜகவின் தொலைக்காட்சி பங்கேற்பாளர்கள் போலவே அமைச்சர்களின் நாடாளுமன்ற பதில்களும் அமைந்து வருகிறது என்பதன் வெளிப்பாடே இது. கேட்கிற கேள்விகளை விட்டு விட்டு எதையோ சொல்லி திசை திருப்புவது, உண்மையை மறைத்து தகவல்களை தருவது என்ற உத்திகளை நாடாளுமன்ற பதில்களிலும் கடைப்பிடிப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக மாற்றுவதாகும். தமிழ்நாடு தேசிய கல்விக் கொள்கையை அமலாக்குவதாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால் நிதியை நிறுத்தி இருக்கிறோம் என்பது குறித்த ஒரு வார்த்தை கூட அமைச்சரின் பதிலில் இல்லை. தாங்கள் செய்ததை வெளிப்படையாக அவர்களால் சொல்ல முடியவில்லை. முழுப் பூசணிக்காய் சோற்றுக்குள் இருந்து சிரிக்கிறது. நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியை தருவது என்று சொல்லிவிட்டு, கல்விக்கான நிதியை நிறுத்தி வைப்பது என்கிற முரண் எவ்வளவு மோசடித்தனமானது, குரூரமானது, மக்களை ஏமாற்றுவது! இந்தியைத் திணிக்கவில்லை என்று அமைச்சர் தருகிற விளக்கம் இந்த ஆண்டின் மிகச்சிறந்த நகைச்சுவையாக இருக்கும். இந்தி திணிப்பை நியாயப்படுத்தி தினந்தோறும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஜக தலைவர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தி தெரியாவிட்டால் பேல் பூரி கூட சாப்பிட முடியாது என்ற அளவிற்கு அவர்களுடைய விவாத தரம் இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள எல்லா குழந்தைகளும் தமிழ் மொழியில் படிக்கலாம் என்று அமைச்சர் சொல்கிறார். அப்படியானால் தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயாக்களில் இருந்து தானே முதலில் தாய்மொழிக் கல்வி துவங்கி இருக்க வேண்டும்! ஒத்திசைவு பட்டியலில் உள்ள கல்வி சம்பந்தமான முடிவுகளை ஒன்றிய அரசு தன்னிச்சையாக எடுக்கலாமா என்ற கேள்விக்கும் அமைச்சரிடம் விடை இல்லை. எங்கு கேட்டாலும் பொறுப்பான பதில் கிடைக்காது என்கிற ஒன்றிய ஆட்சியாளர்களின் ஜனநாயக விரோத அணுகுமுறையின் உச்சம் நாடாளுமன்றத்திலும் வெளிப்பட்டுள்ளது.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.