எத்தனை முட்டை வாங்கிட்டுப் போனாலும், ஒண்ணு உடைஞ்சு போகுது என்றவரிடம், அப்ப எப்பவுமே ஒண்ணு கூடுதலா வாங்கிட்டுப் போயிடுங்கன்னு கலாய்த்துக் கொண்டிருப்பது காதில் விழுந்தது.
நானாவது பரவாயில்ல... என் பையன்கிட்ட அஞ்சு பொருள் வாங்கிட்டு வரச்சொன்னா, எப்பவுமே நாலுதான் வாங்கிட்டு வருவான்.. அப்போ அவன்கிட்ட ஆறு சொல்லி, அஞ்சு வரட்டுமேன்னு காத்திருக்கிறதா.. என்று எதிர்க்கேள்வியைப் போட்டார்.
மைய வாசலிலேயே மற்ற நண்பர்களைப் பார்த்தவுடன் இந்த உரையாடலைத் தேர்வர் பகிர்ந்தார்.
நண்பர் ஒருவர், முட்டைனா உடையும்தான... குஞ்சு பொரிக்காத முட்டையக் கண்டுபிடிச்ச மாதிரி உடையாத முட்டைய அறிவியலாளர்கள்லாம் சேர்ந்து கண்டுபிடிச்சு நமக்கும் குடுத்தா நல்லது..
மற்றொரு தேர்வர், நெருப்புக்கோழி முட்டைதான் இருக்குறதுலயே ரொம்ப பலமானது.. அது மாதிரி கோழியும் போடனும்.. ஆனா, பையன் மறக்குறது ஆச்சரியமில்ல... 10 விடை படிச்சா, நமக்கு அஞ்சு மறந்து போகுதுல்ல அதுமாதிரிதான்..
அப்போது அங்கு வந்த சீனியரும் இணைந்து கொண்டார். எங்க அம்மாதான் இதுல எனக்குக் குரு என்றவுடன், அனைவரும் கோரசாக, அவங்கதான் உங்க சீனியரா என்றனர்.
ஆமா... என்றவர், நானும் கடைக்குப் போறப்ப நாலு பொருள் சொல்லுவாங்க. அங்க போனப்புறம் ஒண்ண மறந்துருவேன். ஃபோன்ல கேட்டுரலாம்னு பண்ணுனா, அவங்க வேற யார்கிட்டயோ பேசிட்டு இருப்பாங்க.. சரினு நினைவுல இருக்குறத வாங்கிட்டுப் போவேன்... பல தடவை, மறுபடியும் கடைக்கு வந்துருக்கேன்..
நாங்களும் அப்படித்தான். இதுலயும் நீங்கதான் எங்களுக்கு சீனியர்.. சிரிப்பு கிளம்பியது.
நல்லா நடந்துருப்பீங்க போலருக்கே... மற்றொரு தேர்வர்
இல்ல தம்பி.. நாமதான் 100 மீட்டருக்கே இப்பலாம் வண்டிலதான போறோம்... எங்க அம்மா சொன்னாங்க.. எழுதி வெச்சுக்கோன்னு..
உடனே எங்க அப்பா, எழுதுன பேப்பர எங்க வெச்சோம்னு மறந்துவான்..
மறுபடி பேப்பர் தேவைப்படாது.. எழுதுனது அப்புடியே கண்ணுக்குள்ள வந்து நிக்கும்..
எனக்கெல்லாம் நிக்காது...
அப்புடினா நீங்க அந்தப் பேப்பர எடுத்துப் பாக்கனும்..
மற்றொரு தேர்வரோ, சூப்பர் அம்மா...
இதாவது பரவாயில்ல, நாங்க ரெண்டு பேரும் இதே மாதிரி ஒரு நாள் கடைக்குப் போயிருந்தோம்.. அப்போ பில் போடுற இடத்துல அந்தப் பொண்ணுகிட்ட, எங்களுக்கு முன்னாடி நின்னுட்டு இருந்தவரு, என்ன படிச்சுருக்கீங்கனு கேட்டாரு..
படிச்சு முடிச்சுட்டேன்..
அதெப்புடி... எனக்கு 62 வயசு... நான் இப்பவும் படிச்சுட்டு இருக்கேன் தெரியுமா..
இல்ல சார்... டிகிரி முடிச்சுட்டேன்னு சொல்ல வந்தேன்..
ஓ... எவ்வளவுமா பில்..?
282 சார்..
இந்தக் கார்டு போடும்மா... எண்ணை அழுத்தினார்.. பணத்தை எடுத்துக் கொள்ளவில்லை. வேறொரு கார்டைக் கொடுத்தார். அதிலும் ஆகவில்லை... நம்பர் ஏதோ தப்பாப் போடுறேன் போலருக்கு என்றவர் கைகளில் நடுக்கம் இருந்தது.. எங்களுக்குப் பின்னால் நின்றவர் சத்தமிடத் தொடங்கினார். எழுதி வெச்சுக்க வேண்டியதுதான என்றும் அறிவுரை வழங்கினார்.
அவரோ, படிச்சவங்க மாதிரிப் பேசுங்க... இதெல்லாம் எழுதி வெக்கக்கூடாதுன்னு தெரியாதா என்று அவர் சொல்ல, வாக்குவாதம் நடந்தது. அதற்குள் சத்தம் போட்டவரை வேறு ஒரு இடத்தில் பில் போட அழைத்துச் சென்றுவிட்டார்கள்.
ஆமாம், சீனியர்... அன்னிக்கு நடந்தது எனக்கும் ஞாபகத்துக்கு வருது... பில் போட்டுட்டு இருந்த பொண்ணு சொல்லுச்சுல.. சார்... அந்த நம்பரையெல்லாம் எழுதி வெச்சுக்கக்கூடாதுதான்.. நினைவுல வெக்குற மாதிரி உங்க பேரன் பிறந்தநாள், பேத்தி பிறந்தநாள்னு வெச்சுக்கோங்க.. நாலஞ்சு கார்டு இருந்தா, எது முதல்ல வாங்குனதோ அதுக்கு உங்க துணைவியாருடைய பிறந்தநாள், அப்புறம் உங்க பையன், பொண்ணு, பேத்தி, பேரன்னு வரிசைப்படுத்துக்கோங்க.., இதெல்லாம் கூட மறந்து போகும்னு நெனச்சா, அவங்க பிறந்தநாள்னு போட்டு ஒரு பேப்பர்ல எழுதி வெச்சுக்கோங்களேன்..
நன்றிமா என்றபோது நீ நல்லாப் படிச்சுருக்கம்மா என்று சேர்த்துச் சொன்ன மாதிரி இருந்துச்சு...
குறுக்கே புகுந்த மற்றொரு தேர்வர்.. சீனியர்... நாம கூடப் படிக்குறப்ப இப்புடித்தான மறந்துர்றோம்... இந்தப் பொண்ணு சொல்றதுல இருந்து நமக்கு ஏதாவது குறுக்கு வழி பரிந்துரைக்கப் போறீங்களா..
அந்தப் பொண்ணு குறுக்கு வழிலாம் சொல்லலியே.. வரிசைப்படுத்திச் சொல்லுது.. நாமளும் வரிசைப்படுத்திக்கிட்டோம்னா போதுமே.. ஆனா, அடிப்படை விஷயங்களப் படிக்காம வரிசைப்படுத்திக்கிறதும் நல்லதில்ல..
எப்பவும் ஏதாவது எடுத்துக்காட்டு சொல்வீங்களே சீனியர்
ஸ்கூல்ல படிக்குறப்ப, My Very Efficient Mother Just Served Us Nutsனு கோரசாப் பாட்டுச் சொல்லிக் குடுத்தாங்க...
அம்மாவ பாசமா, அன்பான அப்புடினு சொல்ற மாதிரி Lovelyனு சொல்லித் தரலாமே..
ஏன்.. அம்மா ரொம்பத் திறமையானவங்கன்னு சொன்னா என்னவாம்..
சீனியர், ஏதோ பெண்களுக்கு அதிகாரமளித்தல் பாடம் எடுக்கப் போற மாதிரி தெரியுது... ஆனா, அவங்க பரிமாறுற மாதிரிதான அதுல வருது... பொருந்தலையே..
ஓ.. நீ அப்புடி வர்றியா... இது வெறும் மனப்பாடம் பண்றதுக்குதான்.. சின்ன வயசுலயே பாடச் சொல்லிருவாங்க... ஒரு வாரம் கழிச்சு இதுதான் சூரியக் குடும்பம்னு சொல்வாங்க.. குழந்தைகள்லாம் ஏதோ நல்லாத் தெரிஞ்ச விஷயம் மாதிரி கேக்க ஆரம்பிப்பாங்க..
இது எப்படி சூரியக்குடும்பமாகும்..?
ஒவ்வொரு வார்த்தையோட முத எழுத்தும் ஒரு கோள் பெயரோட முத எழுத்தாவும் இருக்குது பாருங்க.. Mercury Venus Earth Mars Jupiter Saturn Uranus..
ஆமாம்ல... சூப்பர், சீனியர்.. முன்னாடிலாம் புளுட்டோவும் இருந்துச்சே..
ம்ம்ம்... இதுல Passionatelyனு இருந்துச்சு.. அதக் குள்ளக்கோள்னு அறிவிச்சப்ப அத எடுத்துட்டாங்க..
மற்றொரு தேர்வர், 1930ல புளுட்டோவக் கண்டுபிடிச்சாங்க.. சூரியக் குடும்பத்துல ஒன்பதாவது கோளா இருந்துச்சு.. 2006லதான் அத நீக்குனாங்க..
பாருங்க... கைல எந்தக் குறிப்பும் இல்லாம எப்புடி அடிக்குறாரு..
நீங்களும் யார்கிட்டயாவது இத ரெண்டு தடவ சொல்லுங்க... அப்புறமா மறக்க மாட்டீங்க.. ஆனா, அதுல ஒரு பிரச்சனையும் இருக்கு..
என்ன சீனியர்..?
நீங்க சொல்றது சரிதான்னு அப்பப்ப பாத்துக்கோங்க... ரொம்ப நாள் கழிச்சு உண்மை தெரிஞ்சாக்கூட, நாம மாற மாட்டோம்.. ரொம்ப சிரமமாயிடும்..
ஆமா சீனியர்... நீங்க கூட என்னை சீனி, சீனினு கூப்புட்டே இருந்தீங்க... ஆறு மாசம் கழிச்சு நான் சொன்னேன்.. என்னோட பெயரு குமாருன்னு... ஆனா இப்பவும் என்ன நீங்க சீனின்னுதான் கூப்புடுறீங்க..
நம்மல்லாம் வகுப்புக்கு வெளிலதான் நிறையப் படிக்குற மாதிரி இருக்கு...
அப்படிச் சொல்ல முடியாது... வகுப்புல கவனம் இருக்கணும்... அத வெளில தொடர்புபடுத்திக்கனும்.. சரி, எனக்கு வகுப்பு இருக்கு, கிளம்புறேன்..
சீனியர், நாங்கதான் உள்ளயும் உக்காரனும்.. இதோ வர்றோம்..