tamilnadu

நல வாழ்வு மருத்துவ சேவை மக்களின் அடிப்படை உரிமை - ஜி.ராமகிருஷ்ணன்

நல வாழ்வு மருத்துவ சேவை மக்களின் அடிப்படை உரிமை

உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பதுதான் நல வாழ்வு. உடலும் மனமும் ஆரோக்கி யமாக இருக்க வேண்டுமென்றால் நோய் தடுப்பு, நோய் சிகிச்சை இன்றியமையாதது. இந்த இரண்டுக் கும் யார் பொறுப்பு? தனி நபரா? அரசாங்கமா? ஒன்றிய அரசு, மாநில அரசு – இரண்டு அரசுக ளும்தான் பொறுப்பு. ஏன்? இந்தூர் குடிநீர் பாதிப்பும்  குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரமும் கடந்த ஜனவரி மாதம், மத்தியப் பிரதேசம் இந்தூர் நகரில் இந்தியா – நியூசிலாந்து அணிக ளுக்கிடையில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடை பெற்றது. இந்தப் போட்டிக்குச் சென்ற இந்திய அணியின் வீரர் சுப்மன் கில், ரூபாய் 3 லட்சம் விலையில் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் வாங்கி கொண்டு சென்றிருக்கிறார்.

காரணமென்ன? ஜனவரி முதல் வாரத்தில் இந்தூர் மாநகராட்சி வழங்கிய குடிநீரை அருந்தியவர்கள் 23 பேர் இறந்துவிட்டனர். பலர் சிகிச்சை பெற்று உயிர் தப்பினர். மாநகராட்சி வழங்கிய தண்ணீர் மாசுபட்டு விஷத்தன்மை உடையதாக இருந்ததால் இறப்பு ஏற்பட்டதாகத் தண்ணீரை ஆய்வு செய்த ஆய்வகம் அறிக்கை அளித்தது. மீண்டும் ஜனவரி மாதம் மூன்றாவது வாரத்தில் இந்தூர் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் குடிநீர் அருந்தியவர்கள் ஒன்பது பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற செய்தி வந்திருக்கிறது.

இதனால்தான் கிரிக்கெட் வீரர் தண்ணீர் சுத்திகரிக்கும் இயந்திரத்தோடு சென்றி ருக்கிறார். இத்தகைய இந்தூருக்குத்தான் கடந்த எட்டு ஆண்டுகளாகத் ‘தூய்மை நகரம்’ என விருது வழங்கப்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் மற்றும் போபால்: சுற்றுச்சூழல் விதிமீறல்கள் கடந்த ஐந்தாண்டு காலமாகத் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருக்கிறது. காரணம் அந்த ஆலை நிர்வாகம், நீர் மாசடைதல் தடுப்புச் சட்டம் 1974, காற்று மாசுபாடு தடுப்புச் சட்டம் 1981 மற்றும் ஆபத்தான கழிவுகள் அகற்று தல் & மேலாண்மை விதிகள் 1989 உள்ளிட்ட மிக முக்கியமான சட்டங்களையும், சட்ட விதிகளையும் மீறியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுற்றுச்சூழலைப் பாது காப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டங்களை ஆலை நிர்வாகம் மீறிய போது அன் றைய அதிமுக மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.  

பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டு போராடிய பிறகுதான் அரசு ஆலையை மூடியது. 1984-ஆம் ஆண்டு போபால் நகரிலிருந்த யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து விஷவாயு கசிவு ஏற்பட்ட சில மணி நேரத்தில் 3,800 பேர் இறந்து விட்டனர். அடுத்தடுத்து சுமார் 15,000 பேர் பலியாகி னர். இந்தூர், தூத்துக்குடி, போபால் ஆகிய மூன்று நகரங்களில் காற்று, மண், தண்ணீர் மாசுபட்டு மக்கள் பாதிக்கப்பட்டதற்கு அரசுதான் பொறுப்பு. அரசு சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்காததுதான் மக்கள் பாதிப்பிற்குக் காரணம். மேலும் விலங்குகளிலிருந்தும், பறவைகளிலிருந்தும் பரவும் பல நோய்கள் மனிதர்களைத் தாக்குகிறது.

இதன் அடிப்படையில்தான் பொதுச் சுகாதாரம் என்ற கோட்பாடு உருவானது. பிரடெரிக் ஏங்கெல்ஸின் ஆய்வும் பொதுச் சுகாதாரமும் இன்று நேற்றல்ல, 1845-ஆம் ஆண்டிலேயே பிரடெரிக் ஏங்கெல்ஸ் ஆய்வு செய்து வெளியிட்ட “இங்கிலாந்தில் தொழிலாளர்களின் வாழ்நிலை” (1845) எனும் நூலில், தொழிலாளர்களிடையே பரவலா கக் காணப்படும் காசநோய், நிமோனியா மற்றும் தீவிர நோய்கள் தொழில்சார் காரணங்களால் ஏற்படு கின்றன எனக் குறிப்பிடுகிறார். மேலும் அவரது ஆய்வு காற்று மற்றும் நீர் மாசுபாட்டின் விவரங்க ளை நுணுக்கமாகப் பதிவு செய்ததோடு, காற்று மற்றும் நீரின் தரம் குறித்தும், காசநோய் போன்ற தொற்று நோய்கள் பரவுவது குறித்தும் விளக்கத்தை உள்ளடக்கியதாக இருந்தது. நெரிசலான சூழலுக்கிடையிலான வாழ்நிலை, கழிவுநீர் அகற்றப்படாதது ஆகியவை நிலைமை களை மேலும் மோசமாக்கின.

நெரிசல் மற்றும் போதுமான காற்றோட்டம் இல்லாதது அதிக இறப்பு விகிதங்களுக்குக் காரணமாக அமைந்தன என்ப தையும் தனது ஆய்வில் ஏங்கெல்ஸ் வெளிப் படுத்தினார். நலவாழ்வு சேவைக்கான உரிமை: வரையறைகள் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், ஆரோக்கிய இயக்கக் கருத்தாளர் குழுவும் சேர்ந்து வெளி யிட்டுள்ள “நலவாழ்வு சேவைக்கான உரிமை” என்ற நூலில் ஆரோக்கியம் அல்லது சுகாதாரம் குறித்த சமூக – பொருளாதார வரையறை காரணிகள் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: “உணவு, சுத்தமான நீர், சுகாதாரம், குடியிருப்பு, கல்வி, மாசில்லாத ஆரோக்கியமான சுற்றுச்சூழல் ஆகிய நலவாழ்வுக்கான முக்கிய காரணிகளும், வரு மானத்தை உறுதி செய்கின்ற மற்றும் வறுமை, இடர்ப்பாடுகளிலிருந்து விடுபடும் வாய்ப்பைத் தருகின்ற வாழ்வாதாரமும் ஒரு முக்கிய அம்சம் ஆகும்”.

மேற்கண்ட மதிப்பீடுகளின் அடிப்படையில்தான் நலவாழ்வு அடிப்படை உரிமை (Right to Health - RTH) என்ற முழக்கம் உருவானது. இதன டிப்படையிலேயே ஒன்றிய அரசும், மாநில அரசும் சட்டம் இயற்றிட வேண்டுமென அறிவியல் இயக்கம், மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர்கள் அரங்கம் உள்ளிட்ட பல ஜனநாயக அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. கியூபாவின் முன்மாதிரியும்  சர்வதேசப் பிரகடனமும் 1978-ஆம் ஆண்டு கஜகஸ்தான் நாட்டில் உள்ள அல்மா-அட்டா என்ற நகரில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் அனைவருக்கும் நலவாழ்வு 2000-ஆம் ஆண்டிற்குள் அமலாக்கிட வேண்டும் என்ற பிரகடனம் உருவானது. இம்மாநாட்டில் 134 நாடுகளிலிருந்து இரண்டாயிரம் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். உலக சுகாதார நிறுவன (WHO) இயக்குநரும் கலந்து கொண்டார்.

மேற்கண்ட மாநாட்டின் முடிவைச் சில நாடுகள் நடைமுறைப்படுத்தியுள்ளன. உதாரணமாகக் கியூபாவைச் சொல்லலாம். கடந்த 60 ஆண்டு காலமாக அமெரிக்க அரசு கியூபாவின் மீது ஒரு பொருளாதார முற்றுகைத் தாக்குதலைத் தொடுத்து வந்தபோதும் கூட, கியூபா தன் மக்களுக்கு நலவாழ்வு அளிப்பது என்பது சலுகை அல்ல, மக்களின் அடிப்படை உரிமை என்ற அடிப்படையில் நோய்த் தடுப்பு, நோய்ச் சிகிச்சை ஆகிய இரண்டையும் அரசே கட்டணமில்லாமல் வழங்கி வருகிறது. தற்போது கியூபா அரசு தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவிகிதம் மற்றும் பட்ஜெட்டில் 27 சதவிகிதத்தையும் நலவாழ்வுத் திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்கிறது. இதனால் கியூபா சமூக நலக் குறியீட்டில் பல மேலை நாடுகளை விடவும் முன்னணியில் உள்ளது.

பட்ஜெட் ஒதுக்கீடும்  ஒன்றிய அரசின் போக்கும் 2017-ஆம் ஆண்டு மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு உருவாக்கிய கொள்கையில் நலவாழ்வுத் திட்டத்திற்கு நாட்டின் மொத்த உற்பத்தி யில் 2.5 சதவிகிதத் தொகையை 2025-இல் ஒதுக்கீடு செய்யவிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், நடப்பு பட்ஜெட்டில் (2026-2027) 0.27 சத விகிதமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தனியார் மருத்துவ நிறுவனங்களுக்குச் சாதகமாக உள்ள பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா (PMJAY) திட்டத்திற்கான ஒதுக்கீட்டை 36 சதவிகிதம் அதிகப்படுத்தியுள்ளது. மேலும் நலவாழ்வுத் திட்டத்திற்காக மாநிலங்க ளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிதி 2014-2015 ஆம் ஆண்டில் 75.9 சதவிகிதமாக இருந்ததை தற்போது 51 சதவிகிதமாகக் குறைத்துவிட்டது.

இது கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு முரணானது. மொத்தத்தில் 2026-2027 பட்ஜெட்டில் அனைவருக்கும் நலவாழ்வு என்ற திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு கைவிட்டு விட்டது. குரல் எழுப்புவோம்! இப்பின்னணியில்தான் ஒன்றிய அரசையும், மாநில அரசையும் நலவாழ்வு அடிப்படை உரிமை என்ற சட்டத்தை உருவாக்க வேண்டுமென்று பல அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. தமிழ்நாட்டில் பொது மருத்துவமனைகளும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளும் தேவை யான இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட மருத்துவச் சேவைகளை அளித்திட முடியும். தமிழ்நாட்டில் இத்துறையில் ஒப்பீட்டளவில் சிறந்த மனித வளமும் உள்ளது. எனவே, அனைவருக்கும் நலவாழ்வு மருத்துவ சேவை மக்களின் அடிப்படை உரிமை என்பதைச் சட்டமாக்கிடக் குரலெழுப்புவோம்.