கிராக்கி
வழக்கம்போலவே கொல்கத்தா புத்தகத் திருவிழா களை கட்டியிருக்கிறது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றிய விபரங்கள் அடங்கிய புத்தகங்களும் எப்போதும் அதிக அளவில் விற்பனையாகும். இந்தமுறை குணால் கோஷ் எழுதிய “சுபாஷ் ஃபிரேசிலென்” என்ற புத்தகத்தை வாங்கப் பெரிய வரி சையில் வாசகர்கள் காத்திருந்தனர். புத்த கம் காலியாகிவிட்டது என்ற அறிவிப்பு வந்தவுடன், ஏமாற்றத்துடன் திரும்புப வர்கள் மறுநாள் காலையிலேயே வந்துவிடுகிறார்கள். போஸ் குறித்து ஏற்கனவே பல புத்தகங்களை வாங்கியுள்ள பலருக்கு, இந்தப் புத்தகத்தின் உள்ளடக்கம் ஏமாற்றமாக உள்ளது. புதிய தகவல்கள் எதுவுமே இல்லையே என்று உதட்டைப் பிதுக்குகிறார்கள். இடதுசாரிக் கருத்துக்களைக் கொண்டிருக்கும் புத்தகங்களை மக்கள் அள்ளிச் செல்கிறார்கள். அதற்கான கிராக்கி அப்படியே உள்ளது.
கோபம்
இப்படி இருந்தா எப்படி என்று கோபத்தோடு உச்சநீதிமன்றம் உத்தரப்பிரதேச மாநில அரசைக் கேட்டிருக்கிறது. 2021 ஆம் ஆண்டில் வெறுப்புப் பேச்சைக் கொட்டியது மற்றும் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள் மீதான தாக்குதல் விவகாரத்தில் இதுவரையும் முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யவில்லை. பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியி ருக்கிறார். தன்னையும், தான் சார்ந்துள்ள மதத்தையும் இழிவாகப் பேசியதோடு, தனது தாடியைப் பிடித்து இழுத்துத் தாக்கியதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த வழக்கில்தான் உச்சநீதிமன்றம் இரண்டு வாரம் அவகாசம் கொடுத்து எந்தெந்தப் பிரிவுகளில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இது மட்டுமல்ல, இப்படிப் பல சம்பவங்கள் உள்ளன என்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்.
புலம்பல்
உத்தரப்பிரதேசத்தின் கவுதம் புத்தா நகர் மாவட்டத்தில் உள்ள நொய்டாவில் கழிவுநீர் குடிநீரில் கலக்கும் பிரச்சனை தீர்க்கப்படாமல் தொடர்கிறது. நில ரீதியாக தில்லியோடு இணைந்து இப்பகுதி உள்ளது. இந்தூர், தில்லி போன்ற இடங்களில் நிலவும் பிரச்சனை நொய்டாவிலும் இருப்பதாக அப்பகுதி வாழ் மக்கள் புலம்புகிறார்கள். அதிலும், முன்னாள் ராணுவ உயர் அதிகாரிகள் வசிக்கும் பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாகக் குடிநீரில் கழிவுநீர் கலந்தே வருகிறது என்கிறார்கள். தொடர்ந்து புகார்கள் கொடுத்த வண்ணம் உள்ளனர். ஆனாலும், தீர்வு காணப்படவில்லை. பெரும்பாலும், குடிப்பதற்காக நீரை வெளியில் இருந்து விலைக்கு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ராணுவப் பணிக்காக உயர் விருதுகளைப் பெற்றுள்ளவர்களுக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் பேச்சை நிர்வாகம் மதிக்குமா என்கிறார்கள் பாதிக்கப்பட்ட பிற பகுதியினர்.
அதிகரிப்பு
ராஜஸ்தானில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு குற்றங்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. 2026 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்தே கொள்ளை மற்றும் திருட்டுகள் பெரும் எண்ணிக்கையில் நடந்துள்ளன. இதில் பலரும் கவலை தெரிவிக்கும் அம்சம் என்னவென்றால், சாதாரணத் திருட்டுகள் கூட கொடூரமான வகையில் நிகழ்த்தப்படுகின்றன. ஒரு வயதான பெண்மணியிடம் இருந்து கால் கொலுசுகளைத் திருடுவதற்காக அப்பெண்மணியைக் கொலை செய்ததோடு, இரண்டு கால்களையும் வெட்டி எடுத்துச் சென்றிருக்கிறார்கள். முதியோர், பெண்கள் குறிவைத்துத் தாக்கப்படுகின்றனர். உட்கட்சிப் பூசலில் மும்முரமாக இருக்கும் பாஜகவினரோ, இதைப் பற்றியெல்லாம் கவலைப்படும் நிலையில் இல்லை. எதிர்க்கட்சிகளின் போராட்டங்களே முதல் தகவல் அறிக்கைப் பதிவிலாவது முடிகிறது.
