பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த கோரி அரசு ஊழியர்கள் மறியல்
திருச்சி, டிச.4- புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். கடந்த ஊதிய மாற்றத்தின் போது வழங்கப்படாத 21 மாத கால ஊதிய மாற்ற நிலுவைத் தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகை உள்ளிட்ட வகைகளை வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் வியாழனன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகி மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முனைவர். பால்பாண்டி தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி மாவட்ட செயலாளர் நவநீதன், மாவட்ட பொருளாளர் சிவசங்கர், துணைத் தலைவர்கள் ஜீவானந்தம், அல்போன்சா, செந்தில்குமார், பிரேம் குமார், சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில பொருளாளர் செந்தமிழ்ச் செல்வன், மாவட்டத் தலைவர் சிராஜுதீன் ஆகியோர் பேசினர். மறியல் போராட்டத்தை சங்க மாநில துணைத் தலைவர் செல்வராணி துவக்கி வைத்தார். ஈடுபட்ட இணைச் செயலாளர் கோபாலன், வெங்கடேசபாபு, சண்முகம், பெரியசாமி, மகளிர் துணைக்குழு அமைப்பாளர் கலையரசி, மாநில செயற்குழு உறுப்பினர் சுந்தர்ராஜன் உள்பட 70-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். திருவாரூர் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றிட வேண்டும். புதிய ஓய்வு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையான விளமல் கல்லுபாலம் அருகே, நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு, அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சு.சுதாகர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ். செங்குட்டுவன், மாவட்டப் பொருளாளர் ஏ.வி. சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் வி. தெட்சிணாமூர்த்தி, பி.விஜயன், டி.தமிழ்சுடர், ஏ.தனபால், பி.பரமேஸ்வரி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் காவலில் வைக்கப்பட்டனர். தஞ்சாவூர் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற அரசு ஊழியர் சங்க, மறியல் போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் ஆ.செந்தில்குமார் தலைமை வகித்தார். முன்னாள் மாநில செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம் தொடக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ஆர்.ரமேஷ் கோரிக்கை விளக்க உரையாற்றினார். தோழமை சங்க நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினர். நிறைவாக மாவட்டப் பொருளாளர் ஜி. ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். நாகப்பட்டினம் நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகம் முன்பு, மாவட்டத் தலைவர் அ.அற்புதராஜ் ரூஸ்வெல்ட் தலைமையில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 130 பேர், காவல்துறையால் கைது செய்யப்பட்டு, நாகூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். கரூர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் வேலை நிறுத்தம் செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.எஸ். அன்பழகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பொன்.ஜெயராம் முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எம். சுப்பிரமணியன், மாவட்ட துணைத் தலைவர் ஜி. ஜீவானந்தம் மற்றும் அனைத்துத் துறை ஓய்வூதிய சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கெ.சக்திவேல் ஆகியோர் பேசினர். மறியல் போராட்டத்தை அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் ஆ.அம்சராஜ் துவக்கி வைத்து பேசினார். மறியலில் 85 பெண்கள் உட்பட 215 பேர் கலந்து கொண்டு கைதாகினர்.
