மதுரை, மே 20-சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனக் கூறியதற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளை கமல்ஹாசனுக்கு முன் ஜாமீன் வழங்கியிருக்கிறது.அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமல் ஹாசன், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே என்று கூறினார். இதற்கு எதிராக காவல் நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்குத் தொடரப்பட்டது.இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் கமல்ஹாசன் மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், இந்து-முஸ்லிம்கள் இடையே நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் எந்த கருத்தையும் பேசவில்லை. கோட்சேவை பற்றி மட்டுமே பேசிய நிலையில் இந்துக்கள் பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. நான் தெரிவித்த கருத்து பொது வாழ் வுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறாக பகிரப் படுகிறது என்று தெரிவித்திருந்தார்.இதற்கிடையே கமலுக்கு எதிராக பல்வேறு பகுதிகளில் இருந்து 76 புகார்கள் பெறப் பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கமல் பேசிய வீடியோ பதிவு விசாரணையின் போது நீதிபதியிடம் காண்பிக்கப்பட்டது.அப்போது கோட்சேவுக்கு இந்து என்பதைத் தவிர வேறு அடையாளம் இல் லையா? என கேள்வி எழுப்பினர். காந்தி சுட்டுக்கொல்லப் பட்ட போது ரேடியோவில் காந்தியை சுட்டவர் ஒரு இந்து என அறிவிக்கப்பட்டது என்று கமல் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. கமலை கைது செய்து விசாரிக்க முகாந்திரம் உள்ளதா என அரசு தரப்பிடம் நீதிபதி கேட்டார். அதற்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும். அதனால் கைது பற்றி அச்சப் படத் தேவையில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு மே 20 ஆம் தேதி வழங்கப்படும் என கூறியிருந்தார். அதன்படி, இந்த வழக்கை திங்களன்று (மே 20) விசாரித்த உயர்நீதி மன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி, கமலுக்கு முன் ஜாமீன் வழங்கினார்.