திருவனந்தபுரம்:
லட்சத்தீவுக்கான மத்திய அரசின் அதிகாரி பிரபுல் ஹோடாபடேலை விமர்சித்த விவகாரத்தில்,திரைப்பட இயக்குநரும் நடிகையுமான ஆயிஷா சுல்தானாவுக்கு கேரள உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
“ஒன்றிய பாஜக அரசானது, லட்சத்தீவு மக்கள் மீது பிரபுல் ஹோடா படேல் கொரோனா வைரஸை, ஒரு உயிரி ஆயுதமாகஏவி விட்டுள்ளது” என்று தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் ஆயிஷாசுல்தானா விமர்சித்திருந்தார். இதுதொடர்பாக, பாஜக-வின் லட்சத்தீவுத் தலைவர் சி. அப்துல்காதர் ஹாஜி அளித்த புகாரின் பேரில், அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 124A (தேசத்துரோகம்) மற்றும் 153B (தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரான செயல்கள்) பிரிவுகளின் கீழ் கவரத்தி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதேபோல கேரளத்திலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் ஆயிஷா கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியான நிலையில், அவர் தனக்கு முன்ஜாமீன் கோரி கேரளஉயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.இந்த மனு புதன்கிழமையன்று நீதிபதி அசோக் மேனன் தலைமையிலான ஒருநபர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சுல்தானா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி. விஜயபானு, “உயிரி ஆயுதம் என்ற வார்த்தை தொலைக்காட்சி விவாதத்தின் போது ஒருவேகத்தில் குறிப்பிட்டதாகும். அது தவறுதான். அதனை ஆயிஷா தெளிவுபடுத்தி இருப்பதுடன், அந்த வார்த்தைக்கு மன்னிப்பும் கேட்டு விட்டார்” என்று தெரிவித்தார். மேலும், “அரசாங்கத்திற்கு எதிரான விமர்சனங்கள், ‘கடுமையான மொழியில் வெளிப்படுத்தப் பட்டாலும் கூட’ அது தேசத் துரோககுற்றமாகாது. இந்த வழக்குக்கு காவல்துறை விசாரணை தேவையில்லை” என்ற விஜயபானு, கேதார்நாத், வினோத் துவா வழங்கு தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டினார்.
ஆயிஷாவுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று லட்சத்தீவு அரசுத் தரப்பு வழக்கறிஞர் எஸ். மனு வாதிட்டார்.எனினும், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நிதிபதி அசோக் மேனன், ஆயிஷா சுல்தானாவுக்கு ஒரு வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கியதுடன், அவர் ஜூன் 20-ஆம் தேதி கவரத்தி போலீசில் விசாரணைக்கு ஆஜராகுமாறும் உத்தரவிட்டார்.