சென்னை:
கரூர் மாவட்ட ஆட்சியரை மிரட்டியதாக கூறப்பட்ட வழக்கில் எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜிக்கு நிபந்தனையுடன் முன் பிணை வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொரோனா ஊரடங்கில் பொதுமக்கள், தொழிலாளர்களின் பிரச்சனைகளை மனுவாக பெற்று அவற்றை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு திமுகவினர் அளித்து வந்தனர். அதுதொடர்பாக அரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனை சந்தித்தார்.இதனையடுத்து, செந்தில் பாலாஜி தன்னை மிரட்டியதாக ஆட்சியர் அன்பழகன் தாந்தோணிமலை காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி மீது புகார் அளித்தார்.
அந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், தனக்கு முன் பிணை வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜி உயர்நீதிமன்றத் தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான வழக்கு விசாரணை நீதிபதி நிர்மல்குமார் முன்னிலையில் நடைபெற்றது.அதில் மனுதாரர் தரப்பில், எம்.எல்.ஏ. நிதியை பயன்படுத்தக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததாகவும், மக்களின் பிரதிநிதி என்ற முறையிலேயே அவரைச் சந்தித்ததாகவும் வாதிட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து எந்த ஒரு மிரட்டலும் மாவட்ட ஆட்சியருக்கு விடுக்கவில்லை, பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதை வைத்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கு” எனத் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து அரசுத் தரப்பில், “மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுமதிக்கப்பட்ட நபர்களைவிட கூடுதலாக செந்தில் பாலாஜியும் அவரது ஆதரவாளர்கள் வந்தனர். அதையடுத்து அவர்கள் மாவட்ட ஆட்சியரை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினர். அதன் அடிப்படையிலேயே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.எனவே அவருக்கு முன் பிணை வழங்கக் கூடாது” என வாதிடப்பட்டது.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, செந்தில் பாலாஜிக்கு நிபந்தனையுடன் முன் பிணை வழங்கினார். மேலும், நிபந்னையாக மீண்டும் இதுபோல் நடந்துகொள்ள மாட்டேன் என கரூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் உத்தரவாத மனு தாக்கல் செய்ய வேண்டும். இரண்டு வாரங்களுக்கு கரூர் மாவட்ட சிபி
சிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். அடையாறு புற்றுநோய் நிறுவனத்திற்கு ஒரு லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.