tamilnadu

img

மக்களை ஒடுக்கவே 3 கொடிய சட்டங்கள்

சென்னை,நவ.17- ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த மூன்று கொடிய குற்றவியல் திருத்தச் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை காமராஜர் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவ.17) தென்னிந்திய வழக்கறி ஞர்கள் கூட்டமைப்பு சார்பில் மாநாடு நடைபெற்றது.  இந்த மாநாட்டில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசியது வருமாறு:  ஒன்றிய பாஜக அரசு நிறை வேற்றிய மூன்று குற்றவியல் (கிரி மினல்) சட்டங்களை ரத்துசெய்ய வலியுறுத்தி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு மாநாடு நடத்துவது பாராட்டுக்குரியது. 

காந்தியை சிறை வைத்த சட்டம்

மக்களவையில் இந்த மூன்று சட்டங்களின் முன்வடிவை 11.8.2023 அன்று முன்மொழிகிற போது உள்துறை அமைச்சர் சொன்னதற்கு மாறாக, சட்டங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன. காலனியாதிக்க காலத்து சட்டங்களை முழுமையாக மாற்றி அமைப்பது தான் இந்த மூன்று புதிய சட்டங்களின் நோக்கம் என்றார். உள்துறை அமைச்சர். ஆனால் அதற்கு நேர்மாறாக மூன்று புதிய சட்டங்களின் பல பிரிவுகள் காலனி ஆதிக்க சட்டங்களை விட மிக மோசமாக உள்ளன.  குறிப்பாக, பழைய இ.பி.கோ  சட்டப் பிரிவு 124 ஏ என்பது சுதந்தி ரப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு கொண்டு வரப்பட்ட சட்டம். 1922-ஆம் ஆண்டு ‘யங் இந்தியா’ என்ற இதழில் பிரிட்டிஷ் அரசை விமர்சித்து கட்டுரை எழுதியதற்காக அண்ணல் காந்தி மீது 124 ஏ பிரிவின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டது. ‘அந்நியர் ஆட்சியை விமர்சிப் பது என் உரிமை, இதற்காக நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்’ என்று பம்பாய் உயர்நீதிமன்றத்தில் உறுதி யாக நின்றார் காந்தி. சாவர்க்கரை போல மன்னிப்பு கேட்கவில்லை. அவருக்கு பம்பாய் உயர்நீதிமன் றம் இரண்டாண்டுகள் தண்டனை வழங்கியது. காந்தி சிறைப்படுத்தப் பட்டார். 

குற்றவாளிக் கூண்டில் ஏகாதிபத்தியம்

கம்யூனிஸ்டுகள் மீது கான்பூர் சதிவழக்கு, மீரட் சதி வழக்கு எனப்  பல சதி வழக்குகளை பிரிட்டிஷ் அரசு தொடுத்து கைது செய்தது. நீதி மன்றத்தில் கம்யூனிஸ்டுகள், சுதந்தி ரத்திற்காக போராடுவது எங்கள் உரி மை என்று வாதிட்டனர். நீதிமன்றத் தில் கம்யூனிஸ்ட் தலைவர் பி.சி.ஜோஷி அளித்த வாக்குமூலம் வர லாற்று முக்கியத்துவம் வாய்ந்தது; “இந்த வழக்கில் குற்றவாளிக் கூண்டில் நிற்பது நாங்களல்ல. ஆங்கிலேய ஏகாதிபத்தியம் தான்! கம்யூனிஸ்ட் தலைவர் இங்கே இறுதித் தீர்ப்பு வழங்கப் போவது இந்திய மக்கள் தான். நீங்களோ அல்லது பிரிட்டிஷ் அரசாங்கமோ அல்ல! இந்த வழக்கில் நாங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல் லர்; மாறாக, குற்றம்சாட்டுபவர்கள். இந்திய மக்கள் எனும் அந்த உண்மையான நீதிபதிகள் கூறப் போகும் இறுதித் தீர்ப்பு, புரட்சியை நோக்கி முன்னேறுங்கள் என்பதாகத் தான் இருக்கும் என்பதில் எங்களுக்கு சந்தேகமில்லை” - என்று முழங்கினார் ஜோஷி.

தேசத் துரோக வழக்கு

காந்தி, நேரு, கம்யூனிஸ்ட் தலை வர்கள் என சுதந்திரப் போராட்டக் காலத்தில் பிரிட்டிஷ் அரசு பலர் மீது தேசத் துரோக வழக்கு தொடுத்தது. 124 ஏ-தேசத் துரோக பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று காந்திஜி வலியுறுத்தினார். ஆனால், சுதந்திரத் திற்குப் பிறகு காங்கிரஸ் அரசு இந்தப் பிரிவை ரத்து செய்யவில்லை. 2021-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரமணா உள்ளிட்ட மூவர் அமர்வில் இப்பிரிவை ரத்து செய்வது குறித்து வழக்கு விசாரணைக்கு வந்தது. இப்பிரிவுக்கு தலைமை நீதிபதி இடைக்காலத் தடை விதித்தார். இந்த விசாரணையை ஐவர் அல்லது எழுவர் கொண்ட அமர்வுக்கு பரிந்துரைத்தார். அடுத்து பொறுப்பேற்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வின் விசாரணைக்குப் பரிந்துரைத்தார்.  இந்த பெரும் அமர்வு முடிவெடுக்கிற வரையில் இச்சட்டத்தை மத்திய அரசுகளோ மாநில அரசுகளோ தவறாக பயன்படுத்தக் கூடாது என்று கூறியதோடு, ஒன்றிய அரசின் வழக்கறிஞரிடம், அரசின் கருத்தைக் கூறச் சொன்னார். 

புதிய சட்டமும்-பாஜக நோக்கமும்

அப்போது, உருவாக்கப்பட இருக்கிற புதிய சட்டத்தில், 124 ஏ - தேசத்துரோக பிரிவை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்யும் என அரசு வழக்கறிஞர் உறுதி யளித்தார். ஆனால், 124 ஏ வை விட, புதிய சட்டத்தில் கொண்டு வரப்பட்ட பிரிவு 152, காலனி ஆதிக்கச் சட்டத்தை விட மோசமானதாக உள்ளது என்பதுதான் மிகப்பெரிய முரண்.  பழைய சட்டத்தில் ‘அரசுக்கு எதிராக செயல்பட்டால்’ என்ற ஓர் அம்சம் மட்டுமே இருந்தது. புதிய சட்டத்தில் ‘இறையாண்மை, தேச ஒற்றுமை, தேச ஒருமைப்பாடு, ஆகியவற்றுக்கு எதிராக செயல்பட்டால்’ அரசை விமர்ச்சித்தாலே இப்போது தேசத்துரோக வழக்கு போடலாம் என்ற வகையில் புதிய சட்டம் அமைந்துள்ளது. பழைய பிரிவில் ஆயுள் தண்டனை அல்லது மூன்று வருசம் தண்டனை என்று இருந்தது. புதிய சட்டத்தில் ஆயுள் தண்டனை அல்லது ஏழாண்டு தண்டனை என அதிகரிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட மூன்று சட்டங்கள் மட்டுமல்ல; 2014-ஆம் ஆண்டில் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு சட்டவிரோத நடவடிக்கைத் தடுப்புச் சட்டம், (உபா), பண மோசடி தடுப்புச் சட்டம் ஆகிய சட்டங்களை திருத்தி இச்சட்டங்களில் கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீனில் வெளி வராதபடி செய்துவிட்டார்கள்.  இப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கான பாஜகவின் நோக்கங்கள் என்ன என்பதை கவனிக்க வேண்டும்.  பாஜக ஆளும், உ.பி, ம.பி, ராஜஸ்தான், தில்லி (தில்லியில் போலீஸ் அதிகாரம் ஒன்றிய அரசுக்கே) ஆகிய மாநிலங்களில் ஒன்றிய அரசை விமர்சிப்பவர்களின் வீடுகளை புல்டோசர் மூலம் தரைமட்டமாக்கினார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்த்தின் போது, “புல்டோசர்களைப் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என உ.பி. முதல்வர் ஆதித்ய நாத்திடம் கற்றுக்கொள்ளுங்கள்” என பிரதமர் மோடி மிக மோசமாக பேசினார். சுமார் 125000 க்கும் மேற்பட்ட, குறிப்பாக சிறுபான்மையினர் மக்களுடைய வீடுகளை தரைமட்டமாக்கினார்கள். இது அராஜக நடவடிக்கை எனவும், இத்தகைய புல்டோசர் அரசியலை தடுத்து நிறுத்திட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் மிக முக்கியத் தீர்ப்பளித்துள்ளது. தங்களின் நூற்றாண்டு கால நிகழ்ச்சி நிரலான இந்தியாவை இந்து ராஷ்டிரமாக நிர்மாணித்திட பாசிச பாணியிலான சர்வாதிகார நடவடிக்கைகள் எடுப்பதற்காகத் தான் மேற்கண்ட சட்டங்களை மொத்தத்தில் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு, தனது அரசு நிர்வாகத்தை ஆயுதமயமாக்கி உள்ளது. மக்களை நிராயுதபாணி ஆக்கி யுள்ளது. மூன்று சட்டங்களை எதிர்ப்பது மட்டும் போதாது. இந்தியாவை இந்துத்துவா, இந்து ராஷ்டிரமாக மாற்றத் துடிக்கும் மோடி தலைமையிலான அரசின் எதேச்சதிகார நடவடிக்கைகளையும் எதிர்க்க வேண்டும். இத்தகைய போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் முன் நிற்கும்.  இவ்வாறு அவர் பேசினார். இந்த மாநாட்டிற்கு சங்கத்தின் தலைவர் பி.நந்தகுமார் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் கே.பன்னீர்செல்வன் வரவேற்றார். தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  பொதுச்செயலாளர் டி.ராஜா, அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பிகாஸ் ரஞ்சன் பட்டாச்சார்யா எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., வேல்முருகன், இன்பதுரை, ஆசைத்தம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.