tamilnadu

img

தீக்கதிர் உலக செய்திகள்

டிரம்ப்பின்  மிரட்டலுக்கு எதிராக  அமெரிக்க எதிர்ப்புப் போராட்டம்

 கொலம்பியா மீதும் தாக்குதல் நடத்துவேன் என டிரம்ப்  மிரட்டல்விடுத்த நிலையில் கொலம்பியா ஜனாதிபதி குஸ்தவோ பெட்ரோ  கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் நாடு முழுவதும்  கொலம்பியாவுக்கான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் திரண்டு   அமெரிக்காவை எதிர்த்துப் போராட்டம் நடத்த நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். வெனிசுலாவின் காரகஸ் நகரில் அமெரிக்கா நடத்திய குண்டு வீச்சு சர்வதேச சட்ட மீறல் மற்றும் காலனித்துவ நடவடிக்கை என  பெட்ரோ விமர்சித்த நிலையில் டிரம்ப் அவரை மிரட்டியது குறிப்பிடத்தக்கது.

 மேற்குக் கரையை  துண்டாடும் இஸ்ரேல்  

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் இ1  பகுதியில்  சட்டவிரோதமாக 3,401 வீடுகளைக் கட்டுவதற்கான ஏலத்தை இஸ்ரேல் அரசு ரகசியமாக வெளியிட்டுள்ளது. கிழக்கு ஜெருசலேமுக்கும் ‘மாலே அடுமிம்’ குடியேற்றத்திற்கும் இடையில் அமைந்துள்ள இந்த இ1 பகுதியில் வீடுகள் கட்டப்பட்டால் மேற்குக் கரையின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகள் ஒன்றுக்கொன்று துண்டிக்கப்படும். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, “எந்தக் காலத்திலும் பாலஸ்தீன நாடு அமையாது” என்று பகிரங்கமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மதுரோவை உடனடியாக விடுதலை  செய்ய சீனா வலியுறுத்தல்

 வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் பாதுகாப்பதை அமெரிக்கா உறுதி செய்ய வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது. வெனிசுலா மண்ணில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதும் ஜனாதிபதியை கடத்தியதும் கண்டிக்கத்தக்கது. லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளில் அமைதியையும் நிலைத்தன்மையையும் நிலைநாட்ட சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயல்பட சீனா தயாராக உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

கிரீன்லாந்தை கைப்பற்றத்  துடிக்கும் அமெரிக்கா

கிரீன்லாந்து தீவைக் கைப்பற்ற அமெரிக்கா தீவிரமாக ஆலோசித்து வருகிறது, தேவைப்பட்டால் ராணுவ  தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாகவும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட் தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, இந்தப் பெரிய தீவை விலைக்கு வாங்கலாம் என்ற ஆலோசனையையும் முன்வைத்துள்ளார். டிரம்ப் நிர்வாகத்தின் இந்த  நடவடிக்கைக்கு பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போலந்து, ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் தலைவர்கள் டென்மார்க்குடன் இணைந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

பிரான்ஸ், பிரிட்டன் படைகளை  உக்ரைனில் நிலைநிறுத்த ஒப்பந்தம்

உக்ரைனில் போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் தங்கள் ராணுவ வீரர்களை உக்ரைனில் நிலைநிறுத்த உள்ளன. செவ்வாய்க்கிழமை பாரிஸில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஆகியோர் இணைந்து  ஒரு பிரகடனத்தில் கையெழுத்திட்டனர். உக்ரைன் முழுவதும் ராணுவ மையங்களையும், ஆயுதங்களைப் பாதுகாப்பதற்கான நவீன வசதிகளையும் பிரிட்டனும் பிரான்சும் இணைந்து அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.