பாஜக ஆளும் உ.பி., மாநில விளையாட்டு நிர்வாகம் அடாவடி தங்குமிடத்தை விட்டு துரத்தி குத்துச்சண்டை வீரர்களை குளிரில் நடுங்க வைத்த கொடூரம்
லக்னோ பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டா வில் எலைட் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வந்தது. இந்த தொடரை உத்தரப்பிரதேச பாஜக அரசு மற்றும் இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு இணைந்து நடத்தின. தமிழ்நாடு, தெலுங்கானா, கேரளா, ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், கர்நாடகா, கோவா, பஞ்சாப், சத்தீஸ்கர் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் இந்த தொடரில் பங்கேற்றன. ஆனால் தொடரில் பங்கேற்றுள்ள பல குத்துச்சண்டை வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் இறுதிப்போட்டி க்கு ஒருநாள் முன்னரே தங்குமிடத்தை காலி செய்து விரட்டப்பட்டுள்ளனர். ஹோட்டல்கள் மற்றும் விடுதிகள் தங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) வரை மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, வீரர்களின் பைகளை அறைகளுக்கு வெளியே வைத்ததாகவும், அவர்களை வெளியேறுமாறு கேட்டுக்கொண்டதாகவும் பல்வேறு மாநில அணிகள் புகார் தெரிவித்துள்ளன. இதனால் வெளிமாநில வீரர்கள், பயிற்சியாளர்கள் கடும் குளிரில் தவித்துள்ளனர். பயிற்சியாளர்களின் குமுறல் இதுதொடர்பாக பெயரை வெளியிட விரும்பாத பயிற்சியாளர் ஒருவர் கூறுகையில், “நாங்கள் குத்துச்சண்டை மைதானத்திலிருந்து ஜன., 9 அன்று இரவு 7:30 மணியளவில் இன்றைய தினம் வரை மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி எங்களை வெளி யேறுமாறு சொன்னார்கள். நாங்கள் நடுங்கும் குளிரில் விடுதிக்கு வெளியே தான் நின்று தவித்துக் கொண்டிருக்கிறோம்” என அவர் குற்றம்சாட்டினார். குத்துச்சண்டை கூட்டமைப்பு மழுப்பல் பாதிக்கப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு உடனடியாக அருகிலுள்ள ஜி.பி.பல்கலைக் கழகத்தில் தங்குமிட வசதிகள் செய்யப்பட்டன. அங்கு இரவு தங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்தச் சூழலை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம் என இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு மழுப்ப லாகக் கூறியுள்ளது.
