tamilnadu

img

அறிவுச் செல்வத்தை சேமிக்க ஐம்பதாயிரம் உண்டியல்கள்! - குழந்தைகளின் கண்களில் உற்சாகம்!

திருப்பூர் மக்களின் பண்பாட்டுத் திருவிழாவாக அடை யாளம் பெற்றிருக்கும் திருப்பூர் புத்தகத் திருவிழா 2025  ஜனவரி மாதம் நடைபெற உள்ளது.  திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட், திருப்பூர் மாவட்ட நிர்வா கத்துடன் இணைந்து 21 ஆவது ஆண்டு புத்தகத் திருவிழா வாக இது மலர உள்ளது.  20 ஆண்டுகளைக் கடந்து நடைபெறும் இந்தப் பயணம்  பல்வேறு சவால்களை கடந்து வந்துள்ளது. பார்வையா ளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் என ஒவ்வொருவரின் விமர்சனத்தையும், கிடைக்கும் அனுபவத்தையும் உள் வாங்கிக் கொண்டு, செழுமைப்படுத்திச் செல்வதால்தான் இந்த புத்தகத் திருவிழா பயணம் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் புதுமைகளைப் புகுத்தி, மக்களை ஈர்ப்பதற்கு புத்தகத் திருவிழா குழு வினர் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். வணிக நோக்கத்தை முதன்மையாகக் கொள்ளாமல், வாசிப்புப் பண்பாட்டை ஒரு மக்கள் இயக்கமாக நிலைபெறச் செய்ய  வேண்டும் என்பதே இதற்கு காரணம். அந்த வகையில், அடுத்து வரக்கூடிய புத்தகத் திருவிழா விற்கு, குழந்தைகளுக்கு “புத்தக சேமிப்பு உண்டியல்”  வழங்கும் திட்டம் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் மாணவ, மாணவிகள் புத்தகத் திருவிழாவை வந்து கண்டு களிக்கின்றனர். ஒவ்வொருவரின் நிலையும், வெவ்வேறானதாக இருக்கும்  சூழ்நிலையில் புத்தகத்தை ஆர்வத்தோடு தொட்டுத் தடவிப்  பார்த்து, ஏராளமான புத்தகங்களை வாங்க வேண்டும் என்ற  ஆர்வம் அந்தக் குழந்தைகளின் கண்களில் மின்னுவதை பார்க்க முடியும். ஆனாலும் கைகளில் கொண்டு வந்தி ருக்கும் சொற்ப காசுக்கு ஒன்று, இரண்டு புத்தகங்களை மட்டுமே வாங்கிச் செல்வர். 

குழந்தைப் பருவத்தில் விதைப்பது ஆலமரம் போல் தழைத்து ஓங்கும். எனவேதான் அவர்களது வாசிப்புப் பழக்கத்திற்கு உரமூட்டக்கூடிய முறையில் புத்தக சேமிப்பு  உண்டியல் வழங்குவது என்ற திட்டம் உதித்தது.  இதன்படி ஒவ்வொரு குழந்தைக்கும் இப்போதே உண்டி யல்களை கொடுத்து விட்டால், அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் கிடைக்கும் சிறு தொகையை அதில் சேமித்து வைக்க முடியும். இரண்டு மாதங்களில் புத்தகத் திருவிழா நடை பெறும்போது, கணிசமாக சேர்ந்திருக்கும் அந்த உண்டியல் தொகையைக் கொண்டு,  தேவையான புத்தகங்களை வாங்கிக் கொள்ள முடியும் என்பதுதான் திட்டம். நன்கொடையாளர்கள் மூலம்  50,000 உண்டியல்களை பெற்று, அனைத்துப்  பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் வழங்கு வது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி  நவ.14 ஆம்தேதி குழந்தைகள் தினத்தன்று,  பல்வேறு பள்ளிகளில் குழந்தைகளுக்கு உண்டியல் வழங்கி இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. குழந்தைகள் வசம் உண்டியல்களை கொடுக்கும்  பொழுதே, புத்தக வாசிப்பின் சிறப்பை யும், அவசியத்தையும் சொல்லி, இந்த  உண்டியலில் சேமிக்கும் தொகைக்கு புத்தகக் கண்காட்சிக்கு வந்து, தள்ளுபடி கட்டணத்தில் புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. உண்டியலைப் பெற்ற குழந்தைகளின் கண்களில் தோன்றிய மின்மினியும், முகத்தில் காணப்பட்ட மலர்ச்சியும்  புத்தக சேமிப்பு உண்டியல் திட்டத்தை வெற்றி பெறச் செய்யும் என்ற நம்பிக்கையை விதைத்தது.  இதைப் பற்றி குழந்தைகளிடம் விசாரித்த போது, ஒரு சிறுமி கூறுகையில், “கிடைக்கும் காசில் தின்பண்டம் வாங்கி  சாப்பிடலாம் என்றுதான் தோன்றும். இனி, புத்தகக் கண்காட் சிக்கு போகும்போது அம்மா, அப்பா கொடுக்கும் தொகைக்கு ஏதேனும் ஒரு புத்தகத்தை வாங்கி வருவேன்.  இப்போது எனக்கு உண்டியல் கொடுத்திருக்கிறார்கள். இதில் சிறுகச் சிறுக சேமித்து மொத்தமாக வரும் பணத்தில்  விரும்பிய புத்தகங்களை வாங்கிக் கொள்வேன்” என்றார்  உற்சாகத்துடன்.

நான்காம் வகுப்பு படிக்கும் மற்றொரு மாணவர், “காசு  கிடைத்தால் மிட்டாய், முறுக்கு வாங்கி சாப்பிடலாம் என்று தான் நினைக்கத் தோன்றும். ஆனால் பின்னல் புக் ட்ரஸ்ட்  சார்பில் தற்போது எனக்கு உண்டியல் கொடுத்து இருக்கி றார்கள். இதில் கிடைக்கும் பணத்தை சேமித்து வைத்தால்  புத்தகக் கண்காட்சியில் புத்தகங்கள் வாங்கிக் கொள்ள லாம் என்று சொன்னார்கள். இது எனக்கு சந்தோசமாக இருக் கிறது” என்று கூறினார். மற்றொரு மாணவி, “புத்தகக் கண்காட்சிக்கு போனால்  விதவிதமான புத்தகங்களை பார்த்து ஏராளமான புத்த கங்களை வாங்க வேண்டும் என்று ஆசையாக இருக்கும்.  ஆனால் தேவையான காசு இருக்காது. இப்போது பள்ளி யில் எனக்கு இந்த உண்டியல் கிடைத்திருக்கிறது, இதை வைத்து பணம் சேர்த்து, பல புத்தகங்களை  வாங்குவேன்” என்றார் மகிழ்ச்சியுடன். மாணவி ஒருவரின் தாயார் ஒருவர் கூறுகையில்,  “ஒவ்வொரு புத்தகத் திருவிழாவின் போதும், எனது  மகள் புத்தகங்கள் வாங்க காசு கேட்பார். எங்களால்  முடிந்த அளவுக்கு கொடுத்து அனுப்புவோம். இப்போது  பள்ளியிலேயே புத்தகம் வாங்குவதற்கு என்று உண்டியல்  கொடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கூடுதல் பணம் சேமித்து தேவையான புத்தகத்தை என் மகள் வாங்கிக் கொள்வார். உண்டியல் கொடுத்த புத்தகத் திருவிழா குழு வினருக்கு நன்றி” என்றார்.

இத்திட்டம் ஒரு பண்பாட்டு மறுமலர்ச்சி!

பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறும்போது, புத்தக சேமிப்பு  உண்டியல் கொடுத்திருப்பது மிகவும் அருமையான விஷயம். இன்றைய காலத்தில் சேமிப்பு பழக்கம் என்பதே  சுருங்கி விட்டது. ஒவ்வொருவரும் உண்டியலில், அவர்களுக்கு கிடைக்கும் தொகையை சேமிக்க வேண்டும்  என்பது மிகவும் நல்ல பழக்கத்தை உருவாக்கும். அத்துடன், புத்தகம் வாங்குவதற்கு என்ற ஒரே குறிக்கோ ளுடன், பணம் சேமிக்க வேண்டும் என்பது, வளரும் குழந்தை களுக்கு நல்ல பண்பாட்டின் அடித்தளமாக இருக்கும். இந்தப் பழக்கத்தின் மூலம் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை யும் வளரும். அவர்களே சிறுக, சிறுக காசு சேமித்து புத்தகம்  வாங்கிவிட்டால், மற்றவர்களை எதிர்பார்க்காமல் தங்களது  சொந்த உழைப்பில் இலக்கு நிர்ணயித்து முன்னேறலாம் என்ற உணர்வும் வளரும். எனவே புத்தக சேமிப்பு உண்டி யல் திட்டம், ஒரு பண்பாட்டு மறுமலர்ச்சி என்று சொன்னால் அது மிகையல்ல” என்றார். 50,000 உண்டியல்கள் என்பது 50 ஆயிரம் குழந்தை களின் அறிவுச் செல்வத்தை சேகரிக்கும் கருவூலம் என்றால்  அது மிகையல்ல! இதனால் எதிர்கால தலைமுறை ஒரு நல்ல  சமுதாயமாக வளரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.  

- வே.தூயவன்