வேலூர் கூட்டுறவு வார விழாவில் விவசாயிகள் புறக்கணிப்பு! விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் சரமாரி புகார்
வேலூர், டிச. 30- வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் செவ்வாயன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், கூட்டுறவு வார விழாக்களில் விவசாயிகள் புறக்கணிக்கப்படுவதாகவும், வனத்துறையினர் பொய் வழக்குகளை ரத்து செய்யவில்லை என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டினர். கடந்த மூன்று ஆண்டுகளாகக் கூட்டுறவு வார விழாக்களுக்குத் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு அழைப்பு விடுப்பதில்லை என்றும், வரும் ஆண்டுகளில் இந்த நிலையை மாற்ற வேண்டும் என்றும் விவசாயிகள் வலி யுறுத்தினர். பேர்ணாம்பட்டு அருகே விவசாயிகள் மீது தொடரப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய முதல்வர் மற்றும் தமிழக துணை முதல்வர் உத்தரவிட்டும், வனத்துறை இதுவரை அந்த வழக்குகளை ரத்து செய்யவில்லை என வேதனை தெரி வித்தனர். நீர் மாசுபாடு: ஆறுகளில் கழிவுகள் கலந்து நீர் மாசடைவதைத் தடுக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இதனால் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதி காரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் வருவாய், வேளாண்மை மற்றும் வனத்துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
