tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

எல்.எச்.பி. ரயில் பெட்டிகள் தயாரிப்பு 18 சதவீதம் அதிகரிப்பு

: சென்னை, டிச.30- இந்திய ரயில்வேயில் பழைய பெட்டிகளுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் நவீன எல்.எச்.பி. பெட்டிகளின் தயாரிப்பு, கடந்த ஆண்டை விட நடப்பு நிதியாண்டில் 18 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நடப்பு 2025-26 நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் மொத்தம் 4,224 எல்.எச்.பி. பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் சென்னை ஐ.சி.எப்.தொழிற்சாலையில் மட்டும் 1,659 பெட்டிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. கடந்த 2014 முதல் 2025 வரையிலான காலத்தில் மட்டும் 42,600-க்கும் மேற்பட்ட பெட்டிகள் தயாரிக்கப்பட்டு, ரயில்வே நவீனமயமாக்கலில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மன் தொழில்நுட்பத்தில் தயாராகும் இந்த இலகுரகப் பெட்டிகள் 52 டன்னுக்கும் குறைவான எடை கொண்டவை. இவை மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டவை என்பதோடு, விபத்து காலங்களில் கவிழாத வகையிலும், எளிதில் தீப்பற்றாத வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. பயணிகளுக்குக் கூடுதல் பாதுகாப்பு, சொகுசு வசதி மற்றும் அமைதியான பயணத்தை வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

தங்கம் சவரனுக்கு ரூ.3,360 குறைந்தது

சென்னையில் 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.420 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,600-க்கும், சவரனுக்கு ரூ.3,360 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,800-க்கும் விற்பனை ஆனது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.23 குறைந்து ஒரு கிராம் வெள்ளி 258 ரூபாய்க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 58 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.