tamilnadu

img

இன்சூரன்ஸ் தனியார்மய முயற்சிகளைக் கைவிடுக... ஒன்றிய அரசுக்கு பொது இன்சூரன்ஸ் கூட்டுப் போராட்டக்குழு வலியுறுத்தல்....

மதுரை:
தேசநலனுக்கும் பாலிசிதாரர் நலனுக்கும் எதிரான இன்சூரன்ஸ் தனியார்மயமுயற்சிகளைக் கைவிட வேண்டும் எனஅரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் மற்றும் நலச்சங்கங்களின் போராட்டக்குழு ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளது.

இக்கூட்டமைப்பின் சார்பில் மதுரையில் நடைபெற்ற கருத்தரங்கில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதனன்று நடைபெற்ற கருத்தரங்கில் மதுரை நகரின் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களிலிருந்து திரளான ஊழியர்களும் அதிகாரிகளும் பங்கேற்றனர். இக்கருத்தரங்கிற்கு மதுரை கூட்டுப் போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். அவர் தனது தலைமை உரையில், அரசுடைமை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள், தேசத்தின்பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணை யாகத் திகழ்ந்து வருகின்றன. ஒன்றிய அரசின் இத்தகைய முயற்சிகள் பாலிசிதாரர் நலனுக்கு எதிரானது என்றார். தென்மண்டல கூட்டுப் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.சவரிமுத்து முன்னிலை வகித்தார். கீர்த்தி வாசன் வரவேற்புரையாற்றினார்.இக்கருத்தரங்கில் கூட்டுப் போராட்டக் குழுவின் சார்பில் க.சுவாமிநாதன், கே.கோவிந்தன், ஏ.கே.ஆனந்த ஜவஹர், எம்.மணிமாறன், டி.சங்கரநாராயணன், வி.சந்திரகுமார், எஸ்.ராஜசேகரன், எம்.சுந்தர்சிங் ஆகியோர் உரையாற்றினர். கருத்தரங்கைத் துவக்கி வைத்து தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் க.சுவாமிநாதன் பேசுகையில், ஒன்றிய அரசின் இந்தமுயற்சி பொது இன்சூரன்ஸ் தேசவுடைமையின் குறிக்கோளுக்கு எதிரானது. நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றுவதில் வேண்டுமானால் ஒன்றிய அரசு வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் நாடாளுமன்றத்தில் விவாதம் எதுவும் அனுமதிக்காமல் இச்சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் தார்மீக ரீதியாக தோல்வியை சந்தித்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள்மன்றத்தில் விரிவாக பிரச்சாரம் செய்வதன் மூலம் தான் ஒன்றிய அரசின் முயற்சிகளுக்கு கடிவாளம் போட முடியும் என்றார்.

இக்கருத்தரங்கில் கருத்துரை வழங்கிப் பேசிய பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் அகில இந்திய சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.கோவிந்தன், பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள்எந்த நோக்கத்திற்காக தேசவுடைமை யாக்கப்பட்டதோ அந்த நோக்கங்கள் முழுமையாக நிறைவேறியிருக்கின்றன. இந்தச் சூழலில் இதை தனியாருக்கு தாரை வார்ப்பது தேசநலனுக்கு எதிரானது. இதற்கெதிராக அனைத்து ஊழியர்களும் அதிகாரிகளும் உறுதியாகப் போராட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.கருத்தரங்கில் பொது இன்சூரன்ஸ் சட்டத்திருத்தத்தை கைவிட வலியுறுத்தியும், நான்கு ஆண்டுகளாக பொது இன்சூரன்ஸ்ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடனடியாக வழங்கிட வலியுறுத்தியும், தேசிய பென்சன் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆல்வின் ரிச்சர்டு நன்றி கூறினார்.