தமிழகத்தில் திமுக கூட்டணிக்கே மீண்டும் வெற்றி..! ‘போல் டிராக்கர்’ கருத்துக் கணிப்பும் உறுதி செய்கிறது
சென்னை, ஏப். 2 - சட்டமன்றத் தேர்தலில், திமுக தலைமை யிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 189 இடங்கள் வரை கைப்பற்றி மாபெரும் வெற்றி பெறும் என்று ‘லோக் போல்’ (Lok Poll) நிறுவனம், புதன்கிழமையன்று கருத்துக் கணிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் 2026-இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியே மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று ‘போல் டிராக்கர்’ (Poll Tracker) நிறுவனமும் புதிய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளி யிட்டுள்ளது. தமிழக மக்களிடையே மு.க. ஸ்டாலின் மிகவும் செல்வாக்குள்ள தலைவராகத் தொடர்வ தாகவும் ‘போல் டிராக்கர்’ ஆய்வு குறிப்பிடு கிறது. கூட்டணிகளின் வாக்கு வங்கி நிலவரம் திமுக கூட்டணி 42.7 சதவிகித வாக்கு களுடன் 172 முதல் 178 இடங்களைக் கைப்பற்றிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் என கணித்துள்ள ‘போல் டிராக்கர்’, அதிமுக கூட்டணி 30.3 சதவிகித வாக்குகளுடன் 46 முதல் 52 இடங்களைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் என்றும், முதல்முறையாகக் களம் காணும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 19.2 சதவிகித வாக்குகளுடன் 6 முதல் 12 இடங்கள் வரை வெல்ல வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு 5.1 சதவிகித வாக்குகளும் (0-2 இடங்கள்), இதர கட்சிகளுக்கு 2.7 சதவிகித வாக்குகளும் கிடைக்கும் என கூறியுள்ளது. தலைவர்களின் செல்வாக்கும் உட்கட்சி நிலவரமும் பொதுமக்களின் பார்வையில், எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் விஜய்யுடன் ஒப்பிடும்போது மு.க. ஸ்டாலின் அதிக செல்வாக்குள்ள தலைவராகக் கருதப்படுகிறார். திமுக அரசின் நலத்திட்டங்கள் அக்கட்சியின் மீதான பெண்களின் ஆதரவைத் தக்கவைக்க உதவியுள்ளன. மறுபுறம், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தீவிரமாகச் செயல்படுவதாகவும், மற்ற தலைவர்கள் களத்தில் காணப்படவில்லை என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மேலும், சில நிர்வாகிகள் தவெக-விற்கு மாறியதாலும், உட்கட்சிப் பூசல்களாலும் அதிமுகவின் வேகம் குறைந்துள்ளதாகத் தெரிகிறது. அதிமுக - பாமக கூட்டணி காரணமாக ஆதிதிராவிடர் சமூகத்தினர் மத்தியிலும், பாஜக கூட்டணியால் சிறுபான்மையினர் மத்தியிலும் அதிமுகவிற்கு எதிர்ப்பு உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி செல்வாக்கில் வீழ்ச்சி இளம் வாக்காளர்களிடையே நாம் தமிழர் கட்சிக்கு இருந்த ஆதரவில் ஒரு பகுதி தற்போது தவெக-வை நோக்கி நகர்வதால், நாம் தமிழர் கட்சியின் வாக்குச் சதவிகிதம் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளது. தவெக-வின் எழுச்சி திமுகவை விட அதிமுகவின் வாக்கு வங்கியில்தான் அதிகப் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக, அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியான மீனவர் சமூக வாக்குகளைத் தவெக கணிசமாகப் பிரிக்கக்கூடும். கூடுதல் செல்வாக்கை பெறும் திமுக அணி திமுக கூட்டணி மேற்கு மண்டலத்தில் கடந்த முறையை விடச் சிறப்பாகச் செயல்பட வாய்ப்புள்ளது. டெல்டா பகுதியில் தனது நிலையைத் தக்கவைக்கும் திமுக, தென் மண்டலத்தில் கூடுதல் முன்னேற்றம் காணலாம் என்றும் ‘போல் டிராக்கர்’ கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும், தமிழக வாக்காளர்களிடையே நரேந்திர மோடி மற்றும் பாஜக மீது ஒருவிதத் தயக்கமும் சந்தேகப் பார்வையும் நீடிப்பதாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
