கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்க கோரிக்கை
பெரம்பலூர், செப். 28- பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறையின் சார்பில், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், வேளாண்மைத் துறையின் சார்பில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2 விவசாயிகளுக்கு தலா ரூ.4,150 மதிப்பில் மின்கலன் தெளிப்பான்களும், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2 விவசாயிகளுக்கு தலா ரூ.6,510 மதிப்பிலான மக்காச்சோளம் மேம்படுத்தப்பட்ட செயல் விளக்கமும், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் விதை கிராமத் திட்டத்தின் கீழ் ஒரு விவசாயிக்கு ரூ.255 மதிப்பில் 5 கிலோ கேழ்வரகு விதையையும், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் ஒரு விவசாயிக்கு ரூ.3540 மதிப்பில் மண்புழு உரத் தொட்டியும், தேசிய தோட்டக்கலை இயக்கம் 2025-26 திட்டத்தின் கீழ் 3 விவசாயிகளுக்கு தலா ரூ.2,00,000 மதிப்பில் குறைந்த செலவிலான வெங்காய சேமிப்பு அமைப்பதற்கான ஆணையும் என மொத்தம் அரசு மானியத்துடன் கூடிய ரூ.6.25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இக்கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கருத்துகள்: தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.கே. ராஜேந்திரன் பேசுகையில், தனலட்சுமி சீனிவாசன் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையினை உடனே வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் செல்லத்துரை, “எம்.ஆர்.எப் நிறுவனத்தின் மூலமாக எம்ஆர்எப் நிறுவனம் அமைந்துள்ள இடத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் கிராம மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரமேஷ் பேசுகையில், “மாவட்டத்தில் தெரு நாய் பிரச்சனையை உடனடியாக தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். அனைவரின் கோரிக்கைகளையும் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களை உடனுக்குடன் பதில் அளிக்க உத்தரவிட்டதன் அடிப்படையில், அலுவலர்கள் விவசாயிகளுக்கு பதிலுரை வழங்கினர்.