tamilnadu

img

கேரள மறுமலர்ச்சிக்கு அய்யா வைகுண்டரின் பங்களிப்பு கலாச்சார அமைப்புகள் புகழாரம்

கேரள மறுமலர்ச்சிக்கு அய்யா வைகுண்டரின் பங்களிப்பு  கலாச்சார அமைப்புகள் புகழாரம்

நாகர்கோவில், நவ. 10 - கேரள மறுமலர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர் அய்யா வைகுண்டர் என்றும், பாகுபாடுகள் அதிகரிக்கும் நிலையில், அவரைப் பற்றிய உண்மைகளை இன்றைய இளம் தலைமுறையினருக்குப் பயிற்றுவிக்க வேண்டும் என்றும் கேரளத்தின் பல்வேறு கலாச்சார அமைப்பு கள் இணைந்து நடத்திய கருத்தரங்கில் தலைவர்கள் வலியுறுத்தினர். கல்விப் பயணம் மற்றும் பங்களிப்பு கன்னியாகுமரி அருகில் உள்ள அய்யா வைகுண்டரின் பிறந்த இடமான சாமிதோப்புக்கு, கேரளத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மறு மலர்ச்சி கல்விப் பயணமாக (நவோத்தான படன யாத்திரா) நவம்பர் 5 புதன்கிழமை வருகை தந்தனர். திருவனந்தபுரம் முதல் சாமிதோப்பு வரையிலான இப்பயணத்திற்கு கேரள நவோத்தான முற்போக்கு சங்க தலைவர் என்.ரதீந்திரன் தலைமை வகித்தார். கலந்துரையாடலில் பேசிய என்.ரதீந்திரன், அருவிப்புரத்தில் ஸ்ரீ நாராயண குரு சாதிய பாகுபாடு இல்லாமல் வழிபடச் செய்வதற்கு அரை நூற்றாண்டுகளுக்கு முன்பே, உலகிற்கு முன்மாதிரியாக புதிய சிந்தனைகளை விதைத்து மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர் அய்யா வைகுண்ட சாமி என்று புகழாரம் சூட்டினார். பாகுபாடுகளுக்கு எதிரான போர் பண்டைய காலத்தில் நிலவிய பிராமண மேலாதிக்கம், பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுக்கத் தடை, பள்ளிகளில் ஒடுக்கப்பட்டோருக்கு அனுமதி மறுப்பு போன்ற பாகுபாடுகளை எதிர்த்த அய்யா,  சாமிதோப்பில் முத்திரிக் கிணறு அமைத்து,  அனைவரும் பாகுபாடின்றி பயன்படுத்த வழிவகுத்தார். மேலும், அடிமைப் பணி செய்த வர்களுக்கு இடுப்புக்கு மேலும், முட்டிக்குக் கீழும் ஆடை அணியும் உரிமை மறுக்கப்பட்டிருந்த காலகட்டத்தில், வைகுண்டசாமி அவர்களை நிமிர்ந்து நிற்கச் சொல்லி, இடுப்பில் கட்டிய துண்டை தலைப்பாகையாக அணியச் செய்தார். மீசை வைத்து ஆண்மையுடன் நிற்க வைத்ததன் மூலம், முதலாவது மறு மலர்ச்சி நாயகனாக அவர் திகழ்ந்தார். 1847இல் மார்க்சும் ஏங்கெல்சும் கொள்கைப் பிரகடனம் செய்வதற்கு 12 ஆண்டு களுக்கு முன்பே, இவர் சமபந்தி வைத்து சமத்துவ சமாஜத்தை நிறுவினார். பாடப்புத்தகத்தில் அய்யா வைகுண்டர் ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கும் இன்றைய காலகட்டத்தில், அய்யா வைகுண்டரின் வரலாறை இளைய தலை முறையினர் அறிந்துகொள்ளும் வகை யில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டதாக என்.ரதீந்தி ரன் கூறினார். கேரள பாடநூல் திட்ட உறுப்பினர் டாக்டர் ஜி.சந்தோஷ்குமார் பேசுகையில், தான்  பொறுப்பு   வகித்து தயாரித்த கேரள அரசின் 8 ஆம்  வகுப்பு தமிழ் பாடத்திட்டத்தில் அய்யா வைகுண்டர் வரலாறு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். இறுதி யாக, கேரளம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை ஒருங்கிணைத்து ‘அய்யா வைகுண்டர் கலாச்சார அமைப்பை’ உரு வாக்குவது எனவும் முடிவுசெய்யப்பட்டது.