தனியார் கல்லூரி விடுதியில் சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு உரிய நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்
நாமக்கல், அக்.29- குமாரபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி விடுதியில் உணவு உண்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இச்சம்பவத்தில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் – சேலம் சாலையில், எக்ஸெல் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி யில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும் கேரளம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த வர்களும், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் கல்லூரியிலுள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த அக்.25, 26 ஆகிய தேதிகளில் கல்லூரி உணவகத்தில் தயார் செய்யப்பட்ட உணவை சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, பேதி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டது. மேலும், கூடுதல் பாதிப்பு ஏற்பட்ட 50க்கும் மேற்பட்டோர் குமாரபாளையம் தனியார் மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலை யத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து தகலறிந்த நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் திங்களன்று கல்லூரி விடுதியில் ஆய்வு மேற்கொண்டனர். உணவுக்கூடத்திற்கு சீல் அப்பொழுது முறையான வகையில் குடிநீர் தொட்டி சுத்திகரிப்பு செய்யப்படாமல் இருந்ததை கண்டறிந்தனர். மேலும், உணவுக்கூடம் முறையான பராமரிப்பு இன்றி இருப்பதையும் கண்டறிந்து கல்லூரி நிர்வாகத்திற்கு அரசு வழிகாட்டியுள்ள 21 வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றினால் மட்டுமே கல்லூரி விடுதியில் உணவு வழங்குவதற்கு அனுமதி வழங்கப் படும் என அதிகாரிகள் தெரிவித்து ஐந்து நாட்களுக்கு உணவுக் கூடம், தண்ணீர்த் தொட்டி ஆகிய இடங்களை சீல் வைத்தனர். இதனிடையே, கல்லூரியில் தங்கியிருந்த மாணவர்களை அவசர அவசரமாக கல்லூரி நிர்வாகத்தினர் பெற்றோரை வரவழைத்தும், தனியார் வாகனங்கள் மூலமும் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ சிகிச்சை பெற்று வந்த மாணவர் களும் சிகிச்சை முடிந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாணவர்கள் உயிரிழப்பு? இந்நிலையில், மருத்துவ சிகிச்சை பெற்ற மாணவர்களில் ஒரு சிலர் உயிரிழந்த தாக சமூக வலைத்தளங்களில் வேகமாக வதந்தி பரவியது. இதுகுறித்து மாவட்ட ஆட்சி யரின் செய்திக்குறிப்பில், உணவு உண்ட மாணவர்கள் 128 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக வும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவ.2 ஆம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாகவும், உயிரிழப்பு போன்ற அசம்பாவித சம்பவங்கள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, புதனன்று நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டி நிகழ்வுகள் இந்த கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த பரபரப்பின் காரணமாக விழா நிகழ்வு ரத்து செய்யப்பட்டது. இவ்விவகாரம் குறித்து புதனன்று திருச்செங்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணன், காவல் ஆய்வாளர் (பொ) சங்கீதா உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டனர். சிபிஎம் தலையீடு இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட காரணமான கல்லூரி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அரசு நிர்வாகம் உரிய சிகிச்சை வழங்க எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய மருத்துவ உதவிகள் செய்து தர வேண்டுமென கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ஆர்.முருகேசன், நகரச் செயலாளர் கந்தசாமி, கிளைச் செயலாளர் கோவிந்தசாமி, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் தங்கராஜ் உள்ளிட்டோர் நேரில் சென்று கல்லூரி நிர்வாகத்தினரிடம் வலியுறுத்தினர். எனவே, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை அரசு நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும். மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரி விடுதிகளில் உணவு பாதுகாப்புத்துறையினர் மாதம் ஒருமுறை பரி சோதித்து மாணவர்களுக்கு தரமான பாது காப்பான உணவு கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
