சிபிஎம் 24 ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் பேரெழுச்சியுடன் துவங்கியது
நாடு முழுவதுமிருந்து தலைவர்கள் - பிரதிநிதிகள் குழுமினர்
மூத்த தலைவர் பிமன்பாசு செங்கொடியை ஏற்றிவைத்தார்
சீத்தாராம் யெச்சூரி நகர் (மதுரை), ஏப்.2- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-ஆவது மாநாடு, மதுரை யில் புதனன்று (ஏப்.2) மிகுந்த உற்சாகத் துடனும், பேரெழுச்சியுடனும் துவங்கி யது. மாநாட்டு துவக்க நிகழ்ச்சிகள் காலை 8 மணிக்குத் துவங்கும் என்று அறி விக்கப்பட்டிருந்த போதிலும் இந்தியா முழுவதிலுமிருந்து வந்துள்ள உழைப் பாளி மக்களின் பிரதிநிதிகளும் மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்ட மக்களும் காலை 7 மணிக்கே தோழர் பி. ராமமூர்த்தி நினைவு வளாகத்தில் (தமுக்கம் மைதானம்) குவிந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பாப்பம்பாடி ஜமா குழுவினரின் பெரியமேள நிகழ்ச்சி வழக்கம் போல் அனைவரையும் ஈர்த்தது. மாநாட்டுத் திடலை அதிர வைத்த இந்த குழுவின ரின் நிகழ்ச்சி பிளவுவாத சக்திகளுக்கு எதிரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் போர்ப் பிரகடனத்தை பறை சாற்று வது போல் இருந்தது. இதனைத் தொட ர்ந்து ஷேக் மஸ்தான் ஒருங்கிணைப்பில் சுமார் 25-க்கும் மேற்பட்ட தவில் கலை ஞர்களின் மல்லாரி இசை நிகழ்ச்சி நடை பெற்றது.
வெண்மணித் தியாகிகள் நினைவுச் செங்கொடி
மாநாட்டு வளாகத்தில் தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா நுழை வாயில் முன்பாக மாநாட்டின் தொடக்க நிகழ்வுகள் நடைபெற்றன. வெண் மணித் தியாகிகள் நினைவாக மாநாட்டு அரங்கிற்கு கொண்டு வரப்பட்ட செங் கொடியை கட்சியின் மத்தியக்குழு உறுப் பினர் உ.வாசுகி வழங்க அதனைக் கட்சி யின் மத்தியக் கட்டுப்பாட்டுக் குழுத் தலை வர் ஏ.கே.பத்மநாபன் பெற்றுக் கொண்டார். துவக்க நிகழ்ச்சியையொட்டி ஆயி ரக்கணக்கான செங்கொடிகள் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கும் மதுரை மாநகரில், கலைநயத்தோடு அமைக்கப் பட்டிருந்த சீத்தாராம் யெச்சூரி நகர், விழாக்கோலம் பூண்டிருந்தது.
விண்ணில் உயர்ந்த செங்கொடி
இதைத் தொடர்ந்து முறைப்படி அகில இந்திய 24-ஆவது மாநாட்டின் துவக்க மாக செங்கொடியை மூத்த தலைவர் பிமன் பாசு ஏற்றி வைப்பார் என்று ஒருங்கி ணைப்பாளர் பிரகாஷ் காரத் அறிவித்தார். இதையடுத்து, அங்கு கூடியிருந்த தலை வர்கள், பிரதிநிதிகள், மதுரை மட்டு மின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் வந்திருந்த ஆயிரத்திற் கும் மேற்பட்டோரின் விண்ணதிரும் முழக் கங்களுக்கு இடையே பிமன் பாசு செங்கொடியை ஏற்றி வைத்தார். அத்துடன் தலா 24 பலூன்களுடன் கொத்தாக கட்டப்பட்ட ஒரு செங்கொடி வீதம், 24 செங்கொடிகள் வானில் பறக்க விடப்பட்டன. அப்போது அதிர்வேட்டு களின் சத்தம் விண்ணை பிளந்தது.
தியாகிகளுக்கு அஞ்சலி
உழைப்பாளி மக்களின் உரிமை களுக்கான போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவாக அமைக் கப்பட்டிருந்த நினைவுச் சிற்பத்திற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிர காஷ் காரத், மூத்த தலைவர்கள் பிமன் பாசு, எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர்கள் - கேரள முதல்வர் பினராயி விஜயன், திரி புரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார், பிருந்தா காரத், எம்.ஏ. பேபி, ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பி னர் கே. பாலகிருஷ்ணன், உ. வாசுகி, பி. சம்பத், மாநிலச் செயலாளர் பெ.சண் முகம் உள்பட அனைவரும் மலர்தூவி முஷ்டி உயர்த்தி அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பிரதிநிதித் தோழர்களும் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பொது மாநாடு
பின்னர் துவங்கிய பொது மாநாட் டுக்கு கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் மாணிக் சர்க்கார் தலைமை வகித்தார்.
தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு அஞ்சலி
முதல் நிகழ்வாக, அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் அஞ்சலித் தீர்மானத்தை முன்மொழிந் தார். கட்சியின் புகழ்வாய்ந்த பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் மார்க்சிய- கம்யூனிஸ்ட் வாழ்க்கையை சுருக்கமாகச் சுட்டிக்காட்டி, பொதுச் செயலாளருக்கு இம்மாநாடு அஞ்சலிசெலுத்துவதாகக் கூறினார். இதையடுத்து அனைவரும் ஒரு நிமிடம் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், கேரள மாநில முன்னாள் செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணன், மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் புத்த தேவ் பட்டாச்சார்யா, கட்சியின் முது பெரும் தலைவர் என். சங்கரய்யா ஆகி யோரின் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கான பெருமை மிகு பணிகளை நினைவு கூர்ந்து மாநாடு அஞ்சலி செலுத்தியது.
படுகொலை செய்யப்பட்ட 22 தோழர்கள்
மேலும் கடந்த 23-ஆவது மாநாட்டிற்குப் பிறகான- கடந்த 3 ஆண்டுகளில் மட்டும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 தோழர்கள் வர்க்க எதிரிகளால் படு கொலை செய்யப்பட்டுள்ளனர். கேர ளத்தில் ஆர்எஸ்எஸ் குண்டர்களால் 2 பேர், திரிபுராவில் பாஜகவினரால் 3 பேர், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குண்டர்களால் 11 பேர் கொல்லப் பட்டுள்ளனர். மேலும் பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் நிலப்பிரபுக்கள், மாபியா கும்பல்களால் படுகொலை செய்யப்பட்டவர்கள் என மொத்தம் 22 தியாகிகளுக்கும் இந்த மாநாடு அஞ்சலி செலுத்தியது.
மாணிக் சர்க்கார் தலைமையுரை
தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் நினைவரங்கில் நடைபெற்ற பொது மாநாட்டிற்கு கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் மாணிக் சர்க்கார் தலைமை வகித்தார். மாநாட்டு வர வேற்புக்குழுத் தலைவரும் மத்தியக்குழு உறுப்பினருமான கே. பாலகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் மாநாட்டைத் துவக்கி வைத்து உரை யாற்றினார்.
இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் வாழ்த்து
அதனைத் தொடர்ந்து, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து. ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) விடுதலை-யின் பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச்செயலாளர் ஜி. தேவராஜன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர்.
கவுரவிப்பு
மாநாட்டில் கொடியேற்றி வைத்த முதுபெரும் தலைவர் பிமன்பாசு மற்றும் சிபிஐ தேசிய செயலாளர் து. ராஜா உள்ளிட்ட இடதுசாரிக் கட்சித் தலைவர் களுக்கு சிபிஎம் தலைவர்கள்- வர வேற்புக் குழு நிர்வாகிகள் சால்வை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கினர்.
பிரதிநிதிகள் மாநாடு
புதனன்று (ஏப்.2) பிற்பகலில் பிரதிநிதி கள் மாநாடு துவங்கியது. ஏப்ரல் 6 முற்பகல் வரை பிரதிநிதிகள் மாநாடு தொடர்ந்து நடைபெற உள்ள நிலையில், இம்மாநாட்டில் சர்வதேச மற்றும் அகில இந்திய அளவிலான அரசியல் பிரச்சனை கள் குறித்த விவாதங்களும், அவற்றின் அடிப்படையிலான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளன. மாநாட்டின் நிறைவு நாளில் அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
கலை நிகழ்ச்சிகள்
ஏப்ரல் 2 துவங்கி ஏப்ரல் 5 வரை, தோழர் கே.பி. ஜானகியம்மாள் திறந்தவெளி அரங்கில் நாள்தோறும் மாலை 5 மணிமுதல் இரவு 9 மணி வரை கலை நிகழ்ச்சி கள், உரை வீச்சு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப் ப்பட்டுள்ளன. அதன்படி புதனன்று (ஏப்ரல் 2) மாலை 5 மணிக்கு, பாப்பம்பாடி ஜமா பெரியமேளம், திண்டுக்கல் சக்தி குழு வினரின் போர்ப்பறை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சாலமன் பாப்பையா,
ராஜூ முருகன், எம். சசிகுமார்
தமிழறிஞர் சாலமன் பாப்பையா, திரைப்பட இயக்குநர்கள் ராஜூ முருகன், எம். சசிகுமார் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.