காரல் மார்க்ஸ்க்கு சென்னையில் சிலை வைக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளது.
இது குறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
"மார்க்சிய தத்துவ மேதை தோழர் காரல் மார்க்ஸ் அவர்களுக்கு சென்னையில் சிலை வைக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்திருந்தோம். அந்த கோரிக்கையை ஏற்று இன்று (3.4.2025) தோழர் காரல் மார்க்ஸ்க்கு சென்னையில் சிலை வைக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.
இந்த அறிவிப்பை மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியினையும், பாராட்டுக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துக் கொள்கிறது." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.