tamilnadu

img

சிபிஎம் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் யு.கே.சிவஞானம் காலமானார்

கோயம்புத்தூர், அக். 6- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத் தலைவருமான தோழர் யு.கே.சிவஞானம் (வயது 62) திடீர் உடல் நலக்குறைபாடு காரணமாக ஞாயிறன்று காலமானார்.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தோழர் யு.கே.சிவஞானம் அவர்கள் 37 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக செயலாற்றி வந்தவர்.  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மூலம் மார்க்சிஸ்ட் கட்சியில் உறுப்பினரானார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளராகவும், மாநில பொருளாளராகவும் களப்பணியாற்றியவர். வாலிபர் சங்கத்தில் பணியாற்றிய காலத்தில் கியூபாவில் நடந்த உலக இளைஞர் மாணவர் மாநாட்டில் பிரதிநிதியாக பங்கேற்றவர். வாலிபர் சங்கம் நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவர்.  கோவை ஆத்துப்பாலத்தில் சுங்க டோல்கேட் அமைக்கப்பட்டத்தை எதிர்த்து அவர் தலைமையில் நடைபெற்ற போராட்டம் குறிப்பிடத்தக்கது ஆகும். அதில் 400 பேர் கலந்து கொண்டு 12 நாட்கள் சிறையில் இருந்தனர்.  கோவையில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த போது வாலிபர் சங்கம் சார்பில் தோழர் யு.கே. சிவஞானம் தலைமையில் வெண்கொடி ஏந்தி 3 நாட்கள் தொடர் நல்லிணக்க நடைப்பயணத்தை ஒருங்கிணைத்தவர். அந்த நடைப்பயணம் கோவை மாநகரில் அமைதி திரும்பி சகஜ நிலை ஏற்படுத்துவதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது. கட்சியின் கிழக்கு நகரக் குழு செயலாளராக செயல்பட்டவர்.  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் துணைப் பொதுச் செயலாளர் ஆகவும், துணைத் தலைவராகவும் பணியாற்றியவர். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர். கோவை மாவட்டத்தில் தீண்டாமைச் சுவர் இடிப்பு, ஆலய நுழைவுப் போராட்டங்களை முன்னெடுத்தவர். கோவை மாவட்டத்தில் உள்ள தலித் அமைப்புகள் மற்றும் முற்போக்கு அமைப்புகளை ஒருங்கிணைத்து பரந்த மேடையை உருவாக்குவதில் பெரும் முனைப்பு காட்டியவர்.  பரந்த வாசிப்பு பழக்கம் கொண்டவர், எழுத்தாளர், சிறந்த பேச்சாளர் ஆவார்.  பல்வேறு தலைப்புகளில் நாளிதழ்களில் கட்டுரைகள் எழுதியவர். வைக்கம் போராட்டம் குறித்து ஒரு நூல் எழுதியுள்ளார்.  மார்க்சிய, பெரியாரிய மற்றும் அம்பேத்கரிய அமைப்புகளோடு சிறந்த தோழமையைப் பேணியவர்.  இந்நிலையில், கடந்த பத்து நாட்களுக்கு முன்பு திடீர் உடல் நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவ சிகிச்சை பலனளிக்காத நிலையில், ஞாயிறன்று மதியம் காலமானார். இவரின் இணையர் இந்துமதி ஓய்வு பெற்ற பஞ்சாலைத் தொழிலாளி. மகள் பாரதிப்பிரியா.  தலைவர்கள் இரங்கல் தோழர் யு.கே.சிவஞானம் மறைவு தகவலறிந்து மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், கட்சியின் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், சிஐடியு அகில இந்திய தலைவைர்கள் ஏ.கே.பத்மநாபன், ஆர்.கருமலையான் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளர் கே.சாமுவேல் ராஜ், மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடல் திங்களன்று (இன்று) காலை 8 மணியளவில் பொதுமக்கள், கட்சித் தோழர்கள் அஞ்சலி செலுத்த, காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு அலுவலகத்தில் உடல் வைக்கப்படுகிறது.