தோழர் என்.ஆர்.இராமசாமி செங்கொடி இயக்கத் தலைவர் - ஓர் அர்ப்பணிப்பு மிகுந்த வாழ்க்கை
தோழர் என்.ஆர்.இராமசாமி (என்.ஆர்.ஆர்.) இந்திய நாடு சுதந்திரம் பெறுவதற்கு 18 ஆண்டுகளுக்கு முன்பு, 1929 ஆம் ஆண்டில் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி வட்டம், ரெட்டியூர் கிராமத்தில் ரங்கப்பன் – துரையம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய தந்தையார் ஆயங்குடி, வேளம்பூண்டி கிராம மணியக்காரர். அரசியல் பிரவேசமும் தலைமைப் பொறுப்பும் என்.ஆர்.இராமசாமி தனது 20ஆவது வயதில், 1949 ஆம் ஆண்டு, அப்போது காங்கிரஸ் அரசால் தடை செய்யப்பட்டிருந்த ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இணைந்தார். 1964இல் கட்சி பிளவுபட்டபோது, வலது திருத்தல்வாதத்திற்கு எதிராகப் போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் (சி.பி.எம்.) தன்னை இணைத்துக் கொண்டார். அன்று முதல் தனது இறுதி மூச்சுவரை (30.10.2010 அன்று தனது 81ஆவது வயதில் மறையும் வரை) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராகப் பணியாற்றினார். இவரை கட்சிக்குள் இணைத்தவர் தோழர் எஸ்.நடராஜன் (எஸ்.என்.). இவர் இராமலிங்க அடிகளாரின் பெரும் பக்தர்; வள்ளலாரை நேசிப்பவர்கள் கம்யூனிஸ்ட்டாக மாறுவார்கள் என்பதற்கு எஸ்.என். ஓர் உதாரணம் ஆவார். எஸ்.நடராஜனுக்குப் பிறகு, ஒன்றுபட்ட தென்ஆற்காடு மாவட்டத்தின் கட்சிச் செயலாளராக தோழர் என்.ஆர்.இராமசாமி 13 ஆண்டுகள் (1976 முதல் 1988 வரை) பணியாற்றினார். இன்று புதுச்சேரி மாநிலம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் பெரிய நிலப்பரப்பில், வாகன வசதிகளற்ற அக்காலத்தில், பேருந்து இல்லாத ஊர்களுக்குக்கூட இவர் கால்நடையாகச் சென்று கட்சியை கட்டமைத்தார். கட்சியை கட்டுவதற்காக சிதம்பரம் தாலுகாவிலிருந்து குடும்பத்தோடு விருத்தாசலம் நகருக்குச் சென்று இறுதிவரை அங்கேயே வாழ்ந்து கட்சிப் பணியாற்றினார். விவசாயிகளின் உரிமைக்காகப் போராடியவர் கடலூர் மாவட்ட காவிரிப் படுகையான சிதம்பரம் – காட்டுமன்னார்குடி வட்டங்கள், தஞ்சையைப் போலவே விவசாயத்தை சார்ந்த டெல்டா பகுதி. கூலி போராட்டங்களும், குத்தகை விவசாயிகள் பிரச்சனைகளும் நிறைந்த பகுதி இது. குத்தகை விவசாயிகள் கடுமையாகச் சுரண்டப்பட்ட சூழலில், 1953 ஆம் ஆண்டு பல்லா யிரக்கணக்கான விவசாயிகள் கலந்துகொண்ட குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு மாநாட்டை குமாராட்சியில் என்.ஆர்.ஆர். முன்நின்று நடத்தி னார். வாகன வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில், இவர் கிராமங்கள்தோறும் பயணித்து விவசாயிகளைத் திரட்டியது ஆச்சரியங்கள் நிறைந்த சாகசப் பயணமாகும். செங்கொடி இயக்கத்தின் மகத்தான போராட்டத்தால் தஞ்சை மாவட்டத்தில் பெறப்பட்ட பண்ணையாள் பாதுகாப்பு சட்டத்தை, சிதம்பரம் - காட்டுமன்னார்குடி விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்காகவும் அமலாக்க வேண்டும், குத்தகை மற்றும் வாரச் சாகுபடிதாரர் பாதுகாப்புச் சட்டம் அமலாக்கம், கூலி உயர்வு போன்ற கோரிக்கைகளுக்காக தென்ஆற்காடு மாவட்டத்தில் நடந்த பல போராட்டங்களுக்குத் தோழர் என்.ஆர்.ஆர். தலைமையேற்று நடத்தினார். அவர் 13 ஆண்டு காலம் தென்ஆற்காடு மாவட்டத்தில் விவசாய சங்கத் தலைவராகப் பணி யாற்றியவர். மேலும், விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர், மாநிலத் துணைத் தலை வர் எனப் பத்தாண்டுகளும், மாநிலக்குழு உறுப்பி னராகப் பல்லாண்டுகளும் பணியாற்றியுள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பின ராகவும் 20 வருடங்களுக்கு மேல் செயல்பட்டுள்ளார். நெருக்கடி நிலையும் அர்ப்பணிப்பும் கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் பல ஆண்டுகள் தலைமறைவாக இருந்து இயக்கம் நடத்தியவர். 1975 ஆம் ஆண்டு நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது, பல்லாயிரக்கணக்கான தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்; என்.ஆர்.ஆர். இரண்டு ஆண்டு கள் சிறைத் தண்டனையும் அனுபவித்துள்ளார். தோழர் என்.ஆர்.ஆர். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர் இல்லை என்றாலும், ஒடுக்கப்பட்ட மக்களின் துயரங்களைத் தனது துயராக நினைத்து, தீண்டாமைக்கு எதிரான பல போராட்டங்களில் முன்நின்றவர். ஏனெனில், அவர் ஒரு மார்க்சிஸ்ட் சிந்தனைவாதி. 1981-1982 இல் நடைபெற்ற 11ஆவது மாநில மாநாட்டையும், 1995 டிசம்பரில் நடைபெற்ற 15ஆவது மாநில மாநாட்டையும் கடலூரில் முன்நின்று நடத்தினார். தனிப்பட்ட தியாகம் 1991 ஆம் ஆண்டு விவசாய சங்க மாநில மாநாடு விழுப்புரத்தில் நடைபெற்றபோது, என்.ஆர்.ஆரின் துணைவியார் விஜயலெட்சுமி அவர்கள் கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார். வாரம்தோறும் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்று வந்தார். அவரது துணைவியார் மறைந்த தினத்தன்று (06.05.1991), தோழர் என்.ஆர்.ஆர். விவசாயச் சங்க மாநாட்டுப் பணியில் விழுப்புரத்தில் இருந்தார். துணைவியார் மறைந்த செய்தி தெரிந்த பின்னரே, அவரால் இரவு விருத்தாசலம் வரமுடிந்தது என்பது வேதனையான சம்பவமாகும். இணைந்த தோழர்கள் மற்றும் குடும்பம் இவருடன் இணைந்து பணியாற்றியவர்களில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், மாதர் சங்கத் தலைவர்கள் பா.ஜான்சிராணி, எஸ்.வாலண்டினா உள்ளிட்ட பலரும் அடங்குவர். இன்று சிதம்பரம் நகரத்தில் கட்சி அலுவலகம் சொந்தக் கட்டிடத்தில் கம்பீரமாகச் செயல்பட முக்கிய காரணகர்த்தாக்களில் தோழர் என்.ஆர்.ஆர் ஒருவர். அவரது மகன்களும் பொதுவாழ்வில் உள்ளனர்: மூத்த மகன் தோழர் ஜீவானந்தம், தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர்களில் ஒருவர். இரண்டாவது மகன் சங்கரய்யா, மார்க்சிஸ்ட் கட்சியின் விருத்தாசலம் நகரச் செயலாளராகவும், மாவட்டக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டவர். இளைய மகன் ரவிராஜ், வடலூரில் சிஐடியு சங்கத்தின் முக்கிய ஊழியராகப் பணியாற்றியவர். தோழர் என்.ஆர்.ஆர். கட்சி எடுக்கும் முடிவுகளை அமல்படுத்தும் தன்மையுடனும், நகைச்சுவை உணர்வுடனும் அணுகும் பாங்கும், இளம் தோழர்களிடம் அன்பாகப் பழகும் தன்மையும், இளைஞர்களையும், பெண் தோழர்களையும் தலைமைப் பொறுப்புக்குக் கொண்டுவரும் ஆர்வமும் மிக்கவர். தோழர் என்.ஆர்.ஆர். போன்ற மகத்தான தலைவர்களின் அர்ப்பணிப்பு மிகுந்த வாழ்க்கையை இளைய தலைமுறைக்குக் கொண்டுசெல்வது அவசியம்.
