கூட்டுறவுத் துறையிலும் பொதுத் துறையிலும் சர்க்கரை ஆலைகளை நிர்மாணிக்கும் பொருட்டு தமிழ்நாடு சர்க்கரை கழகம் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளத்தில் அறிஞர் அண்ணா பெயரில் ஒரு சர்க்கரை ஆலையும், மதுரை பாண்டியராஜபுரத்தில் மற்றொரு சர்க்கரை ஆலையும் செயல்பட்டு வந்தன.
இந்த ஆலைகளில் தஞ்சாவூர் அண்ணா சர்க்கரை ஆலை மட்டும் நாளொன்றுக்கு 2,500டன் கரும்பு அரைக்கும் திறன் கொண்டது. கடந்த 2016-17 ஆம் ஆண்டில் 2.85 மெட்ரிக் டன் அரவை செய்த இந்த ஆலையின் திறன் 2017-18ஆம் ஆண்டில் 2.43 லட்சமாக குறைந்துஇருக்கிறது. சர்க்கரை உற்பத்தியும் 2.19 லட்சம் குவிண்டாலிலிருந்து 1.86 லட்சமாக குறைந்து விட்டதால் ரூ.1,306.90 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் ஒட்டு மொத்த இழப்பு அந்த ஆண்டில் ரூ. 1,483.90 லட்சமாக அதிகரித்தது.பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் நாளொன்றுக்கு 3000 டன் கரும்பு அரவை செய்து வந்த தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் துணை நிறுவனமான ஜவகர்லால் நேரு சக்கரை ஆலை 2016 -17 ஆம் ஆண்டில், 2.40 மெட்ரிக் டன் மட்டுமே அரவை செய்தது. அடுத்தஆண்டில் 1.97 ஆக அரவைத் திறன் குறைந்தது.
அந்த ஆண்டு சர்க்கரை உற்பத்தியும் குறைந்ததால் ரூ. 2,735.37 லட்சம் கோடி இழப்பைச் சந்தித்தது.நாளொன்றுக்கு 1,750 டன் கரும்பு அரவை திறன் கொண்ட மதுரை சர்க்கரை ஆலைக்கு போதுமான கரும்பு வரத்து இல்லாததால் 2002-03 ஆம் ஆண்டு முதல் அரவையை நிறுத்தி வைத்துள்ளதாக நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்ட 2018 மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டுக்கான தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் செயல்பாடுகள் குறித்த அரசின் ஆய்வறிக்கை கூறுகிறது.
செயல்பாட்டில் இல்லாத மறைமலைநகர் சர்க்கரை ஆலையின் இயந்திரம் மற்றும் பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலையின் சொத்துக்கள் புத்தக மதிப்பை விட, பெறக்கூடியவிலை அதிகமாக உள்ளது. எனவே நிர்வாகம் இந்த சொத்துக்களை நிகர சொத்து மதிப்பில் மதிப்பீடு செய்துள்ளது என இயக்குநர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.அதேநேரம், மறைமலை நகர் சர்க்கரை ஆலை இயந்திரத் தொழில் கூடத்தின் சொத்துக்கள் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கும், அங்கிருந்த இரண்டு லேத்துகளில் ஒன்று சகோதர கூட்டுறவு சர்க்கரை (ஆம்பூர்)ஆலைக்கும் விற்கப்பட்டது. மதுரை சர்க்கரை ஆலையின் சொத்துக் களும் லாப அடிப்படையிலேயே விற்பனை செய்யப் பட்டது என்றும் இயக்குநர்கள் தரப்பு தெரி வித்துள்ளது.
அதே சமயம், சர்க்கரை கழகத்தின் 43-ஆவது ஆண்டு அறிக்கையும் அத்துடன் 31.3.18 ஆம் ஆண்டுக்கான தனி லாப-இழப்பு கணக்கு மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட லாப - இழப்பு கணக்குகள் மீதான தணிக்கையாளரின் அறிக்கை நேர்மாறாக உள்ளது.மதுரை சர்க்கரை ஆலையை இயக்கு வதற்கான சாத்தியக்கூறுகள் ஏதும் இல்லை என்பதால் இந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான முன் முடிவுகள் தமிழக அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளது. அனைத்து இயந்திர தளவாடங்களும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீட்டாளர்களின் மதிப்பீடும் இறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆலை வளாகத்தில் இருக்கும் 55.80 ஏக்கர் நிலம் மற்றும் குல்லாலன் குண்டு கிராமத்தில் உள்ள 4.10 ஏக்கர் நிலத்தையும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வாங்கிக் கொள்ள விருப்பம் தெரிவித்து உள்ளது. இந்த ஆலையின் இயந்திர தளவாடச் சாமான்களையும், நிலங்களையும் அரசின் அனுமதி பெற்ற பின்னர் விற்பனை செய்ய இருப்பதும் தணிக்கையில் அம்பலப்பட்டுள்ளது.ஆனால், காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலைநகரில் செயல்பட்டு வந்த சர்க்கரை இயந்திரதொழிற்கூடம் மற்றும் மதுரை சர்க்கரை ஆலை யின் செயல்பாடுகளை 10 ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தப்பட்டு உபயோகத்தில் இல்லாத சொத்துக்கள் விற்பனைக்காக தனியாக எடுத்து வைத்துள்ளனர்.
அந்தப் பொருட்கள் கணக்கீடு மரபுகள்படி நிகர ஈட்டக் கூடிய மதிப்பு அல்லது நிகர புத்தகமதிப்பு, இதில் எது குறைவோ அந்த மதிப்பில்மதிப்பீடு செய்வதற்கு மாறாக, புத்தக மதிப்பில் மதிப்பீடு செய்ததையும் வெளிக்கொண்டு வந்துள்ளது தணிக்கைக் குழு.அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் அலுவலர்கள், பணியாளர்கள், கரும்பு விவசாயிகளு டன் இணைந்து செய்த மோசடியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில் அலுவலர்கள், பணியாளர்கள் 8 பேர் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பணியாளர்கள் 29 பேருக்கு வருடாந்திர ஊதிய உயர்வு 1 முதல் 3 ஆண்டுகள் வரை நிறுத்தம் செய்யும் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 41 அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் 86 கரும்பு விவசாயிகளிடம் விசாரணைநடத்திய காவல்துறையினர் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.