கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் வெகு ஜன வசூல் இயக்கத்தைத் திட்டமிடும் கட்சியின் கிளைச் செயலாளர்கள் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. ஒன்றி யச் செயலாளர் தோழர் எம்.பி. தண்ட பாணி ஒவ்வோர் கிளைக்கும் எவ்வளவு நிதி இலக்கு என்பதையும் கடந்த ஆண்டு அனுபவங்களையும் உற்சாக மாகச் சொல்லி முடித்தார். அவர் பேசி முடித்ததும் குறிஞ்சிப் பாடி ரயிலடி கிளைச் செயலாளர் அசோக் எங்கள் கிளையின் வசூலை நாளை ஒரே நாளில் முடித்துவிடுவோம் என்றார். குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு நான் பொறுப்பேற்றுச் செல்லும் முதல் கூட்டம் அது. எனக்கு அருகில் முன்னால் மாவட்டச் செயலாளர் தோழர் டி.ஆறு முகமும், அக்கிளையின் பொறுப்பாளர் தோழர் வழக்கறிஞர் ராஜேஷும் அமர்ந்து இருந்தனர். அவர்களைப் பார்த்து என்ன என்பதுபோல் புருவங்க ளால் கேள்வி கேட்டேன். தோழர் ராஜேஷ் சொன்னார் “தோழர் நாளை அங்குதானே வருகிறீர்கள் நேரில் பாருங்கள்” என்றார். வசூல் தினத்தன்று காலை 7.30 மணிக்குத் தோழர்கள் தயாராக இருந்த னர். பல ஆண்டுகள் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தின் செயலாளராக இருந்த, சிறுபான்மை நலக்குழு பொறுப்பாள ரான தோழர் எஸ்.எஸ்.ராஜ் வீட்டிலி ருந்து புறப்பட்டு ஒவ்வொரு வீடாகச் சென்றோம். சென்ற வீடுகள் எல்லாம் நம்மிடம் பேச ஒரு செய்தியுடன் மக்கள் இருந்தது ஆச்சரியமாக இருந்தது.
ஒவ்வோர் வீட்டில் உள்ள மக்களின் பெயர்களைச் சொல்லி தோழர்கள் அழைத்ததும், அவர்கள் உரிமையுடன் “தோழர் மூன்று நாளாக பொது குழா யில் தண்ணீர் வரவில்லை, அடிக்கடி மின் கம்பத்தில் பீஸ் போகிறது” எனத் துவங்கி பல்வேறு செய்திகளை பகிர்ந்து கொண்டனர். அதில் அதிகம் அவர்கள் பேசியது. கிறிஸ்துமஸ் கேக் குறித்துத் தான். எந்த வீட்டிற்கு சென்றாலும் “தோழர் கிறிஸ்துமஸ் கேக் வந்தது நன்றி!” என்றனர். ஒரு அம்மா சொன்னார் “வச்சலா தொலைபேசி செய்து என் பங்கு கேக்கை மாமா கொடுத்தாரா என விசா ரித்தாள்”. அதைச் சொல்லும் போது அவர் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. காரணம் அவரது மகள் திருமணமாகிச் சென்று ஆறு ஆண்டுகள் ஆகிறது. ஆனால் அவள் சிறு பெண்ணாக இருக்கும் போது அவளுக்கென ஒரு துண்டு கேக் கொடுக்கப்படும். அது அவளின் உரிமை. திருமணம் ஆகிச் சென்றும் அவள் பங்கை மறக்காமல் கொடுப்பது அவளின் தாய் வீட்டுச் சொந்தம் தொடர்வதாக அவள் உணர் வதுதான். ஆம். ஆச்சரியமான தகவல் என்ன வென்றால், கடந்த 30 ஆண்டுகளாக அப்பகுதியில் மத வேறுபாடு இல்லா மல் அனைத்து வீடுகளுக்கும் கிறிஸ்து மஸ் கேக் வழங்குவதை அன்பு தோழர் எஸ்.எஸ்.ராஜ் ஒரு பழக்கமாக வைத்துள் ளார். அது மக்களுடன் அவருக்கு மகத்தான உறவை வளர்த்துள்ளது. நாங்கள் காலை மற்றும் மாலை 4.30 மணி நேரம் அக்கிளைக்கு உட்பட்ட சுமார் 150 வீடுகளையும், வழியிலிருந்த சில கடைகளையும் பார்த்து வெகுஜன வசூல் செய்து மாலை உண்டியலை எண்ணினோம். அக்கிளையின் இலக்கு 15,000 ரூபாய். மொத்தம் வசூலானது 15,510 ரூபாய். மக்களுடன் உயிர்ப்போடு தொடர்பில் இருப்பது என்ன என்பதை அந்த தோழர்கள் கற்றறிந்து எனக்குக் கற்றுக்கொடுத்தனர். பல வீடுகளில் அகில இந்திய மாநாட்டுத் துண்டறிக்கை கொடுத்துப் பேசத் துவங்கியதும், விழுப்புரம் மாநில மாநாட்டுக்கு ஏன் வசூல் செய்ய வரவில்லை என்றனர். ஆண்டுக்கு ஒருமுறைதான் வரு வோம். இனி அடுத்த ஆண்டுதான் என நமது தோழர்கள் சொல்லி புன்னகை தவழும் முகத்துடன் அடுத்த வீட்டை நோக்கி நடந்தனர். அவர்கள் கழுத்தில் மாட்டி இருந்த கட்சியின் சின்னம் அவர்க ளுடன் அசைந்தாடிச் சென்றது.