போராட்டங்களுக்கு வழிகாட்டும் சின்னியம்பாளையம் வீர வரலாறு!
2026ஆம் ஆண்டை வர வேற்ற புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோவையின் அந்த பெருவணிக வளா கத்தில் உற்சாகமாக தொடங்கின. ஆயிரக்கணக்கான இளைஞர்களும் இளம்பெண் களும் நள்ளிரவு வரை ஆடிப்பாடி மகிழ்ந்தனர். நவதாராளமயப் பொரு ளாதாரச் சூழல் இத்தகைய நுகர்வுக் கலாச்சாரக் கொண்டாட்டங்களை எப்போதும் ஊக்குவிக்கின்றது. கோவையின் உணவு விடுதிகளிலும் வணிக வளாகங்களிலும் வார இறுதி கொண்டாட்டங்கள் இன்று சாதா ரண நிகழ்வுகளாகிவிட்டன. இப்போ தைய பணிச்சூழல் உருவாக்கி வைத் திருக்கும் நெருக்கடிகள், பறிக்கப் பட்ட உரிமைகள் ஆகிய எதார்த்தச் சூட்டைப் பணியாளர்கள் உணரவிடா மல் அவர்களைத் திசைதிருப்ப முத லாளித்துவம் இத்தகைய கொண்டாட் டங்களை ஒரு வடிகாலாகப் பயன் படுத்துகிறது. அப்படி புத்தாண்டு கொண்டாட் டத்திற்காக மக்கள் கூடிக் கலைந்த ஒரு வணிக வளாகம், சரியாக 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கம்பீரமான பஞ்சாலையாக இருந்தது. தங்களது உரிமைகளுக்காகத் தொழி லாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி உரிமைகளை வென்றெடுத்த ஆலை அது. 90-களின் இறுதியில் அந்த ஆலை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டபோது கூட, தொழிலாளர்கள் வீதியிலும் நீதிமன்றத்திலும் போராடித் தங்களுக்கான நீதியைப் பெற்றனர். நள்ளிரவுக்குப் பிறகு அந்த வளாகத்தில் இருந்து வெளியேறிய பல இளைஞர்களுக்கும், அந்த இடத்தின் பின்னணியில் இருக்கும் இத்தகைய போராட்ட வரலாறு தெரிந்திருக்க வாய்ப்புக் குறைவு. கோவைப் பஞ்சாலைகளின் பெருக்கமும் சுரண்டலும் 1890-களில் கோவைக்கு பஞ்சாலைத் தொழில் அறிமுகமானது. அதனைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் ஆலைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. முதல் உலகப்போருக்குப் பிறகு, நூற்றுக் கணக்கான பஞ்சாலைகளைக் கொண்ட தொழில் நகரமாக கோவை வளர்ந்தது. அன்றைய கோவை மாநகரைச் சுற்றியிருந்த கிராமங் களில், புஞ்சை நிலங்களில் இயற்கை யோடு போராடிக் கொண்டிருந்த விவசாயிகள் பலரும் பிழைப்பு தேடித் தொழிலாளிகளாக மாறினர். குறைந்த கூலிக்கு ஆட்கள் கிடைத்ததும், மூலப்பொருளான பருத்தி விளைச்சல் அதிகமாக இருந்ததும் கோவை ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’ ஆக உருவெடுக்கக் காரணமாயின. ஆரம்ப நாட்களில் வேலை நேரம் என்பது கைரேகை பார்ப்பதை அடிப்படையாகக் கொண்டிருந்தது. கைரேகை தெரியத் தொடங்கும் அதி காலையில் உள்ளே சென்றால், ரேகை மறையும் மாலைப் பொழுதில்தான் வெளியே வர வேண்டும். வேலை யில் சுணக்கம் தெரிந்தால் முத லாளிகளின் கைக்கூலிகளான கங்காணிகளிடமிருந்து சாட்டை வார் அடி கிடைக்கும். 14 மணிநேரக் கடும் உழைப்பு, ஆனால் ஊதியமோ மிகச் சொற்பம். சங்கத்தின் தோற்றமும் சட்டப்போராட்டமும் இத்தகைய அடக்குமுறைக்கு எதிராகத்தான் 1926-இல் வ.உ.சி உள்ளிட்டோர் முன்னெடுப்பில் ‘கோவை தொழிலாளர் சங்கம்’ உருவானது. ஆங்கிலேய அரசின் கடும் எதிர்ப்பால் சங்கப் பணிகள் முடங்கியபோதும், விடாமுயற்சியால் 1936-இல் ‘கோவை மில் தொழிலாளர் சங்கம்’ மீண்டும் உருப்பெற்று 1938-இல் பதிவு செய்யப்பட்டது. காளீஸ்வரா, ஸ்டேன்ஸ், சோமசுந்தரா மில்களில் வேலை நிறுத்தங்கள் வெடித்தன. 1944-இல் லட்சுமி மில் தொழி லாளர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்கப் போராட்டம் தொடங்கியது. பணிச்சுமை, கூடுதல் வேலை நேரம் மற்றும் அநியாய வேலை நீக்கத்திற்கு எதிராக கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் ஜீவா உள்ளிட்டோர் வழிநடத்திய இந்தப் போராட்டம் நிர்வாகத்தைப் பணிய வைத்தது. தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றது. தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையை ஆய்வு செய்ய அன்றைய சென்னை மாகாண அரசு நீதிபதி வெங்கட்ராமண்ணா குழுவை அமைத்தது. முதலாளிகள் தரப்பு வழக்கறிஞர்கள் சம்பள உயர்வு வழங்க முடியாது என வாதிட்டபோது, தொழிலாளர் வர்க்கத்தின் சார்பில் அன்றைய தொழிற்சங்கத் தலைவர் தோழர் பி. ராமமூர்த்தி அவர்கள் ஆஜ ராகிப் புள்ளிவிவரங்களால் பதிலடி கொடுத்தார். “ஆங்கிலேயச் சிறை களில் உள்ள கைதிகளுக்கு வழங்கப் படும் தினசரி உணவுப்படியை விடக் குறைவாகத் தொழிலாளர்களுக்குச் சம்பளம் வழங்கப்படுகிறது” என்றும், “இங்கிலாந்து பஞ்சாலைகளை விடக் கோவை முதலாளிகள் பலமடங்கு லாபம் ஈட்டுகின்றனர்” என்றும் அவர் நிரூபித்தார். இதன் விளைவாக, சம்பள உயர்வு உள்ளிட்ட ஆறு அம்சக் கோரிக்கைகளை ஏற்று நீதிபதி உத்தரவிட்டார். பெண் தொழிலாளர்களின் போராட்டமும் சின்னியம்பாளையம் தியாகமும் தொழிற்சங்கம் வளர்ந்தபோது, ஆலைகளில் பணியாற்றிய பெண்களும் பெருமளவில் அணி திரட்டப்பட்டனர். சம வேலைக்குச் சம ஊதியம், பிரசவ கால விடுப்பு, பாலியல் சீண்டல்களுக்கு எதிரான பாதுகாப்பு ஆகிய கோரிக்கைகளுக்காகப் பெண்கள் சங்க நடவடிக்கைகளில் துடிப்புடன் பங்கேற்றனர். இதனைச் சகித்துக்கொள்ள முடியாத முத லாளிகள், அடியாட்களை ஏவி வன்முறையில் ஈடுபட்டனர். கோவை ரங்கவிலாஸ் மில்லில் இத்தகைய வன்முறைகளை ஏவ ‘பொன்னான்’ என்பவன் தலைமை யில் ஒரு அடியாள் கும்பல் செயல் பட்டது. 1944 டிசம்பரில், தொழிற்சங்க நிர்வாகிகள் வெங்கடாசலம், ராமையன், ரங்கண்ணன் மற்றும் சின்னையன் ஆகியோரை அந்த அடி யாள் கும்பல் தாக்கியது. தற்காப்புக் காகத் தொழிலாளர்கள் திருப்பித் தாக்கி யதில் அடிபட்ட பொன்னான் உயிரிழந் தான். இது திட்டமிட்ட கொலை என்று வழக்கு பதியப்பட்டு நால்வருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. லண்டன் பிரிவியூ கவுன்சில் வரை மேல்முறையீடு செய்யப்பட்டும், 1946 ஜனவரி 8 அன்று அவர்கள் தூக்கிலிடப்பட்டனர். “வர்க்க ஒற்று மைக்கு உதாரணமாக எங்களை ஒரே குழியில் அடக்கம் செய்ய வேண்டும்” என்ற அவர்களின் இறுதி விருப்பப்படியே, பல்லாயிரக்கணக் கான தொழிலாளர்களின் கண்ணீர் அஞ்சலியோடு சின்னியம்பாளை யத்தில் அவர்களது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இன்று அந்தத் தியாகி களின் 80-ஆவது ஆண்டு வீர வணக்க நாள். இன்றைய சூழலும் சவால்களும் 90-களின் தாராளமயமாக்கல் கொள்கைகள் கோவையின் பஞ்சா லைத் தொழிலைச் சிதறடித்தன. இன்று ‘கேம்ப் கூலி’, ‘சுமங்கலித் திட்டம்’ என்ற பெயர்களில் பெரும் சுரண்டல் நிகழ்கிறது. மத்திய அரசின் தேசியப் பஞ்சாலைக் கழக (NTC) ஆலைகள் கொரோனா காலத்திற்குப் பிறகு இன்றுவரை மூடிக் கிடக்கின்றன. பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தொகுதியிலேயே மூன்று ஆலைகள் முடங்கிக் கிடக் கின்றன. மறுபுறம், தகவல் தொழில்நுட்பத் துறை, கட்டுமானம் மற்றும் சேவைத் துறைகளில் லட்சக்கணக்கான தொழி லாளர்கள் கடும் உழைப்புச் சுரண்ட லுக்கு ஆளாகி வருகின்றனர். சுதந்திரத்திற்கு முன்பு போராடிப் பெற்ற 44 தொழிலாளர் சட்டங்களை, இன்று பாஜக அரசு 4 தொகுப்புகளாகத் திருத்தி உரிமைகளைப் பறிக்கத் துடிக்கிறது. எந்தச் சட்டப்பூர்வ உரிமைகளும் இல்லாத காலத்திலேயே, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடி உரிமைகளை வென்றெடுத்த வரலாறு இந்தியத் தொழிலாளி வர்க்கத்திற்கு உண்டு. அந்த நூற்றாண்டு கால அனுபவத்தோடு இன்று பறிக்கப்படும் உரிமைகளுக்காகச் செங்கொடி இயக்கம் களத்தில் நிற்கிறது. எத்த கைய அடக்குமுறை வந்தாலும் தொழி லாளி வர்க்கமே இறுதியில் வெல்லும். அந்தப் போராட்டக் களத்திற்குச் சின்னியம்பாளையம் தியாகிகளின் வரலாறு என்றும் உத்வேகம் அளிக்கும். தியாகிகளுக்கு வீரவணக்கம்!
