சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்குக! மாநகராட்சிக்கு சிஐடியு வலியுறுத்தல்
சென்னை, ஜன.12 - போரூர் ஏரி அருகே உள்ள சாலையோர மீன் கடை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டுமென்று சிஐடியு வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலர் புரு ஷோத்தமனிடம், சிஐடியு மதுரவாயல் பகுதி ஒருங்கிணைப்பாளர் வி.தாமஸ் நேரில் மனு அளித்து பேசினார். அந்த மனு வில், 11வது மண்டலம், 150வது வார்டு போரூர் ஏரி எதிரில் பூந்தமல்லி ட்ரங்க் சாலையில் சாலையோரக் கடைகள் உள்ளன. 60க்கும் அதிகமான மீன் வியாபாரிகள் உள்ளிட்ட வியாபாரிகள் கடந்த 40 ஆண்டுகளாக வியா பாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டை (பழைய அட்டை) உள்ளது. புதிய ஸ்மார்ட் அட்டை கேட்டு மாநகராட்சி ஏற்பாடு செய்த முகாம்க ளில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பித்தனர். ஆனால் அடையாள அட்டை கிடைக்கவில்லை. இந்நிலையில் ஆறு மாதத்திற்கு முன்பும் விண்ணப்பித்தும் கிடைக்காமல் உள்ளது. இவர்களுக்கு உடனடியாக புதிய ஸ்மார்ட் அட்டை வழங்க வேண்டும். மேலும், சாலையோர வியாபாரிக ளுக்கான உரிமம் வழங்குவதோடு, வார்டு அளவில் முகாம் நடத்தி வங்கி கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வியாபாரம் செய்யும் இடம் அருகே கழிப்பிட வசதி ஏற்படுத்த தர வேண்டும். குப்பை தொட்டி பூந்தமல்லி ட்ரங்க் சாலையில் ஒரு பகுதியில் மெட்ரோ ரயில் பணிகளும், மறுபக்கத்தில் பத்துக்கும் மேற்பட்ட குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. மீன் வியாபாரிகள் வியாபாரம் செய்யும் இடம் அருகே இந்தக் குப்பை தொட்டி உள்ள தால் வியாபாரிகள் மட்டுமின்றி வாகன ஓட்டிகளும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, குப்பை தொட்டியை விரைந்து அகற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
